பூமி, வாசனைமிக்கதொரு சூழல் இயக்கம்! இயற்கை படைத்த அனைத்து ஜீவன்களும் ஏதாவதொரு தனித்துவமான வாசனையை இந்தப் பூவுலகினுள் வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கின்றன. அதிலும் சில தாவர ஜீவன்களின் வாசம், நம்மை மெய் மறக்கச் செய்யும் இயல்புடையது.
“என்னை லேசாகக் கசக்கிய பின், உங்கள் விரல்களை முகர்ந்து பாருங்கள். உலகில் உள்ள எந்தவொரு செயற்கை வாசனைத் திரவியமும் கொடுக்காத அற்புதமான வாசனையை உங்கள் விரல் நுனிகளில் நுகரலாம்!...” என நமது நாசித் துளைகளுக்குச் சவால்விடும் மூலிகை திருநீற்றுப்பச்சிலை.
பெயர்க் காரணம்: உருத்திரச்சடை, பச்சை சப்ஜா, திருநீற்றுப்பச்சை, விபூதிபச்சிலை, பச்சபத்திரி, திருநீத்துப்பத்திரி போன்ற வேறு பெயர்கள் இதற்கு உள்ளன. முற்காலங்களில் சில பகுதிகளில், திருநீறு தயாரிப்பில் இதன் சாம்பல் சேர்க்கப்பட்டதால் ‘திருநீற்றுப்’பச்சிலை எனும் பெயர் உருவாகியிருக்கலாம்.
அடையாளம்: தாவர செல்கள் தோறும் வாசனையை அழுத்தமாய்ப் பொதிந்து வைத்திருக்கும் சிறுசெடி வகை. அழகான வெள்ளை நிற மலர்களைக் கொண்டிருக்கும். ‘ஆஸிமம் பேசிலிகம்’ (Ocimum basilicum) எனும் தாவரவியல் பெயர்கொண்ட திருநீற்றுப் பச்சிலை, லாமியேசியே (Lamiaceae) குடும்பத்தைச் சேர்ந்தது. லினாலூல் (Linalool), யுஜெனால் (Eugenol), ஜெரானியால் (Geraniol) ஆகிய தாவர வேதிப் பொருட்கள் இதில் இருக்கின்றன.
உணவாக: இனிப்புச் சுவையுடைய இதன் விதைகள், ‘சப்ஜா’ விதைகள் என்று பரவலாக அழைக்கப்படுகின்றன. இதன் விதைகளைச் சுமார் இரண்டு மணி நேரம் நீரில் ஊறவைத்து, எலுமிச்சைச் சாறு பிழிந்து சுவைமிக்க மருத்துவ பானத்தைத் தயாரிக்கலாம். வயிற்று வலி, கண் எரிச்சல், சிறுநீர் அடைப்பு, சிறுநீர் எரிச்சல் போன்ற அறிகுறிகள் இருக்கும்போது, பனங்கற்கண்டு சேர்த்து சப்ஜா பானத்தைப் பருக, சுவையோடு விரைந்த நிவாரணமும் கிடைக்கும். மலத்தை வெளித்தள்ளும் செய்கை இந்தப் பானத்தின் ‘அசையும் சொத்து!’
இதன் இலைகளிலிருந்து சாறு எடுத்துத் தேனுடன் கலந்து சாப்பிட, கப நோய்கள் மறைவது மட்டுமன்றி செரிமானக் கோளாறுகள் சாந்தமடையும். சமையலில் சிறிதளவு இதன் சாற்றைச் சேர்த்து வர, வயிற்றிலுள்ள புழுக்கள் தெறித்து ஓடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதன் இலைகளை மற்ற கீரை வகைகளோடு சேர்த்துச் சமைக்க, உங்கள் கீரை மசியலுக்கு விசிறிகள் அதிகரிப்பார்கள்.
‘வாந்தி சுரமருசி நில்லா உருத்திரச்சடைக்கே உரை’ எனும் திருநீற்றுப்பச்சிலைக்கு உரிய அகத்தியர் குணவாகடப் பாடல், சுரம், வாந்தி, கப நோய்கள் போன்றவற்றுக்கு இதை முதன்மை மருந்தாகப் பயன்படுத்தலாம் என்பதைத் தெரிவிக்கிறது.
கார்ப்புச் சுவையுடன் கூடிய இதன் இலைகளை உலரச் செய்து தேநீர் இலைகள் போல காய்ச்சிப் பருகலாம். சுரம் இருக்கும்போது, முழு தாவரத்தையும் நீரிலிட்டுக் கொதிக்கவைத்துப் பருக, வியர்வை வெளியேறி உடல் புத்துணர்வு அடைவதை உணர முடியும்.
மருந்தாக: இதற்கு இருக்கும் எதிர்-ஆக்ஸிகரணி செயல்பாடு குறித்த நிறைய ஆய்வுகள் இருக்கின்றன. வாத நோய்களுக்கான தீர்வாக இதிலிருந்து எடுக்கப்படும் வேதிப்பொருள் அமையும் என்கிறது ஓர் ஆய்வு. புற்றுநோய் செல்கள் வேகமாகப் பரவுவதைத் தடுக்கும் ஆற்றல் இதற்கு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் வாசனையின் மூலம் பரவும் மருத்துவக் கூறுகள், நமது சுவாசப் பாதையை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும். இதன் விதைகளுக்கு வலி நிவாரணி செய்கையும் உண்டு. பிரசவத்துக்குப்பின் ஏற்படும் வலியைக் கட்டுப்படுத்த, இதன் விதைகள் மருந்தாகப் பயன்படுகின்றன.
வீட்டு மருந்தாக: தலைவலி தடாலடியாகக் குணமாக, வலி நிவாரணி மாத்திரைகளைத் தேடுபவர்களுக்கான மாற்று திருநீற்றுப் பச்சிலை. இதன் இலைகளைப் பிரயத்தனப்பட்டு அரைக்க அவசியமில்லை. லேசாகக் கசக்கி முகர்ந்து பார்த்தால் போதும், தலைவலி மறையும். இதன் இலைச் சாற்றுடன் வசம்பைச் சேர்த்தரைத்து, முகப்பருக்களின் மீது தடவி வர, பவுர்ணமி சந்திரனாய் முகம் பிரகாசிக்கும்.
இதன் இலைகளையும் விதைகளையும் குளிக்கும் நீரில் அரை மணி நேரத்துக்கு முன்பே ஊறவைத்து, வாசனைமிக்க மூலிகைக் குளியலை மேற்கொள்ளலாம். சோப்பு, ஷாம்புகளின் துணையில்லாமலே உடலைத் தூய்மையடையச் செய்யும் குளியல் உத்தி இது.
வாய்க் கசப்பு இருக்கும்போது, இதன் இலை ஊறிய குடிநீரைக் கொண்டு வாய்கொப்பளிக்க, கசப்பு மறைந்து வாய் மணக்கும். இதன் இலைகளைக் கசக்கி உடலில் ஆங்காங்கே பூசிக்கொள்ள, கொசுக்கள் நம்மை நெருங்க அச்சப்படும். தேமல், படை போன்ற தோல் நோய்களுக்கு, இதன் இலைகளை வெளிப்பிரயோகமாகத் தொடர்ந்து பயன்படுத்த நல்ல பலனைக் கொடுக்கும். கொப்புளங்களின் மீது இதன் இலையை அரைத்துத் தடவ, அவற்றின் வீரியம் குறையும்.
மந்திரமாவது மட்டுமல்ல… மருந்தாவதும் ‘திருநீறு..!’
கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com