என் அம்மாவின் வயது 58. அவர் தையல் தொழில் செய்து வருகிறார். அவருக்குக் கடந்த 2 வருடங்களாக வயிற்று உபாதைகள் இருக்கின்றன. வயிற்றின் வலதுபுறம் தொடங்கி வலது கால் வரை வலியும் குடைச்சலும் இருக்கிறது. சாப்பிட்டவுடன் நடந்தால் அதிகமாக மூச்சு வாங்குகிறது.
அவ்வப்போது வயிறு வீங்கிப் பெரிதாக இருக்கிறது. வயிறு பாரமாகி விடுவதால் மிகவும் சிரமப்படுகிறார். பல அலோபதி மருத்துவர்களிடம் காண்பித்தோம், ஆனால், பெரிதாக ஒன்றும் பிரச்சினை இல்லை என்றே கூறினர்.
சமீபத்தில் ஒரு மருத்துவர் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்துவிட்டு, கல்லீரல் வீக்கம் இருப்பதாகவும், வயிறு மற்றும் குடல் நிபுணரிடம் ஆலோசனை பெறுமாறும் பரிந்துரைத்தார். நெடுநாட்களாக வயிற்றில் அல்சர் இருப்பதால் அலோபதி மருந்துகளை எடுத்துக்கொண்டதால் புண்ணாகி விட்டது. கல்லீரல் வீக்கம்என்பது என்ன? அதற்கு எப்படிப்பட்ட மருத்துவம் செய்துகொள்ள வேண்டும்?
இந்தப் பிரச்சினைகள் கல்லீரல் வீக்கத்தினால்தான் ஏற்படுகின்றன என்பதை எப்படி உறுதி செய்துகொள்வது? அதற்கு என்ன வகை மருந்துகள் உட்கொள்ள வேண்டும்? உணவு கட்டுப்பாடுகள் மூலமாகவே சரி செய்துகொள்ள இயலுமா?
- விக்னேஷ்வரன், மின்னஞ்சல்.
கல்லீரல் வீக்கத்தை Hepatomegaly என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுகிறார்கள். சில தொற்று நோய்கள், நுண்கிருமிகளின் தாக்குதல், கட்டிகள், ரத்தசோகை, இதயக் கோளாறு போன்றவற்றால் கல்லீரல் வீக்கமடையலாம். இவர்களுக்கு வலது பக்க வயிற்று வலி, அசதி, மஞ்சள் காமாலை உருவாகலாம். கல்லீரல் சுருங்கி இறுதி நிலையான cirrhosis-ம் இப்படி வரலாம்.
கிருமிகளால் உருவாகும் மஞ்சள் காமாலைகளான Hepatitis A, Hepatitis B, Hepatitis C, mononucleosis போன்றவற்றின் மூலமும் இப்படி ஆகலாம். மது உட்கொள்பவர்களுக்கு இந்தப் பிரச்சினை வருவதற்கான வாய்ப்பு அதிகம்.
கல்லீரல் சார்ந்த எல்லா நோய்களையும் ஆயுர்வேதம் காமாலை என்று அழைக்கிறது. நவீன மருத்துவத்துக்கு ஒப்பாக ஆயுர்வேத மருத்துவத்தில் காமாலையின் பிரிவும் சொல்லப்பட்டுள்ளது. கோஷ்ட கத காமாலை என்று சொல்லக்கூடிய Hepato Cellular Jaundice, Obstructive Jaundice என்ற பித்தம் குடலுக்கு வராமல் தடைபடுகிற நிலையையும், மற்ற நோய்களால் வருகிற காமாலையைப் பற்றியும் தனித்தனியாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
கல்லீரல் வீக்கத்துக்கு நோய்க் காரணத்தைத் துல்லியமாக அறிய வேண்டும். பித்தத்தைக் குறைக்கும் கசப்பான மூலிகைகளை முதலில் மருந்தாக்க வேண்டும். இதற்குச் சீந்தில், பொன் சீந்தில், கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி, ஆடாதோடை வேர், பேய்ப்புடல், கடுகுரோகிணி, மரமஞ்சள் போன்றவற்றைக் கஷாயம் வைத்துக் கொடுக்கலாம். பேதிக்கு மருந்து கொடுப்பதன் மூலம் பித்தம் நன்றாக வெளியேற்றப்படும்.
கல்லீரலை வலுப்படுத்தத் திராட்சை, திப்பிலியால் செய்யப்பட்ட திராக்ஷாதி ரசாயனம் என்கிற லேகியத்தைக் கொடுக்கலாம். நெல்லிக்காய் போட்டுக் காய்ச்சிய குடிநீர் குடிப்பதற்குச் சிறந்தது. வீட்டிலேயே கீழாநெல்லியைப் பறித்து வேர் நீக்கி அரைத்துக் காலை வெறும் வயிற்றில், புளிக்காத மோரில் 10 கிராம் கலந்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
ஆயுர்வேத முறையில் மருந்து சாப்பிட்டாலும் Ultra sonogram எடுத்துப் பித்தப் பையில் கட்டிகள், கற்கள் இருக்கின்றனவா என்பதையும் பார்க்க வேண்டும். கல்லீரல் எவ்வாறு செயல்படுகிறது என்பதை Liver function test மூலம் பார்க்க வேண்டும். HAV Igm, Anti HCV, HBsAg போன்ற பரிசோதனைகளையும் செய்ய வேண்டும். மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்கள் கொழுப்பு உள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும். சற்றுக் குணமாகிவரும் நிலையில் வெள்ளரிப் பிஞ்சு, இளநீர், செவ்விளநீர், புடலங்காய் கூட்டு போன்றவை நன்கு பலனளிக்கும்.
சீந்தில்
கைமருந்துகளாகக் கீழ்க்கண்ட மருந்துகளைப் பயன்படுத்தலாம்.
# கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி, மஞ்சள் ஆகியவற்றை மொத்தமாக 20 கிராம் பொடி செய்து கொள்ளவும். தினமும் காலை, மாலை இரு வேளையும் 3 கிராம் அளவில் சாப்பிட வேண்டும்.
# 50 கிராம் நெல்லி வற்றல், 50 கிராம் சீரகம் இரண்டையும் பொடியாக்கி, காலை மாலை இருவேளை என ஒரு வாரத்துக்குத் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.
# கரிசலாங்கண்ணி இலையைச் சுத்தம் செய்து வெயிலில் காயவைத்து, இடித்து, சலித்து வைத்துக்கொள்ள வேண்டும். இத்துடன் மேற்கண்ட இரண்டு தூள்களிலும் வகைக்கு 50 கிராம் எடுத்துக் கலந்து, ஒரு நாளைக்கு மூன்று வேளை, வேளைக்கு அரை தேக்கரண்டியளவு எடுத்து அரை டம்ளர் பசும்பாலில் கலந்து குடிக்க வேண்டும்.
கல்லீரல் பாதுகாப்பு
தவிர்க்க வேண்டிய உணவுகள்
# எண்ணெயில் வறுத்த, பொறித்த உணவு.
# கொழுப்பு அதிகம் நிறைந்த வெண்ணெய், பாலாடைக்கட்டி, நெய், அசைவ உணவு.
# டின்களில் அடைத்து விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட உணவு, சாக்லேட்கள், ஐஸ்கிரீம், கேக், தயிர், தேங்காய், ரசம், புளித்த உணவுகள்.
# கடலை மாவில் செய்யப்படும் வடை, போண்டா, பஜ்ஜி, சிப்ஸ், மிக்சர், தக்காளி சட்னி, பூரி கிழங்கு, பிற கோதுமை உணவுகள்.
# பச்சை மிளகாய், வாழைக்காய், உருளைக் கிழங்கு, கொத்தவரங்காய், சேப்பங் கிழங்கு, பாகற்காய். சேர்க்க வேண்டிய உணவுகள்
# மணத்தக்காளி, பொன்னாங்கண்ணி, முளைக்கீரை, தண்டுக்கீரை, வெந்தயக்கீரை, பருப்புக்கீரை.
# அவரைப் பிஞ்சு, முருங்கைப்பிஞ்சு, கத்திரிப் பிஞ்சு.
# முளைகட்டிய பயறுகள், வாழைப்பூ, வாழைத் தண்டு, கல்யாணப் பூசணி, வெண்டைக்காய், கோவக்காய், சுண்டைக் காய், முள்ளங்கி.
# கல்யாணப் பூசணியின் மேல் ஓடு மற்றும் உட்புறம் உள்ள பஞ்சை நீக்கி இடையில் உள்ள நுங்கு பாகத்தைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வேகவைத்துப் பிழிந்த ரசத்தில் 1 அவுன்ஸ் அளவு தினமும் 2 அல்லது 3 வேளை, சிறிதளவு கற்கண்டுத் தூள் கலந்து குடிக்கலாம். காமாலை நீங்கும். அத்துடன் சிறுநீர் தாராளமாகப் போகும்.
# பூவரசு இலைக் கொழுந்தை அரைத்து ஒரு எலுமிச்சம்பழ அளவு எடுத்து மோரில் கலந்து, தினமும் 3 வேளை சாப்பிட்டு வரவேண்டும். தினமும் காலை, மாலை வேளைகளில் இளநீர் குடித்துவர வேண்டும். இப்படி 7 நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும்.
உங்கள் மருத்துவ சந்தேகங்களுக்கு ஆலோசனை
பிரபல ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் எல். மகாதேவன், உங்கள் மருத்துவ சந்தேகங்களுக்குப் பதில் அளிக்கிறார். மருத்துவம், உடல்நலம், ஆரோக்கிய உணவு உள்ளிட்ட கேள்விகளைக் கீழ்க்கண்ட அஞ்சல் முகவரிக்கோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்புங்கள்.
மின்னஞ்சல்: nalamvaazha@thehindutamil.co.in
முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002