உங்களைப் பற்றி உங்களுக்கே தெரியாத பல தகவல்கள், மற்றவர்களுக்குத் தெரியும் என்பது உங்களுக்கு தெரியுமா?
இலவசமாகக் கிடைக்கிறது என்று பல செயலிகளை நம் போனில் தரவிறக்கம் செய்து வைத்துள்ளோம். செயலிகளை நிறுவும்போது அதைக் கேட்கும் அனைத்து விதமான தகவல்களையும் கொடுத்துவிடுகிறோம். இது சரியான நடைமுறையா?
இந்த வாரம் நாம் ஒரு குறிப்பிட்ட செயலி என்றில்லாமல் பொதுவாக நாம் பயன்படுத்தும் அனைத்து செயலிகளைப் பற்றிய சில அடிப்படை உண்மைகளைத் தெரிந்துகொள்வோம்.
அந்தரங்கத் தகவல்களே விலை!
நம் போனில் இருக்கும் செயலிகள் தொடர்ந்து நம்மைப் பற்றிய பல தகவல்களைச் சேகரித்து, அந்தச் செயலியை உருவாக்கிய நிறுவனங்களுக்குத் தொடர்ந்து அவற்றை அனுப்பிக்கொண்டே இருக்கின்றன.
உங்கள் நண்பர்களின் தொடர்பு எண்கள், உங்களின் விருப்பங்கள், உங்களின் நடத்தை எனப் பல தகவல்களை உங்களுக்கே தெரியாமல் அனுப்பிக்கொண்டேதான் இருக்கிறது. அவர்கள் ஒன்றும் இலவசமாக நமக்குச் செயலிகளைக் கொடுப்பதில்லை. அனைத்துக்கும் ஒரு விலை இருக்கிறது. இங்கு நாம் கொடுக்கும் விலை நம்மைப் பற்றிய அந்தரங்கத் தகவல்கள்.
வகை வகையான தகவல் திருட்டு
பொழுது போக்குக்காக, சமூக வலைதளத்துக்கு, ஒளிப்படங்கள், மின் கட்டணச் செயலிகள், வங்கி தொடர்பான செயலி, உணவு ஆர்டர் செய்ய, கால் டாக்ஸி ‘புக்’ செய்ய எனப் பலவிதமான பயன்பாடுகளுக்காக உங்கள் ஸ்மார்ட்போனில் பல செயலிகள் இருக்கும்.
மின் அஞ்சல் முதல் வங்கிக் கணக்குவரை நீங்கள் வைத்திருக்கும் ‘பாஸ்வேர்டு’, வங்கிக் கணக்கு எண், கடன் அட்டை எண் என பணப் பரிவர்த்தனை தொடர்பான பயனர் கணக்குத் தகவல்கள், உங்கள் ஆதார் எண் (எண் மாத்திரமல்ல, அதில் உங்களின் முகவரி, குடும்ப விவரம், கைரேகை போன்ற பயோ-மெட்ரிக் தகவல்கள் இருப்பதைப் புரிந்துகொள்ளுங்கள், அடுத்தவருக்கு நீங்கள் அனுப்பும் குறுஞ்செய்திகள், உங்களுக்கு வந்த, நீங்கள் மேற்கொண்ட கைப்பேசி அழைப்புகள் (யாருடன், எப்போது, எவ்வளவு நேரம் என்பது போன்ற தகவல்கள்), நீங்கள் தங்கியுள்ள இடம், ஒளிப்படங்கள், வீடியோக்கள், அலுவலகம் சார்ந்த அல்லது தனிப்பட்ட அச்சுக் கோப்புகள், வேண்டாமென்று நீங்கள் அழித்த தகவல்கள் போன்றவற்றை உங்களை அறியாமலேயே உங்கள் பாக்கெட்டிலிருந்து திருடுகின்றன செயலிகள்.
பெருகும் சைபர் குற்றங்கள்
அண்மைக் காலமாக மேற்கண்ட தகவல்களைத் திருடுவதன் மூலம், புதிதாகப் பல சைபர் குற்றங்கள் பெருகிவிட்டன. நிறுவனங்களும் உங்களைக் கட்டாயப்படுத்தி, உங்களிடமிருந்து ஒப்புதலை வாங்கி, தகவல்களைச் சேமித்து வைத்துக் கொள்கின்றன. ஆனால், நிறுவனங்களிடம் உங்கள் தகவல்கள் பாதுகாப்பாக இருக்குமா என்பது சந்தேகம்தான்.
இந்தப் பிரச்சினையிலிருந்து மீண்டுவர நமக்கு இருக்கும் ஒரே வழி, முடிந்த அளவு தேவையான செயலிகளை மாத்திரம் உங்கள் போனில் வைத்துக் கொள்வதுதான்.
எந்த மாதிரியான தகவல்களை எடுத்துக்கொள்வதற்கு நம் செயலிகளுக்கு நாம், அனுமதி வழங்கியிருக்கிறோம் என்பதைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள். எது தேவையோ அந்த அனுமதியை மாத்திரம் வைத்துக்கொண்டு, மற்ற ஆப்ஷன்களை ‘ஆஃப்’ செய்துவிடுங்கள்.
ஒருவேளை உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து தகவல்கள் திருடப்படுவதாக நீங்கள் உணர்ந்தால், முறையான பாதுகாப்பு நிபுணரைக் கலந்தாலோசித்து பிரச்சினைக்குத் தீர்வு காணுங்கள்.
கட்டுரையாளர், டிஜிட்டல் சமூக ஆய்வாளர்,
தொடர்புக்கு: Digitaldiet4all@gmail.com