பொதுச் சமூகத்தில் இருப்பவர்கள், இன்னும் எளிமையாக மாற்றுப் பாலினத்தவரின் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு அவர்களை அணுகுவதற்கு உதவும் வகையில், உடல் நலம் மற்றும் சட்ட உதவி குறித்த தகவல்களைப் பெறுவதற்காக http://www.vartagensex.org/reachout.php என்னும் இணையவழிச் சேவை, சமீபத்தில் பிரிட்டிஷ் கவுன்சலில் அறிமுகப்படுத்தப்பட்டது. கொல்கத்தாவில் செயல்படும் ‘வார்தா அறக்கட்டளை கிரிண்டர் ஃபார் ஈக்வாலட்டி’ மற்றும் ‘சாத்தி’ (SAATHII) அமைப்புகள் இணைந்து, இந்த இணையச் சேவையை வழங்குகின்றன.
பாலின மாற்றத்துக்கான சிகிச்சையை எங்கே பெறுவது, அந்த சிகிச்சையின்போது என்ன மாதிரியான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும், எந்த மருத்துவரை அணுகுவது என்பது போன்ற பல கேள்விகளுக்கு இந்தியா முழுவதும் இருக்கும் எல்.ஜி.பி.டி (LGBT - லெஸ்பியன், கே, பைசெக்ஸுவல், டிரான்ஸ்ஜெண்டர்) பிரமுகர்களாலேயே வழங்கப்படும் ஆலோசனைகள், அவர்களே பரிந்துரைத்த மருத்துவர்களின் விவரங்கள் போன்ற பல தகவல்களை இந்த வலைத்தளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம், என்றார் ‘வார்தா’ அமைப்பைச் சேர்ந்த பவன் தால்.
அதோடு மாற்றுப் பாலினத்த வருக்கு அவர்களின் குடும்பத்திலி ருக்கும் உரிமைகள் குறித்தும், வீட்டில் நடக்கும் வன்முறை, பிளாக் மெயில் போன்ற பிரச்சினைகள், வலுக் கட்டாயமாக நடக்கும் திருமணங்கள், தன்பாலின உறவில் நடக்கும் திருமணங்கள், சொத்து மாற்றுவதில் இருக்கும் சிக்கல்கள் போன்றவை குறித்த சட்ட ஆலோசனைகளையும் இந்த வலைத்தளத்தில் உள்ள சட்ட ஆலோசகர்களைத் தொடர்புகொண்டு பெறலாம்.
“இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்த ஒருவர் தங்களின் எந்த விதமான அடையாளத்தையும் தர வேண்டியது இல்லை. இதனால், இதுவரை தங்களின் பாலின அடையாளத்தைச் சமூகத்தில் வெளிப்படுத்தாதவர்களுக்கும் இந்த வலைத்தளம் பயனுள்ளதாக இருக்கும் என்றார் எல்.ஜி.பி.டி. தன்னார்வலர் பிருந்தா.
ஆலோசனைகளும் விழிப்புணர்வும்
“எல்.ஜி.பி.டி. நபர்களை ஒருங்கிணைக்கும் பணியைத்தான் நாங்கள் செய்கிறோம். நாங்களே எந்தச் சேவையையும் தருவதில்லை. அதனால் தனிப்பட்ட ஒருவரின் ஆதாரங்களை நாங்கள் கேட்க வேண்டிய அவசியமே இல்லை. 18 வயதுக்கு மேல் இருக்கும் எவரும் இதைப் பயன்படுத்தலாம். இந்த வலைத்தளத்தை மேம்படுத்த, பலரிட மிருந்தும் ஆலோசனைகளைக் கேட்டு வருகிறோம்” என்றார் பவன் தால்.
இதையொட்டி, டாக்டர் ஹேமா தரூர், வழக்கறிஞர் குழலி, திருநர் சமூகச் செயற்பாட்டாளர் ஷியாம் பாலசுப்ரமணியன், ‘ஓரினம்’ அமைப்பைச் சேர்ந்த ஃபெலிக்ஸ் சுகந்தன் ஆகியோர் உடல் நலம், மாற்றுப் பாலினத்தவருக்கு சிகிச்சை அளிப்பதில் ஒரு மருத்துவருக்கு என்னென்ன விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும், உறுப்பு மாற்று சிகிச்சைகளின்போது ஒரு நோயாளியின் கண்ணியத்தை மருத்துவர்கள் எப்படிக் காப்பாற்ற வேண்டும். இதுகுறித்த சட்ட ஆலோசனைகள் என்னென்ன, எனப் பல விஷயங்களும் விவாதிக்கப்பட்டன.
குறிப்பாக, தன்பால் உறவாளர்களை, மாற்றுப் பாலினத்தவரை மன நலப் பாதிப்பு உள்ளவர்களாகக் கருதக் கூடாது என்னும் உலக சுகாதார நிறுவனத்தின் அறிவிப்பைப் பரவலாக்குவதன் மூலம் சமூகத்தில் விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டியதன் அவசியம், கவனக் குறைவோடு செயல்படும் மருத்துவரிடமிருந்து நோயாளிக்குக் கிடைக்க வேண்டிய சட்டப்பூர்வமான பாதுகாப்பு போன்றவை குறித்தும் விவாதிக்கப்பட்டன.