நலம் வாழ

மருத்துவச் சேவையிலும் சமூக நீதி!

நா.எழிலன்

சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு எனப் பல துறைகளில் வட மாநிலங்களுக்கு முன்னுதாரண மாநிலமாக, முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. அதற்கான விதைகளை விதைத்தது கலைஞர் கருணாநிதிதான்!

கலைஞர், சுகாதாரத் துறையில் ஆற்றிய பணிகளைப் பற்றிப் பேசும்போது, வேறு எந்த மாநிலத்திலும் நிகழாத ஒரு அதிசயத்தை தமிழகத்தில் செய்திருக்கிறார். சமூக நீதியுடன் கூடிய மருத்துவச் சேவை என்பதுதான் அது!

மருத்துவப் படிப்பு, மருத்துவச் சேவை ஆகிய இரண்டிலும், தனது ஆட்சிக்காலத்தில், சமூக நீதியை விட்டுக்கொடுக்காதவராக இருந்தார் கலைஞர். பிற்படுத்தப்பட்டவர்களுக்கு, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு, தாழ்த்தப்பட்டவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தியவர், அருந்ததியர்கள், இஸ்லாமியர்கள் ஆகியோருக்கு உள் ஒதுக்கீட்டையும் அவர் பெற்றுக்கொடுத்தார்.

மண்ணின் மைந்தர்களுக்கு மருத்துவம்

இப்படி இட ஒதுக்கீட்டை விரிவுபடுத்தவும், அதிகப்படுத்தவும் அவருக்கு ஒரு காரணம் இருக்கிறது. மண்ணின் மைந்தர்கள் மருத்துவக் கல்வி பெற வேண்டும் என்பதே அது. அவரது கனவுக்கேற்ப, மண்ணின் மைந்தர்கள் மருத்துவர்களாக நடை போட்டார்கள். அவர்களில் பெரும்பான்மையோர், பணம் சம்பாதிப்பதற்காக வெளிநாடுகளுக்குச் செல்லவில்லை. தமிழகத்திலிருக்கும் அரசு மருத்துவமனைகளில் சேவை புரிந்தார்கள்.

தமிழகம் முழுவதும் தரமான மருத்துவச் சேவையை வழங்கவும், அதற்கேற்றபடி, தரமான மருத்துவர்களை அதிக எண்ணிக்கையில் உருவாக்கவும், மாவட்டம் தோறும் ஒரு அரசு மருத்துவக் கல்லூரியை ஏற்படுத்த அயராது பாடுபட்டார். அதன் விளைவு, இன்று நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவில் அரசு மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன.

கல்லூரிகளைத் திறந்து வைத்ததோடு, மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளை மத்திய அரசு கொண்டு வர முயன்ற போதெல்லாம், காங்கிரஸுடன் கூட்டணியில் இருந்த போதும், அவற்றை எதிர்த்தார். இன்று, தமிழகத்தில் மாவட்டம் தோறும் அரசு மருத்துவமனைகள் இருக்கின்றன. ‘மருத்துவமனையைத் திறந்து வைத்துவிட்டால் மட்டும் போதாது. அதை மேலும் மேலும் மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை நாம் விரிவுபடுத்திக்கொண்டே இருக்க வேண்டும்’ என்பார் அவர். அப்படித்தான் அவரது ஆட்சிக்காலத்தில் பல அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், திறந்துவைக்கப்பட்ட சில ஆண்டுகளில் மாவட்ட அளவிலான மருத்துவமனைகளாகத் தரம் உயர்த்தப்பட்டன.

மூன்று எடுத்துக்காட்டுகள்

ஒரு திட்டம் மக்களுக்கு நிச்சயமாக நலம் பயக்கும் என்று அவரிடம் யாரேனும் சொன்னால், அதைப் பற்றி சம்பந்தப்பட்ட நபர்களிடம் பேசி, அதன் சாதக பாதகங்களை முழுமையாகத் தெரிந்துகொண்டு அதை உடனடியாக நடைமுறைப்படுத்திவிடுவார். இதை நிரூபிக்கும் வகையில், என்னால் மூன்று எடுத்துக்காட்டுகளைக் காட்ட முடியும்.

அது 2005-ம் ஆண்டு. அன்று, டெல்லியில் உள்ள ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையில் மட்டுமே ‘நஞ்சுக் கட்டுப்பாட்டு வாரியம்’ என்ற தனிப்பிரிவு இருந்தது. அதுபோன்ற ஒரு பிரிவு, தமிழகத்திலும் வேண்டும் என்று சொல்லி, ஒரு திட்டத்தைத் தயாரித்து, சுகாதாரத்துறையிடம் அளிக்கப்பட்டது. அது அ.தி.மு.க.வின் ஆட்சிக்காலம். அப்போது, ஆ.ராசா, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தார். அவர் மூலமாக அழுத்தம் கொடுத்து, தமிழகத்தில் ‘நஞ்சுக் கட்டுப்பாட்டு வாரியம்’ அமைக்க, உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டார் தலைவர்.

அப்படித்தான், சென்னை மருத்துவக் கல்லூரியில் ‘நஞ்சுக் கட்டுப்பாட்டு வாரியம்’ கொண்டு வரப்பட்டது. இதனால், பூச்சிக்கொல்லிகள், பாம்புக் கடிகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட எண்ணற்ற விவசாயிகள் மற்றும் சாமானியர்கள் மரணத்தின் வாயிலிருந்து காப்பாற்றப்பட்டார்கள். இது முதலாவது எடுத்துக்காட்டு.

இரண்டாவது, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தின் கீழ், மருத்துவமனையில் பிரசவம் பார்க்க வழிவகை செய்தார் கலைஞர். அதனால், தாய்-சேய் இறப்பு விகிதங்கள் வெகுவாகக் குறைந்தன.

மூன்றாவது எடுத்துக்காட்டு, குழந்தைகளின் இதயங்களைப் பாதுகாத்தது. முன்பெல்லாம், குழந்தைகளுக்கு இதய வால்வுகள் பாதிப்பு சார்ந்த ‘ருமாட்டிக் இதய நோய்’ என்ற ஒரு நோய் இருந்தது. இதற்கு சிகிச்சை அளிக்க, வாய் வழியாகச் செலுத்தப்படும் ‘பென்சிலின்’ மருந்தை, அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு இலவசமாக அளித்தால், பல குழந்தைகளை மரணத்தின் பிடியிலிருந்து காப்பாற்ற முடியும் என்ற யோசனையுடன், சென்னை மருத்துவக் கல்லூரியில் இதய நிபுணராக இருந்த டாக்டர் சாலமன் விக்டர் என்பவர், ஆய்வுக்கட்டுரை ஒன்றை வெளியிட்டார். அந்தத் தகவல் கலைஞருக்கு எட்டியது. உடனடியாக அதுதொடர்பான திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அவரது ஆட்சிக்காலமான 1996 – 2001-ல் இது நடந்தது!

ezhilanjpg

மருத்துவச் சேவையில் மகிழ்ந்தவர்

அதே ஆட்சிக்காலத்தில், 1999-ல் மத்திய அரசு 60 சதவீதப் பங்களிப்பு, தமிழக அரசு 40 சதவீதப் பங்களிப்பு என்கிற விகிதத்தில், சென்னை தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்துக்கு அடித்தளம் அமைக்கப்பட்டது.

தமிழகத்தில், அவரது ஆட்சிக்காலத்தில் தொழுநோய் ஒழிப்புக்காக அவர் மேற்கொண்ட பணிகளைப் பார்த்து, மேற்கு ஜெர்மனியைச் சேர்ந்த நிபுணர் ஒருவரே ஆச்சரியப்பட்டுப் போனார். அதேபோல, அவர் அறிமுகப் படுத்திய ‘கலைஞர் காப்பீட்டுத் திட்டம்’ மூலமாகப் பயனடைந்தவர்கள் எத்தனையோ பேர்!

அனைத்துக்கும் மேலாக, திருநங்கைகளுக்கான நல வாரியம் அமைக்கப்பட்டு, பால் மாற்று அறுவை சிகிச்சைக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து, தமிழகத்தைத் தனித்துவ மாநிலமாக நிற்கச் செய்தார் கலைஞர்!

‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறேன்’ என்றார் அண்ணா. அவரது தம்பி, மக்களுக்குத் தேவையான மருத்துவச் சேவைகளை அறிமுகப்படுத்தி, அதனால் பயனடைந்தவர்களின் சிரிப்பில், மகிழ்ச்சி கொண்டார்.

கட்டுரையாளர், பொது மருத்துவர்,
தொடர்புக்கு: ezhilnagan@gmail.com

SCROLL FOR NEXT