நலம் வாழ

உயிர் போக்குமா ‘மாற்று’ மருத்துவம்..?

பிருந்தா சீனிவாசன்

ஒரு காலத்தில் ‘கடவுளின் கோபம்’ என நம்பப்பட்ட கொள்ளை நோய்களால் கொத்துக் கொத்தாக  மடிந்து கொண்டிருந்த இந்தியர்களை, நவீன மருத்துவமே மீட்டது. காலரா, அம்மை, போலியோ, தொழுநோய், பால்வினை நோய்கள் உள்ளிட்ட பல்வேறு நோய்களை இன்று ஆங்கில மருத்துவம் என்றழைக்கப்படும் ‘அலோபதி’ மூலம், கட்டுக்குள் வைத்திருக்கிறோம்.

அந்த அறிவியல் முன்னேற்றத்தின் முகட்டில் நின்றுகொண்டுதான் ‘பழமைக்குத் திரும்புவோம்’ எனப் பலர் கூச்சலிடுகிறார்கள். அதன் தொடர்ச்சியாக சிலர், மாற்று மருத்துவ முறைகளின் பின்னால் கண்ணை மூடிக்கொண்டு செல்கின்றனர். வீட்டில் தன் கணவனால் பிரசவம் பார்க்கப்பட்டு உயிரிழந்த திருப்பூரைச் சேர்ந்த  கிருத்திகா, இப்படியான பிற்போக்குத்தனமான நடவடிக் கைகளுக்கு மற்றுமோர் சாட்சி!

அரசாங்கத்தில் அனைத்தும் உண்டு

பாரம்பரியம், பண்பாடு போன்றவற்றை முன்னிறுத்தி, மக்களை மரபுவழி வாழ்க்கை முறைக்குத் திரும்பச் சொல்லும் பலரும் ஆங்கில மருத்துவமுறைக்கு எதிரான பரப்புரைகளைச் செய்துவருகின்றனர். இதில் பக்க விளைவுகள் அதிகம், நீரிழிவு என்பது நோயே அல்ல, புற்றுநோய் என்பதெல்லாம் புரட்டு என்று போகிற போக்கில் ஆதாரமற்ற தகவல்களை அடித்துவிடுகின்றனர்.

பல மருத்துவமனைகளில் பிரசவத்துக்கே லட்சக்கணக்கில் செலவழிக்க வேண்டியிருப்பதால் வீட்டிலேயே இயற்கை முறையில் பிரசவம் பார்ப்பது நல்லது எனச்  சொல்கிறவர்கள் அரசு மருத்துவமனைகளின் பக்கம் செல்வதே இல்லை. வட மாநிலங்களைவிட தமிழத்தில் சுகாதாரத் துறை சிறப்பான அளவில் செயல்பட்டுவருகிறது.

அரசு மருத்துவமனைகளில் பிரசவம் நடப்பதை ஊக்குவிக்கும்விதமாக, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கருவுற்ற பெண்ணுக்கு இந்தத் திட்டத்தின் மூலம் 18 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

“தமிழகத்தில் 2,500-க்கும் அதிகமான ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருக்கின்றன. இவற்றில் பாதுகாப்பான, தரமான பிரசவத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் உள்ளன. இறுதி நேர எதிர்பாராத சிக்கலின்போது கருவுற்ற பெண்ணை அருகிலிருக்கும் மாவட்ட மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் செல்லும் வசதியும் உண்டு.

பிரசவத்துக்குப் பின் தாயையும் சேயையும் பாதுகாப்பாக வீட்டுக்கு அனுப்பிவைக்க ‘ஜனனி சிசு சுரக்‌ஷா கார்யகிரம்’ திட்டம் மூலம் வாகனமும் ஏற்பாடு செய்யப்படுகிறது” என்கிறார் புதுக்கோட்டையைச் சேர்ந்த மனநல மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகம்.

தடுக்கிறதா கவுரவம்?

அரசு இவ்வளவு ஏற்பாடுகளைச் செய்து தந்தாலும், மக்கள் ஏன் தனியார் மருத்துவமனைகளின் பக்கம் ஓட வேண்டும்? அடித்தட்டு மக்களுக்கு அரசு மருத்துவமனைகளை விட்டால் வேறு வழியில்லை. நடுத்தர மக்களுக்கும் உயர்தர நடுத்தர மக்களும்தான் தனியார் மருத்துவமனைகளை நோக்கிப் படையெடுக்கின்றனர். கட்டணமின்றி பிரசவம் பார்த்துக்கொள்வதிலும் சிகிச்சை எடுத்துக்கொள்வதிலும் இவர்களுக்குப் பெரும் மனத்தடை இருக்கிறது. அது தங்கள் கவுரவத் துக்கு இழுக்கு என நினைக்கிறார்கள்.

தவிர அரசு மருத்துவமனையில் எல்லாமே இலவசமாகக் கிடைப்பதால் அது தரமற்றதாகத்தான் இருக்கும் என அவர்கள் நம்புகிறார்கள். அதைத் தனியார் மருத்துவமனைகள் தங்களுக்குச் சாதகமாக்கி, காசு பார்க்கின்றன. சேவை நோக்கத்துடன் மருத்துவமனை நடத்தும் மருத்துவர் களை இந்தப் பட்டியலில் சேர்க்க முடியாது.

உண்மையில் அனுபவம் வாய்ந்த மருத்துவர்களையும், மிகச் சிறந்த மருத்துவக் கருவிகளையும், நவீன மருத்துவப் பரிசோதனைக் கூடங்களையும் கொண்டவை அரசு மருத்துவமனைகளே.

சரி, அப்படியே அரசு மருத்துவமனைகள் சரியாகப் பராமரிக்கப்படாமலோ சிகிச்சை வழங்குவதில் குறைபாடு இருந்தாலோ அதைத் தட்டிக் கேட்கும் பொறுப்பும் கடமையும் நமக்கும் இருக்கிறதுதானே. ஆனால், அவற்றைப் பயன்படுத்தாமலேயே வெளியே நின்றபடி புலம்புவோர் இங்கு அதிகம்.

ஆபத்தை எதிர்கொள்ளும் சவால்

கருவுற்ற பெண்ணுக்கு உணவு வழிகாட்டலில் உதவுகிற சித்த மருத்துவர்கள், பிரசவத்துக்கு அரசு மருத்துவமனைகளையே பரிந்துரைக்கிறார்கள். காரணம் கருவுற்ற நாள் முதல் மருத்துவ ஆலோசனை பெற்று, தொடர்ச்சியான மருத்துவக் கண்காணிப்பில் இருந்தாலும் பிரசவத்தைப் பொறுத்தவரை இறுதிவரை எதையுமே அனுமானிக்க முடியாது.

பிரசவத்தின்போது தாய்க்கு அதிக உதிரப்போக்கு ஏற்படலாம். குழந்தையின் தலையும் தாயின் இடுப்பெலும்பும் பொருந்தாமல் இருந்தால் தாய்க்குப் பிறப்புறப்பில் காயம் ஏற்படலாம். சில நேரம் தாய்க்குத் தொற்று ஏற்படலாம். குழந்தை வெளியேவரத் தாமதமானால் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்படலாம். தாயின் வயிற்றில் உள்ள திரவத்தைக் குடித்து, குழந்தை இறக்க நேரிடலாம்.

இவ்வளவு ஆபத்துகள் ஏற்படச் சாத்தியமுள்ள பிரசவத்தை அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் யாரும் அருகில் இல்லாத நிலையில் வீட்டிலேயே நடத்தலாம் என்று பரிந்துரைப்பதை பாதுகாப்பான முறை என எப்படிச் சொல்ல முடியும்?

போலிகள் ஜாக்கிரதை

நம் பாரம்பரிய மருத்துவமுறை களான சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி போன்றவற்றைப் பின்பற்றுவது தவறல்ல. அதிலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்து வர்களைக் கொண்டு நடத்தப்படும் அரசு சித்த மருத்துவமனைகளுக்குச் செல்வதே நல்லது. போலிகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும் பாரம்பரிய மருத்துவத் துறையில் அரசின் பக்கம் செல்வதே சிறந்தது.

யாரிடம் முறைப்படி பயிற்சி பெற்றார்கள், எந்த மாதிரியான மூலிகைகளைப் பயன்படுத்துகிறார்கள், அவற்றைப் பரிசோதித்த பிறகுதான் மக்களுக்குத் தருகிறார்களா எனப் பல கேள்விகள் மாற்று மருத்துவம் என்ற பெயரில் உலவும் சிகிச்சை முறைகளின் மேல் எழுகின்றன. நம் எல்லாக் கேள்விகளுக்கும், ‘இது எங்கள் குடும்ப ரகசியம். வெளியே சொல்லக் கூடாது’ என்ற ரீதியில்தான் பெரும்பாலும் பதில் கிடைக்கும்.

தவிர இதுபோன்ற போலி மருத்துவர்களைக் கண்காணிக்கும் அமைப்பு எதுவும் இங்கே செயல்படுவதாகத் தெரியவில்லை. அதனால்தான் பல்வேறு பெயர்களில் இந்த மருத்துவ முறைகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகச் செழித்து வளர்கின்றன. படித்தவர்கள்தான் பெரும்பாலும் இப்படியான மருத்துவமுறைகளைத் தேடிச் செல்கின்றனர்.

கூட்டு சிகிச்சை தேவை

“சித்தா, ஆயுர்வேத மருத்துவத்திலும் உடற்கூறு, உடலியல், மகளிர் மருத்துவம் எனப் பல்வேறு துறைகள் இருக்கின்றன. அவற்றை முறைப்படி படித்தவர்கள்தான் சிகிச்சை அளிக்கின்றனர். எல்லாவிதமான நோய்களுக்கும் இந்த மருத்துவ முறைகள் தீர்வளிப்பதில்லை. ஆனால், வாதம், வலிப்பு போன்ற நாள்பட்ட நோய்களுக்கு அலோபதியைவிட சித்த மருத்துவத்தில் நல்ல தீர்வு உண்டு.

இரண்டு வகையான மருத்துவ முறைகளையும் பிரித்துப் பார்ப்பதைவிட, இதில் இருக்கிற சிறந்த முறைகளையும் அலோபதி மருத்துவர்கள் தங்கள் சிகிச்சையோடு இணைத்துக்கொள்ளலாம். இதுபோன்ற கூட்டு சிகிச்சைக்கு அரசு ஆதரவளிக்க வேண்டும்” என்கிறார் சென்னை அண்ணா அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ஓய்வுபெற்ற பேராசிரியர் மதிவாணன்.

சரியான மருத்துவ வழிகாட்டல் இல்லாமல், தனக்கு வந்த நோயின் பெயர்கூடத் தெரியாமல் மாண்டுபோன முன்னோர்களைக் கொண்டதுதான் நம் பாரம்பரியம் என்பதை மிக வசதியாக மறந்துவிட்டுத்தான் வேர்களை நோக்கித் திரும்பும்படி சிலர் சொல்கிறார்கள். 

அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட பாரம்பரிய மருத்துவ முறைகள் பலவும் பல நோய்களுக்குத் தீர்வு வைத்திருக்கவில்லை. மாரடைப்பு, வாகன விபத்து, அறுவை சிகிச்சை போன்ற உடனடி கவனிப்பு தேவைப்படுகிறவற்றுக்கு சித்த மருத்துவர்களே அலோபதியைத்தான் பரிந்துரைப்பார்கள்.

எத்தனையோ கற்பிதங்களில் இருந்து மக்களை நவீன மருத்துவமே மீட்டிருக்கிறது. எதற்கெடுத்தாலும் நம் முன்னோர்களைத் துணைக்கு அழைக்கும் பலரும் அலோபதி மருத்துவத்தில் நடக்கும்  முறைகேடான வர்த்தகத்தைக் கேள்வி கேட்பதை விட்டுவிட்டு அந்த அறிவியல் முறையையே இடக்கையால் தள்ளுகிறார்கள். தவிர, பெருகிவரும் நோய்களுக்கு ஏற்ப அலோபதி மருத்துவம் ஒவ்வொரு நாளும் தன்னைப் புதுப்பித்தபடியே இருக்கிறது.

இன்று நம் வாழ்க்கை முறை நவீனமயமாகிவிட்டது. மக்கள்தொகை பெருக்கம், ரசாயனங்களில் விளைந்த உணவுப் பொருட்கள், துரித உணவு வகைகளின் ஆதிக்கம், சுற்றுச்சூழல் மாசுபாடு இவ்வளவு காரணிகளுக்கும் நடுவேதான் நாம் வாழவேண்டியிருக்கிறது. பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாட்டால் மலடாகிப்போன நிலத்தைப் பண்படுத்தவே குறைந்தது மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் தேவைப்படும் நிலையில் நவீன வாழ்க்கை முறைக்குப் பழகிவிட்ட மக்களால் ஒரே நாளில் மரபுக்குத் திரும்புவதெல்லாம் போகாத ஊருக்கு வழி சொல்கிற கதைதான். 

SCROLL FOR NEXT