நிறங்கள், மனதுக்கு உற்சாகத்தையும் குதூகலத்தையும் அள்ளிக் கொடுப்பவை. கூடவே நோய்ப் போக்கும் தன்மையும் அதற்கு உண்டு என்பது கூடுதல் ஆச்சரியம்!
அதிலும் குறிப்பாக, கண்களைக் கவரும் வண்ணமயான பகுதிகளை உடைய தாவரங்களில் பல்வேறு நோய்களைக் களையும் மூலக்கூறுகள் ஒளிந்திருக்கின்றன. அந்த வகையில் நம்மோடு அதிகமாக உறவாடும் வண்ணமயமான மலர்கள் சூடிய ‘சங்கு’புஷ்பம் எனும் தாவரம் எழுப்பும் ஆரோக்கிய ஒலிக்குச் செவிமடுப்போம்!
பெயர்க் காரணம்: காக்கணம், காக்கணங்கொடி, கன்னிக்கொடி, இரிகன்னு, காக்கணத்தி ஆகியவை இதன் வேறு பெயர்கள். இதன் மலர்கள் சங்கு போலத் தோற்றமுடையதால் சங்குபுஷ்பம் என்று பெயர் பெற்றது. பட்டாம்பூச்சியைப் போலக் காணப்படும் இதன் மலருக்கு ‘பட்டர்ஃப்ளை பீ’ (Butterfly pea) என்று ஆங்கிலத்தில் பெயருண்டு.
அடையாளம்: வேலிகளில் கிடைக்கும் வாய்ப்பைப் பற்றிக்கொண்டு விரைவாக மேலேறும் கொடியினமான இந்தத் தாவரத்தைப் பூக்களுடன் பார்ப்பதற்கு ஆயிரம் கண்கள் போதாது. இதன் கொடிகள் வேகமாகப் பரவி புதர்போல காட்சி தரும். நீலம் மற்றும் வெள்ளை நிறங்களில் இதன் மலர்கள் பூக்கும். இதன் காய்கள் தட்டையாக இருக்கும்.
தென்னிந்தியாவில் பரவலாகக் காணப்படுகிறது. ‘க்ளிடோரியா டெர்னேஷியா’ (Clitoria ternatea) என்ற தாவரவியல் பெயர்கொண்ட இதன் குடும்பம் ‘ஃபேபேசியே’ (Fabaceae). கிளைக்கோசைடுகள், நிறமிச் சத்துக்கள், கரோட்டினாய்ட்கள் போன்ற தாவர வேதிப்பொருட்கள், இதன் மலர்களில் அதிகமிருக்கின்றன.
உணவாக: ஐந்து மலர்களைத் தண்ணீரிலிட்டுச் சில நிமிடங்கள் கொதிக்கவைக்க வேண்டும். மெல்லிய நீல நிறமாக மாறிய நீரில், சில துளிகள் எலுமிச்சைச் சாறு மற்றும் சுவைக்குக் கருப்பட்டி சேர்த்துப் பருகுவது ஆரோக்கியத்துக்கு உத்திரவாதம். வழக்கமான தேநீர், குளம்பிகளுக்குப் பதிலாக இந்த சங்குபுஷ்ப பானத்தைப் பருக, பல நோய்கள் தலைகாட்டாது. இலைச் சாறோடு, இஞ்சிச் சாறு சம அளவு எடுத்து, அரைக்கரண்டி அளவு கொடுக்க, நுரையீரல் பாதை சார்ந்த நோய்களின் தீவிரம் குறையும். இதன் வேர் ஊறிய நீர் சிறுநீரைப் பெருக்கி வீக்கங்களைக் கரைக்கும். சிறுநீரகப் பாதைத் தொற்றுக்களையும் போக்கும்.
மருந்தாக: இதன் மலர்களைக்கொண்டு தயாரிக்கப்படும் குடிநீர், நீரிழிவு நோயாளர்களின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதாக ‘காம்பிளிமெண்டரி மற்றும் ஆல்டர்னேட்டிவ் மெடிசின்’ எனும் ஆய்விதழில் வெளியான கட்டுரை தெரிவிக்கிறது. மலர்களில் உள்ள ஆந்தோசயனின்கள், புற ஊதாக்கதிர்களின் தாக்கத்திலிருந்து தோலைப் பாதுகாப்பதாக சமீபத்திய ஆய்வு உறுதிப்படுத்துகிறது.
அதிக அளவில் ஃப்ளேவனாய்ட்கள் இருப்பதால், புற்றுநோய் செல்களின் பெருக்கத்தைத் தடுக்கிறது. ‘மாந்தங் கிருமியடல் வாதங் கபவினமும்…’ எனத் தொடங்கும் இதன் வேர் சார்ந்த பாடல், செரிமானம் சார்ந்த நோய்கள், குடற்புழு, வாதம் மற்றும் கப நோய்களுக்கு சிறந்த மருந்து என்பதைப் பதிவிடுகிறது.
வீட்டு மருந்தாக: நினைவு சக்தியை அதிகரிப்பதற்கு சங்குபுஷ்பத்தைக் கிராமத்து மக்கள் பயன்படுத்துவதாக கள ஆய்வுக்குறிப்புகள் தெரிவிக்கின்றன. இலையோடு உப்பு சேர்த்து அரைத்து, கட்டிகளில் தடவலாம். கல்லீரல் சார்ந்த நோய்களுக்கு இதன் வேர், விதைகளை மருந்தாகப் பயன்படுத்தும் வழக்கம், சில பகுதி மலைவாழ் மக்களிடம் காணப்படுகிறது. தோல் நோய்களுக்கும் இந்தத் தாவரம் சிறந்த மருந்தாகிறது.
பேதிக்கு வழங்கப்படும் மருந்துகளில் காக்கணம் வேர் சேர்க்கப்படுகிறது. காக்கணம் வேர், திப்பிலி, விளாம்பிசின், சுக்கு சேர்த்துச் செய்யப்படும் ‘காக்கணம் வேர் மாத்திரை’ எனப்படும் சித்த மருந்து, கழிச்சலை உண்டாக்கி உடலின் நோய்களை நீக்கும் தன்மை உடையது. யானைக்கால் நோயின் அறிகுறிகளைக் குறைக்க இதன் வேரிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து பயன்படுகிறது.
விழிகளோடு உவமைப்படுத்தி இதன் மலர்கள் பாடப்படுவது உண்டு. விழிகளுக்கு மட்டுமல்ல, நமது நலத்துக்கும் உவமையாகக் கூறும் அளவுக்கு சங்குபுஷ்பத்துக்கு அனைத்துத் தகுதிகளும் உண்டு!
கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com