நலம் வாழ

புத்தகத் திருவிழா: பருமனைக் குறைக்கப் படிங்க…!

யுகன்

வல்லரசு நாடாக அறியப்படும் அமெரிக்காவுக்கே சவால் விடுவது, இப்போதைக்கு அங்கு நிலவும் உடல் பருமன் பிரச்சினை. மனது வைத்தால் உடல் பருமன் பிரச்சினையிலிருந்தும் ஒருவரால் விடுபட முடியும் என்று, டாக்டர் கு.கணேசன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.

தொப்பையிலேயே எத்தனை வகைகள் இருக்கின்றன, உடல் பருமனுக்கும் சர்க்கரை நோய்க்கும் இருக்கும் தொடர்பு, ஊடுகொழுப்பால் எத்தகைய விளைவுகள் ஏற்படும், நாம் சாப்பிடும் உணவில் இருக்கும் சக்தியை (கலோரி) எப்படிக் கணக்கிடுவது, தூக்கப் பிரச்சினை மற்றும் குறட்டைவிடுவதில் உடல் பருமனுக்கு இருக்கும் தொடர்பு என, பல தலைப்புகளில் விரியும் கட்டுரைகளில் உடல் பருமனோடு எத்தகைய நோய்கள் கைகோக்கின்றன என்பதையும் எளிய உதாரணங்களுடன் ஆசிரியர் விளக்கியுள்ளார்.

உடல் பருமனைக் குறைக்க விரும்புபவர்கள் உணவுப் பழக்கத்திலும் உடற்பயிற்சியிலும் கவனம் செலுத்துவதோடு, ஒவ்வொரு உணவையும் உட்கொள்ளும் முறையிலும் செய்முறையிலும் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் என்பதை நுட்பமாக இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர்.

கொழுப்புக்கும் கொலஸ்ட்ராலுக்கும் இருக்கும் வித்தியாசம், கொழுப்பு கூடுதலாக இருப்பவர்களுக்கும் கொலஸ்ட்ரால் அளவு மிகச் சரியாக இருக்கும் நிலையையும் தகுந்த உதாரணங்களோடு இந்த நூல் வழியாக விளக்கமாக அறிய முடியும்.

உணவைச் சாப்பிடும் முறை, சமைக்கும் முறை போன்றவற்றை விளக்கும் இந்நூலிலேயே, நடைப்பயிற்சியால் விளையும் நன்மைகளையும் ஆழமாக விளக்கியிருக்கிறார்.

‘நடப்பதும் ஓடுவதும் கலோரிகளைக் குறைப்பதற்கு மட்டுமல்ல! உடலில் உறங்கிவழியும் ஹார்மோன்களை உசுப்பிவிடவும்தான். உதாரணத்துக்கு, அரைமணி நேர நடை மூளைக்குள் என்டார்ஃபின் ஹார்மோனைச் சுரக்க வைக்கிறது. இது தசைகளையும் நரம்புகளையும் முறுக்கிவிடுகிறது. ஐஸ்கிரீம் சாப்பிட்ட குழந்தைபோல் நாள் முழுக்க நமக்குக் குதூகலம் வந்துவிடுகிறது’ என்னும் வார்த்தைகள், நடைப்பயிற்சியின் மீதான காதலை நிச்சயம் நம்மிடையே நிச்சயம் ஏற்படுத்தும்.

ஒல்லி பெல்லி

டாக்டர் கு. கணேசன் | வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
177/103, முதல் தளம், அம்பாள்’ஸ் பில்டிங், லாய்ட்ஸ் சாலை,
ராயப்பேட்டை, சென்னை – 600 014.
தொலைபேசி: 044-42009603
ரூ. 125

SCROLL FOR NEXT