நலம் வாழ

மனம் காத்த சென்னைக் காப்பகம்!

செய்திப்பிரிவு

மேற்கு நாடுகளில் பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில்தான் மனநலத் துறையானது ஒரு சிறப்புப் பிரிவாக உருக்கொள்ளத் தொடங்கியது. அப்போதுதான் மனநோய் பற்றிய கோட்பாடுகளும், மனநலம் பாதிக்கப்பட்டோரைப் பராமரிப்பதற்கான விடுதிகளும், சிகிச்சை முறைகளும் கணிசமாகத் தோன்றின. அதற்கு முன்னால் ‘பைத்திய’ நிலையானது கடவுளுக்கு எதிரான சாத்தான்களின் செயல்பாட்டால் ஏற்படுகிறது என்ற பார்வைதான் நிலவி வந்தது. அவ்வாறு சாத்தானால் பீடிக்கப்பட்டவர்கள் என்று கருதப்பட்டவர்கள், ஆயிரக்கணக்கில் தண்டனைக்கும் தீக்கும் இரையாக்கப்பட்டனர்.   

மேற்கின் விஞ்ஞான ரீதியிலான மனம், மனநோய் தொடர்பான நவீனக்  கருத்துக்கள் இந்தியாவுக்குள் புத்தகங்கள் வழியாக அறிமுகமாவதற்கு முன்பாகவே இங்கே விடுதிகள் வந்துவிட்டன. மனநலம் பாதிக்கப்பட்டோரை அடைப்பதற்கான விடுதி என்பது முழுக்க ஆங்கிலேயர்களின் கண்டுபிடிப்பு. பிரிட்டிஷார் வருகைக்கு முன்பு மனநலம் சரியில்லாதவரைச் சமூகத்திலிருந்து பிரித்துத் தனியே விடுதியில் அடைத்துப் பராமரிக்கும் போக்கு இந்தியாவில் இருந்ததில்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஆங்கிலேயரின் வருகையையொட்டித்தான் காப்பகங்கள் (Asylums) இந்தியாவில் தோன்றின.

கிழக்கிந்தியக் கம்பெனி செயல்பட்ட வணிக முக்கியத்துவம் வாய்ந்த மாகாணங்களான பம்பாயில் 1774-லும், வங்கத்தில் 1787-லும், மதராஸில் 1794-லும் விடுதிகள் உருவாக்கப்பட்டன. பிராந்தியப் பகுதிகளாய் விளங்கிய சித்தூர், திருச்சிராப்பள்ளி, தெள்ளிச்சேரி, மசூலிப்பட்டனம் போன்ற இடங்களில் விடுதிகள் தற்காலிகமாக நிறுவப்பட்டுப் பின்பு நிர்வாகக் காரணங்களால் 1822-ல் மூடப்பட்டிருக்கின்றன.

மதராஸ் மாகாண விடுதி

மதராஸ் விடுதியைத் தெரிந்து கொள்ள, வால்டிரவுட் எர்னஸ்ட் (Waltraud Ernst) என்ற ஆய்வாளரின் குறிப்புகளும், 1971-ல் அரசு மனநலக் காப்பகம் அதன் நூற்றாண்டு விழாவில் வெளியிட்ட சிறப்பு மலரும் நமக்கு உபயோகமான தகவல்களைத் தருகின்றன.

1793-ல் மதராஸில் விடுதிக்கான சுழி போடப்பட்டு அதற்கடுத்த ஆண்டு கட்டப்பட்டுள்ளது. கிழக்கிந்திய கம்பெனியானது தன்னிடமிருந்த வேலன்டைன் கனோலி (Valentine Conolly) என்ற மருத்துவரை, புத்தி பேதலித்த ஐரோப்பியர்களைப் பராமரிக்க நியமித்தது. கம்பெனியின் ஊழியராக இருந்துகொண்டு அதே சமயத்தில் பித்தர்களுக்காகத் தனியார் விடுதி உரிமையாளராகவும் இருந்துகொள்ளும் நடைமுறை அப்போது இருந்திருக்கிறது. விடுதிக்கான வாடகையும், அவருக் கான சம்பளத்தையும் கிழக்கிந்திய கம்பெனி கொடுத்திருக்கிறது.

கனோலிக்குப் பிறகு இடையில் சில கைகள் மாறி, சர்ஜன் டால்டன் என்பவரிடம் விடுதி வந்திருக்கிறது. கனோலி நடத்திய விடுதி பழையதாக, பலவீனமாக இருக்கிறது என்று சொல்லி அதை டால்டன் புதுப்பித்துக் கட்டியிருக்கிறார். அவர் ஓய்வு பெறும் சமயத்தில் விடுதியை அதிக விலைக்கு விற்க முயற்சித்தபோது, விடுதியைத் தனிநபர் விற்கவோ அல்லது குத்தகை ஒப்பந்தத்தை மாற்றவோ முடியாது என அரசாங்கம் தலையிட்டிருக்கிறது.

இதிலும் இன வேற்றுமை! 

விடுதி நிர்வாகத்தில் அரசு குறுக்கிடுவதற்கு இன வேற்றுமையொட்டிய  காரணம் செயல்பட்டிருக்கிறது. 1808-ல் இரண்டு ஆங்கிலேய கனவான்கள்,  டால்டன் விடுதியில் சேர்க்கப்பட்டதையொட்டி சில சர்ச்கைகள் எழுந்தன.  இனரீதியாகத் தாழ்ந்த ஆர்மீனியர்களோடு ஆங்கிலேயர்களைச் சிகிச்சைக்குச் சேர்த்தது தவறு என்றும், ‘ஆங்கில கனவான்கள் சமூகத்தின் முதல்தர குடிமகன்கள். அவர்களுக்கு முதல் தர விடுதியும் மரியாதையும் தரப்பட்டிருக்க வேண்டும்’ என்று கல்லாகன் என்ற மருத்துவர் தனது கண்டனத்தை மெடிக்கல் போர்டுக்குத் தெரிவித்துக்கொண்டார்.

அதைத் தவிர, ஐரோப்பிய நோயாளிகளின் நலனுக்காக பிரிட்டிஷ் அரசாங்கமானது அதிகப் பணத்தைச் செலவிட்டு வந்ததால் பித்தர்களுக்கான விடுதி நடத்துவது ஒரு லாபகரமான வணிகமாகப் பார்க்கப்பட்டு வந்தது. அதன்படி தங்களால் பராமரிக்கப்படும் மனநோயாளிகள் சமூகத்தின் உயர்தட்டைச் சார்ந்தவர்கள் என்று பொய்யாகக் கணக்குக் காட்டப்பட்டு அரசாங்கத்திடமிருந்து அதிக லாபத்தைத் தனியார் விடுதி உரிமையாளர்கள் பெற்று வந்திருக்கிறார்கள்.

கல்லாகனின் புகாரால் உயர்தட்டுப் பிரிவினருக்கென்று பிரத்யேகமாக செலவுசெய்வதை நிறுத்திவிட்டு, அதற்குப் பதிலாக நிர்ணயிக்கப்பட்ட தொகையை  சூப்பரின்டென்டுக்குச் சம்பளமாகக் கொடுக்க அரசாங்கம் முடிவு செய்தது. அதையொட்டி 1809-ல் நோயாளிகளை விடுதியில் சேர்ப்பது, அவர்களை வகைப்படுத்துவது, விடுதி நிர்வாகம், குத்தகையை நிர்ணயித்தல் போன்ற அதிகாரங்கள் தனியார் விடுதி உரிமையாளர்களிடமிருந்து பறிக்கப்பட்டு மெடிக்கல் போர்டின் கை வசம் வந்தது. அதையொட்டி பிரிட்டிஷ் நோயாளிகள் மற்றவர்களோடு கலந்து அவர்களின் தூய்மை கெட்டுப் போகாமல் இருப்பதற்கு தனி வார்டும் உருவாக்கப்பட்டது.

வெயிலால் பேதலித்ததா மனம்?

1818 ஆண்டுக்கு முன்புவரை கல்கத்தா, பாம்பே, மதராஸ் போன்ற மாகாணங்களிலிருந்த ஐரோப்பிய நோயாளிகளை பிரிட்டனுக்குத் திருப்பி அனுப்பும் வழக்கம் பின்பற்றப்படவில்லை. அப்போது அறிவியல் வட்டாரத்தில் ஒரு கருத்து பலம்பெற்று வந்தது. இங்கிலாந்து மாதிரியான குளிர் பிரதேசங்களில் ஒருவர் மனநலம் பாதிக்கப்படுவதற்கு, பொருளில்லாத  துர்பாக்கிய நிலையோ, ஆழ்ந்த மனச் சங்கடங்களோ, மாறாத துயரங்களோ காரணமாக இருக்கலாம். ஆனால் இந்திய நாட்டில் அதற்கான காரணங்கள் வேறு. வெள்ளையர்கள் பைத்தியமாவதற்குத் தாங்க முடியாத வெயிலே போதும் என்ற கருத்துச் சொல்லப்பட்டது. 

சுட்டெரிக்கும் வெயிலும், கடுமையான வாழ்க்கையும் ஒருவரின் இதயத்தை, ரத்த நாளங்களை அதிகம் கிளர்ச்சியடையச் செய்துவிடும் என்ற காரணம் பிரிட்டிஷாரின் மெடிக்கல் போர்டு குறிப்புகளில் இருக்கிறது என்பதை வால்டிரவுட் எர்னஸ்ட் பதிவு செய்துள்ளார். அதைத் தொடர்ந்து ஐரோப்பிய நோயாளிகள் சுவாதீனம் பெறுவதற்காக பிரிட்டனுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.  

‘பப்ளிக் நியூசன்ஸ்’ கீழ்ப்பாக்கம்!

ஐம்பதாண்டு காலமாக விடுதி வாடகைப் பணமாக சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்வரை செலவழித்திருந்ததைக் கணக்குப் பார்த்த மதராஸ் அரசாங்கம், தாமே புதியதாக ஒரு கட்டிடத்தைப் பழைய கீழ்ப்பாக்கம் பகுதியில் கட்டலாம் என முடிவு செய்தது.

அரசாங்கத்தின் நோக்கத்தை அறிந்த கீழ்ப்பாக்கம் பகுதியைச் சார்ந்தவர்கள் ஒவ்வாமை கொண்டனர். ‘கீழ்ப்பாக்கம், சந்தைகளும் கோயில்களும் நிறைந்து வளர்ந்து வரும் புறநகர்ப் பகுதி. அது பைத்தியக்கார விடுதிக்குப் பொருத்தமான இடமல்ல. அப்படிக் கட்டினால் இடத்துக்குப் பங்கம் வரும். ‘பப்ளிக் நியூசன்ஸ்’ ஏற்படும். அதனால் இடமதிப்பும் குறைந்து போகும்’ என்று தங்களது மறுப்பை அரசாங்கத்துக்கு டிசம்பர் 1851-ல் ஒரு மனு மூலமாகத்  தெரிவித்திருக்கின்றனர்.

அரசாங்கமும் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்காகத் திட்டத்தை அப்போது ஆறப்போட்டுப் பின்னர் அரசாங்க கெஜட்டில் விடுதிக்கு இடம் தர விரும்புபவர்கள் முன்வரலாம் என்று பொது விளம்பரம் செய்தது. அதன்படி 1856-57 ‘லோகாக்ஸ் கார்டன்ஸ்’ (Locock’s Gardens) வாங்கப்பட்டது. அதன் பிறகு சிப்பாய்ப் புரட்சியால் நெருக்கடிகள் ஏற்பட்டன. அதன் சூடு தணிந்த நிலையில், 1867 ஜனவரி மாதத்தில் போடப்பட்ட அரசு ஆணையின்படி, வாங்கப்பட்ட 66 ஏக்கர் நிலத்தில் விடுதி கட்டப்படுவதற்கான ஒப்புதல் அளித்தது. மே 15, 1871- ல்
விடுதி கட்டிமுடிக்கப்பட்டு 145 நோயாளிகளுடன் செயல்படத் தொடங்கியிருக்கிறது. 1891-ம் ஆண்டு ஆணும் பெண்ணுமாகச் சேர்த்து 627 நோயாளிகள்வரை சிகிச்சைக்கு வந்து போயிருக்கிறார்கள்.

இந்தியத் தத்துவங்களின் வைத்தியம்

1869-1919 வரை விடுதியில் ஆங்கி லேயே ராணுவ அதிகாரிகள்தாம் சூப்பரின்டென்ட்டாகப்  பதவியில் இருந்திருக்கிறார்கள். 1922-ல்தான்
‘கவர்ன்மென்ட் லுனாட்டிக் அசைலம்’ என்பது ‘கவர்ன்மென்ட் மென்டல் ஹாஸ்பிட்டல்’ என்பதாக மாற்றப்பட்டிருக்கிறது.

1922 தொடங்கி, பிரிட்டனில் மனநலத் துறையைச் சிறப்புப் பாடமாகப் பயின்ற சென்னை மாகாணத்தைச் சார்ந்த உள்ளூர் மருத்துவர்கள் சூப்பரின்டென்ட்டாகப் பதவிக்கு வர ஆரம்பித்தனர். இளநிலை மருத்துவ மாணவர்களுக்கும் மனநோய்களைப் பற்றிய பாடம் லேசாக அறிமுகப்படுத்தப்பட்டது. மின் அதிர்ச்சி வைத்தியமும், இன்சுலின் கோமா சிகிச்சையும் காப்பகத்துக்குள் படிப்படியாக வந்தன.

ஐம்பதுகள் தொடங்கி, அதிகரித்து வந்த தேவையையொட்டி குழந்தைகள் பிரிவு, பெண் மனநோயாளிகளுக்கான பிரிவு என்று புதிதாகப் பல பிரிவுகள் தொடங்கப்பட்டன. மனநலப் பணியாளர்களின் எண்ணிக்கையும் அதிகப்படுத்தப்பட்டது. சிறைச்சாலை போல பெரிய கதவுகள், இரும்புக் கம்பிகள் என மனதை மிரட்டும்படியாக இருந்த காப்பகத்தின் தோற்றம் படிப்படியாக மாற்றப்பட்டது. வேலன்டைன் கனோலியைத் தொடக்க மாகக் கொண்டால் காப்பகத்துக்கு நடப்பில் 225 வயதாகிறது.

ஒன்றை மனதில் கொள்ள வேண்டும். மேற்கில் நடந்ததுபோல இந்தியச் சூழலில் மனநோயாளிகள் கடும் சித்திரவதைக்கோ அல்லது நெருப்புக்கு இரையாகவில்லை. இந்தியாவில் மனதைப் பற்றி பல்வேறு தத்துவப் போக்குகள் அடர்த்தியாக யோசித்திருக்கின்றன. அதைக் கணக்கில் எடுத்துக்கொண்டு யோசித்தால், நமக்கு மாறுபட்ட கருத்தியல் பின்புலம் கிடைக்கும்.

- டாக்டர் சஃபி, மனநலத் துறை உதவிப் பேராசிரியர், தேனி மருத்துவக் கல்லூரி
தொடர்புக்கு: safipsy69@gmail.com

SCROLL FOR NEXT