உலக ரேபிஸ் நாளை (செப்டம்பர் 28) முன்னிட்டு, சென்னை கிழக்கு கடற்கரை செல்ல உயிரினங்கள் மருத்துவமனையின் தலைமை கால்நடை மருத்துவர் பேராசிரியர் டாக்டர் எம். சந்திரசேகர், கட்டணமில்லா ரேபிஸ் தடுப்பூசி முகாமை நடத்தினார்.
ரேபிஸ் என்பது ஒரு வைரஸ் தொற்று. இந்தியாவில் இந்தத் தொற்று பெரும்பாலும் நாய்களிடமிருந்து பரவுகிறது. இதைத் தவிர பூனைகள், நரி, கீரிப்பிள்ளை உள்ளிட்ட விலங்குகளிடமிருந்தும் பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. 2030ஆம் ஆண்டுக்குள் உலகிலிருந்து ரேபிஸ் நோயை விரட்டிவிட வேண்டும் என்கிற குறிக்கோளை உலக சுகாதார நிறுவனம் முன்வைத்துள்ளது. முக்கியமாக, இந்த நோய் மிக அதிகமுள்ள இந்தியா, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் குறிப்பிட்ட இடைவெளிகளில் தடுப்பூசி முகாம்கள் அமைத்து தெருநாய்களுக்கு மொத்தமாகத் தடுப்பூசி செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
எனவே ரேபிஸ் நாள் விழிப்புணர்வின் ஒரு பகுதியாகச் சென்னையில் நடைபெற்ற முகாமில், சுமார் 95 நாய்கள், 10 பூனைகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தை திரைக்கலைஞர் சந்தியா, கவுன்சிலர் விஸ்வநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்வின் ஒரு பகுதியாக, செல்ல உயிரினங்கள் உரிமையாளர்களுக்குக் கட்டணமில்லா நாய் உணவு மாதிரிகளும் விநியோகிக்கப்பட்டன.
ரேபிஸ் நோய் தொடர்பான பிற கட்டுரைகளை வாசிக்க கீழுள்ள இணைப்புகளைப் பார்க்கவும்: