நலம் வாழ

நலம், நலமறிய ஆவல் 42: முக வாதம் முகம் காட்டினால்?

கு.கணேசன்

என் அப்பாவுக்கு வயது 66. சென்ற வாரம் ஒரு நாள் காலையில் அவர் எழுந்திருக்கும்போது திடீரென்று வாய் மட்டும் கோணிவிட்டது. பேச்சு குழறியது. குடித்த தண்ணீர் வாய் ஓரத்தில் ஒழுகத் தொடங்கியது. டாக்டரிடம் காட்டினோம். ‘முக வாதம்’ என்றார். அவருக்கு ரத்தக் கொதிப்பு உள்ளது. மாத்திரை சாப்பிடுகிறார். சில பயிற்சிகளைச் செய்யச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், இன்னும் குணமாகவில்லை. இதற்கு என்ன செய்யலாம் என்று ஒரு யோசனை சொல்லுங்கள். இந்தப் பிரச்சினை அப்பாவுக்கு ஏன் வந்தது? ரத்தக் கொதிப்புதான் காரணமா? அக்குபங்சர் சிகிச்சை பலன் தருமா?

- செல்ல முருகன், சென்னை-30

முகத்தில் ஏதேனும் ஒரு பக்கத்தில் உள்ள தசைகள் மொத்தமும் திடீரென்று பலவீனமடைந்து செயலிழப்பதை ‘முக வாதம்’ (Facial palsy அல்லது Bell’s plasy) என்கிறோம். இது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம், எந்த வயதிலும் வரலாம். இது திடீரென்று வருவதால், மூளைக்குள்தான் ஏதோ பிரச்சினை ஆகிவிட்டது என்றும், ‘பக்கவாதம்’ (Stroke) வந்துவிடுமோ என்றும் பலரும் பலவாறு பயப்படுவது வழக்கம்.

ஆனால் அப்படியல்ல. இது நரம்பு தொடர்பான பிரச்சினை. நிரந்தரப் பிரச்சினையும் அல்ல, தற்காலிகமான பிரச்சினைதான். இதற்காகப் பயப்படவோ கலவரப்படவோ தேவையில்லை.

மூளையிலிருந்து முகத்துக்கு ஒவ்வொரு பக்கத்துக்கும் ஒரு ‘முக நரம்பு’ (Facial nerve) வருகிறது. முக எலும்பின் குறுகிய துளை வழியாக இது முகத்துக்கு வருகிறது. அந்தந்தப் பகுதிக்கு வரும் முக நரம்புகள் அங்குள்ள தசைகளின் இயக்கத்துக்குத் துணைபோகின்றன. இந்த நரம்பு ஏதாவது ஒரு காரணத்தால் பாதிக்கப்படுமானால், அது நிர்வகிக்கும் முகத்தின் தசைகள் இயங்காமல் போகும். அப்போது முகத்தின் அந்தப் பக்கத்தில் மட்டும் ‘முக வாதம்’ ஏற்படும்.

பலரும் தவறாக எண்ணுவதுபோல் இது உயர் ரத்த அழுத்தம் காரணமாக வருவதில்லை. பெரும்பாலும் இது வைரஸ் கிருமிகளின் பாதிப்பால்தான் வருகிறது. நெஞ்சுச்சளியை ஏற்படுத்தும் அடினோ வைரஸ், ஃபுளு வைரஸ், சிற்றம்மை வைரஸ், ரூபெல்லா வைரஸ், அம்மைக்கட்டு வைரஸ் எனப் பலதரப்பட்ட வைரஸ்கள் இதற்குக் காரணமாகின்றன. இவற்றில் ஏதேனும் ஒன்று முக நரம்பைப் பாதிக்கும்போது, அந்த நரம்பில் அழற்சி ஏற்பட்டு வீங்கிக்கொள்கிறது. அப்போது நரம்பின் செயல்பாடு தற்காலிகமாக நின்றுவிடுகிறது. அதனால் முக வாதம் வருகிறது. சிலருக்கு இன்ன காரணம் எனத் தெரியாமலே இது வருவதும் உண்டு.

பொதுவாக, அடிக்கடி சளி ஏற்படும் நபர்களுக்கும், குளிர்ச்சியான சூழலில் குடியிருப்பவர்களுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கும், நீரிழிவு நோயாளிகளுக்கும், முதியோருக்கும் இது ஏற்படுகிற வாய்ப்பு அதிகம். கர்ப்பிணிகளுக்கு மூன்றாவது மும்மாதங்களிலும், பிரசவத்துக்குப் பிறகு முதல் வாரத்திலும் இது ஏற்படுவது வழக்கம்.

திடீரென்று முகத்தில் ஒரு பக்கம் செயல்படாமல் போகும். வாயைத் திறந்தால் கோணலாகும். சிரிக்க முடியாது. பாதிப்புள்ள முகத்தில் கண்ணை மூடுவதற்குச் சிரமம் ஏற்படும். கண்ணில் நீர் வடியும் அல்லது கண் உலர்ந்துவிடும். வாயின் ஓர் ஓரத்தில் எச்சில் வடியும். சிலருக்குத் தலைவலிக்கும். இன்னும் சிலருக்குத் தாடை வலிக்கும். காதுக்குப் பின்புறம்கூட வலி ஏற்படலாம்.

பெரும்பாலும் ஒரு சில வாரங்களில் இந்த அறிகுறிகள் எல்லாம் குறைந்துவிடும். ஆனால், பாதிப்பு முழுமையாகக் குணமாக 6 மாதங்கள் வரை எடுத்துக்கொள்ளும். மிகச் சிலருக்கு மட்டும் முக நரம்பு முழுவதுமாகச் சிதைந்துபோகும். அப்போது, பாதிக்கப்பட்ட பக்கத்தில் கண்ணை மூடுவதில் சிரமம் தொடரக் கூடும். கண் மிகவும் உலர்ந்துவிடும். கண்ணின் கார்னியாவில் புண் ஏற்பட்டு, பார்வையிலும் பிரச்சினை உண்டாகலாம்.

முக வாதத்துக்கு எனச் சிறப்புப் பரிசோதனைகள் எதுவும் இல்லை. வழக்கமான உடலின் பொதுத் தகுதியைக் கணிக்கும் ரத்தப் பரிசோதனைகளும் நீரிழிவுக்கான ரத்தப் பரிசோதனைகளும்தாம் முதலில் தேவைப்படும். பாதிப்பின் தீவிரம் குறையவில்லை என்றால், முகத்தசைகளின் செயல்பாடு எப்படி உள்ளது என்பதை அறிய ‘இஎம்ஜி’ (EMG) பரிசோதனை தேவைப்படும். வேறு ஏதேனும் காரணங்களால் முக நரம்பு அழுத்தப்படுகிறதா என்பதைத் தெரிந்துகொள்ள மூளையை சி.டி. ஸ்கேன் அல்லது எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்துப் பார்ப்பதும் உண்டு.

முக நரம்பு வீக்கத்தைக் குறைக்க ஸ்டீராய்டு மருந்துகள் தரப்படுவதுதான் பொதுவான சிகிச்சை. வைரஸ் பாதிப்பு உள்ளது உறுதியானால், மாத்திரையைக் கொடுப்பது உண்டு. வலி மாத்திரைகள் தற்காலிக நிவாரணத்துக்குத் தரப்படும். உடலில் நீரிழிவு போன்ற துணை நோய்கள் இருந்தால், அவற்றுக்கும் சிகிச்சை தேவைப்படும்.

நரம்புகளுக்கு ஊட்டம் தருவதற்கு வைட்டமின் பி6, பி12, துத்தநாகம் ஆகியவை கலந்த மாத்திரைகளும் ஊசிகளும் உதவும். கண் உலர்ந்துவிடாமலிருக்கக் கண்ணை ஈரமாக்கும் சொட்டு மருந்துகளைப் பயன்படுத்தலாம். பகலில் கண்ணுக்குப் பாதுகாப்பு கொடுப்பதற்குத் திரை போட்டுக்கொள்வதும் நல்லது.

இவை எல்லாவற்றையும்விட மிக முக்கியமானது, கண்ணுக்கும் முகத் தசைகளுக்குமான பயிற்சிகளைத் தொடர்ந்து பொறுமையுடன் மேற்கொள்வதுதான். இவை மிகவும் எளிய பயிற்சிகள்தான் என்பதால், இவற்றை மேற்கொள்வதில் சிரமம் இருக்காது. உங்கள் அப்பாவுக்கு இந்தப் பயிற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளுங்கள். இன்னும் சில வாரங்களில் குணம் தெரியும். ஏற்கெனவே சொன்னதுபோல் இந்தப் பாதிப்பு முழுமையாகக் குணமாவதற்குக் குறைந்தது 6 மாதங்கள் வரை ஆகலாம். மேலும், இதற்கு அக்குபங்சர் சிகிச்சையும் யோகாவும் நல்ல பலன் தருகிறது. முயற்சித்துப் பார்க்கலாம்.

‘நலம், நலமறிய ஆவல்' கேள்வி - பதில் பகுதியில் பதில் அளிக்கிறார் பிரபல மருத்துவ எழுத்தாளர் டாக்டர் கு. கணேசன். முக்கியமான மருத்துவச் சந்தேகங்களை வாசகர்கள் இப்பகுதிக்கு அனுப்பலாம்.

மின்னஞ்சல்: nalamvaazha@thehindutamil.co.inமுகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ, இந்து தமிழ், கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002.

SCROLL FOR NEXT