வி.கிருஷ்ண மூர்த்தி எழுதி, சுதீஷ் சங்கர் இயக்கிய 'மாரீசன்' திரைப்படத்தில், வடிவேலு தனது நடிப்புத் திறமையை முழுவதுமாக வெளிப்படுத்தி இருக்கிறார். பொதுவாக வடிவேலு, அவரின் நகைச்சுவை வெளிப்பாடுகள், முகபாவனைகள் மூலம் நம்மைச் சிரிக்க வைத்துப் பார்த்திருக்கிறோம். இதில், அவர் ஒரு அல்சைமர் நோயாளி.
அறிமுகக் காட்சியில் அவர் சங்கிலியால் பிணைக்கப்பட்டு, தனது மகன் என்று நினைக்கும் ஒருவரை அழைக்கிறார். அந்த அந்நியன் ‘தயாளன்’ (ஃபஹத் ஃபாசில்), ஒரு திருடன். அவன் திருட உள்ளே நுழைந்திருக்கிறான். அவன் விரைவாகத் திருடிச் செல்ல நினைக்கும்போது சங்கிலியால் கட்டப்பட்ட மனிதனைப் பார்க்கிறான். அம்மனிதனிடம் அதிகமான பணம் இருக்கிறது. ஞாபக சக்தி இல்லாத அந்த மனிதனுடன் அவன் நேரம் செலவிட்டால் போதும் திருடிவிடலாம். இருவரும் ஒரு சாலைப் பயணம் செல்ல முடிவு செய்கிறார்கள். அப்போது நடைபெறும் விஷயங்கள் படத்தை வியத்தகு முறையில் மாற்றுகின்றன.
அல்சைமர் நோய் என்றால் என்ன? - அல்சைமர் என்பது மிகவும் பொதுவான வகை டிமென்ஷியா. இது நினைவாற்றல் இழப்பு, அறிவாற்றல் வீழ்ச்சியுடன் தொடர்புடையது. மூளையில் அசாதாரண புரதக் குவிப்பால் தூண்டப்படும் நரம்புச் சிதைவு அல்சைமர் உருவாகக் காரணம். இந்தப் புரதப் படிவுகள் நரம்புகளுக்கு இடையிலான தொடர்பைச் சீர்குலைக்கின்றன. செல்களில் வீக்கம், ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. நினைவாற்றல் உருவாவதற்கு அவசியமான ஹிப்போகேம்பஸ் பெரும்பாலும் முதலில் பாதிக்கப்படுகிறது. நோய் அதிகரிக்கும்போது, அது மொழி, பகுத்தறிவு நடத்தையைப் பாதிக்கிறது.
ஆரம்ப நிலை அல்சைமர் நோயைக் கண்டறிவதற்கு அறிவாற்றல் மதிப்பீடுகள், நரம்பியல் பரிசோதனைகள், மேம்பட்ட இமேஜிங் கருவிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய பல அடுக்குப் பரிசோதனைகள் தேவைப்படுகின்றன. MRI, CT, PET ஸ்கேன்கள் பயன்படுத்தப்படுகின்றன. வலுவான குடும்ப வரலாறு உள்ளபோது, மரபணு சோதனையும் அறிவுறுத்தப்படலாம். மருந்துகள் நோயின் வளர்ச்சியை மெதுவாக்கலாம். வழக்கமான உடல் செயல்பாடு, உணவுமுறை போன்றவை ஒட்டுமொத்த மூளை ஆரோக்கியத்தைப் பேணுகின்றன. சமீபத்தில் வெளியாகியுள்ள ‘சய்யாரா' (Saiyaara) எனும் பாலிவுட் திரைப்படத்திலும் கதாநாயகிக்கு மறதி இருப்பது போன்று காட்டப்பட்டுள்ளது.