நலம் வாழ

நலம், நலமறிய ஆவல் 44: ‘பின்’ வெடிப்பின் வலி!

கு.கணேசன்

எனக்கு வயது 38. ஐந்து வருடங்களாக மலம் கழித்தபின் ஆசன வாயில் குடைச்சலும் அரிப்பும் தோன்றுகின்றன. சில நாட்களில் வேறு நேரத்தில்கூடத் தோன்றுகிறது. வேப்பெண்ணெய், தேங்காய் எண்ணெய் வைப்பது போன்றவற்றைச் செய்து பார்த்தும் பலன் இல்லை. அதுவாகவே குணமாகிவிடும் என்று விட்டுவிட்டேன். இந்தப் பிரச்சினை தொடர்கிறது. இதற்கு எவ்வித மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம், எதனால் இந்தப் பிரச்சினை ஏற்படுகிறது?

- செல்வராஜ், மதுரை

ஆசனவாயில் மூன்று பிரச்சினைகள் முக்கியமாக ஏற்படுகின்றன. ஒன்று, மூலம் (Piles). அடுத்தது, ஆசனவாய் வெடிப்பு (Fissure). மூன்றாவது, பவுத்திரம் (Fistula). உங்கள் அறிகுறிகளைப் பார்க்கும்போது, உங்களுடைய பிரதானப் பிரச்சினை ஆசனவாய் வெடிப்பாகத்தான் இருக்க வேண்டும்.

உங்களைப் போன்ற நடுத்தர வயதின ரையும் இளம் வயதினரையும் பாதிக்கிற நோய் இது. ஆசனவாயின் வாய்ப் பகுதியில் பெரும்பாலும் பின்முகட்டில் (Posterior side) நெட்டுக்குத்தலாகக் கண்ணாடியை வைத்துக் கீறியதுபோல் வெடிப்புகள் இருக்கும். அத்தோடு அந்த இடம் ‘அட்டை’ போல் சுருங்கி இருக்கும். அவற்றின் காரணமாக மலம் கழித்த பிறகு ஒரு கொடுமையான வலி மணிக்கணக்கில் படுத்தி எடுக்கும். பலருக்கு மலம் போவதற்கே பயம் ஏற்படும். இதனால் மலச்சிக்கல் தீவிரமாகி நிலைமை இன்னும் மோசமாகிவிடும். சில நேரத்தில் மலத்துடன் சில சொட்டு ரத்தமும் போகும். ஆசன வாயைச் சுற்றி அரிப்பு எடுக்கும். எரிச்சல் உண்டாகும்.

என்ன காரணம்?

ஆசனவாயில் வெடிப்பு ஏற்படுவதற்கு மலச்சிக்கல் தான் முக்கியக் காரணம். மலத்தை அடிக்கடி முக்கி வெளியில் தள்ளும்போது, ஆசனவாயில் வெடிப்புகள் தோன்றுகின்றன. இந்த வெடிப்புகளால் வலி ஏற்படுகிறது; மலத்தைத் தள்ளுவது கடினமாகி விடுகிறது. வலிக்குப் பயந்து, மலம் கழிப்பதைத் தள்ளிப்போட வைக்கிறது. இது மலச்சிக்கலை அதிகப்படுத்திவிடுவதால், அடுத்த முறை மலம் கழிப்பது இன்னும் சிரமம் ஆகிவிடுகிறது. இப்படியான ஒரு வட்டச் சுழற்சிப் பிரச்சினைகளால் வெடிப்புகள் மறைவதற்கு வழியில்லாமல் தொல்லைகளும் பல மாதங்களுக்கு தொடர்கின்றன.

அடுத்து ஒவ்வொரு முறை மலம் கழிக்கும்போதும் ஆசன வாயில் கடுமையான வலி ஏற்படுவதால், அங்குள்ள வால்வுத் தசைகள் இறுக்கம் அடைகின்றன. இதனால் ஆசனவாய் சுருங்கிவிடுகிறது. இது நிலைமையை மேலும் மோசமாக்குகிறது.

சிலருக்கு கிரான் நோய் (Crohn’s disease), பால்வினை நோய் போன்றவை இருக்கும். இவையும் ஆசனவாயில் வெடிப்புகள் ஏற்படுவதைத் தூண்டும். இவற்றில் கிரான் நோய் ஒரு குடல் அழற்சி நோய். உணவு ஒவ்வாமை காரணமாக இது ஏற்படுகிறது. இது ஆசன வாயில் நிரந்தர அழற்சியை ஏற்படுத்தி, வெடிப்புகள் உண்டாகத் துணைபோகிறது. தேவையில்லாமல் அடிக்கடி பேதிக்கு மாத்திரை சாப்பிட்டாலும் இந்த நோய் வருவதுண்டு. மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் கண்ட களிம்புகளை ஆசனவாயில் பூசினாலும் இதே நிலைமைதான்.

அடிக்கடி குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் பெண்களுக்குச் சுகப் பிரசவம் ஆன பிறகு ஆசன வாயில் வெடிப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு. ஆனால், இவர்களுக்கு இந்த நிலைமை திடீரென்றுதான் தோன்றும். நாட்பட்டதாக இருப்பதில்லை. முக்கிய மாக இவர்களுக்கு ஆசனவாயில் அரிப்பு இருக்காது. ஆனால், மலத்துடன் ரத்தம் போகும்.

என்ன பரிசோதனை?

எந்த ஒரு நோய்க்கும் பலசரக்குப் பட்டியல்போல் பல பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சொல்லப்படும் இந்தக் காலத்திலும், ஆசன வாய் வெடிப்புக்கு எனத் தனிப் பரிசோதனை எதுவும் தேவையில்லை! நோயாளியின் ஆசனவாயை நேரில் பார்த்தும், ஆசன வாயில் மருத்துவர் விரலால் பரிசோதித்துப் பார்த்தும்தான் இந்த நோயைக் கண்டுபிடிக்க முடியும்.

வெடிப்பு இருக்கும் இடம், அளவு, நிலைமை இந்த மூன்றும் துல்லியமாகத் தெரிந்தால், இதற்குச் சரியான சிகிச்சையைக் கொடுப்பது எளிது. அதற்கு ‘பிராக்டாஸ்கோப்’ (Proctoscope) எனும் கருவியை ஆசன வாய்க்குள் நுழைத்து மருத்துவர் பார்ப்பதும் உண்டு. ஆனால், இந்தப் பரிசோதனையின்போது நோயாளிக்கு அதிகம் வலி ஏற்பட வாய்ப்புண்டு என்பதால், சில மருத்துவர்கள் இந்தப் பரிசோதனையைத் தவிர்த்துவிடுவார்கள்.

என்ன சிகிச்சை?

இந்த நோய் ஆரம்பநிலையில் இருந்தால், களிம்புகள் மூலமே சரிப்படுத்திவிடலாம். ‘சிட்ஸ் பாத்’ (Sitz bath) எனும் முறையில் ஆசன வாயைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியம். வெடிப்புகள் மறைய ஆன்டிபயாடிக் மருந்துகளும் புரோட்டோசோவா எதிர் மருந்துகளும் வலி நிவாரணிகளும் சிறிது காலத்துக்குத் தேவைப்படும். ஆசன வாயில் வால்வுத் தசைகள் இறுக்கமாக இருந்தால், அதற்கும் களிம்புகள், மாத்திரைகள் தரப்படும்.

இவற்றைத் தொடர்ந்து சில வாரங்களுக்கு இலகுவான பேதி மருந்துகள் சாப்பிட்டும், நார்ச்சத்துள்ள உணவை அதிகப்படுத்தியும், நேரத்துக்கு மலம் கழிக்கும் பழக்கத்தைக் கைக்கொண் டும், மலச்சிக்கலைத் தவிர்த்துவிட்டால், இந்த நோய் மறுபடியும் வராது. நீண்ட தூரப் பயணங்களைத் தவிர்ப்பது, நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதைத் தவிர்ப்பது போன்ற தடுப்பு முறைகளும் கைகொடுக்கும்.

இந்த நோய் மிகவும் நாட்பட்ட தாகவும், மருந்து களிம்புகளுக்குக் கட்டுப்படாததாகவும் இருந்தால், ஆசனவாயை விரித்து விடுதல் (Lord’s dilatation), அங்குள்ள வெடிப்புகளை அகற்றுதல் (Fissurectomy), வால்வுத் தசைகளைச் சரி செய்தல் (Sphincterotomy) போன்ற அறுவைசிகிச்சைகள் தேவைக்கேற்ப மேற்கொள்ளப்படும். இதற்கு லேசர் சிகிச்சையும் உள்ளது. ஆனால், செலவு சிறிது அதிகம்.

SCROLL FOR NEXT