நலம் வாழ

இனிப்பு தேசம் 16: உங்கள் உணவில் உப்பு இருக்கா..?

கு.சிவராமன்

இனிப்பு, உப்பு, கொழுப்பு… இந்த மூன்று கூறுகளைக் கொண்டு, நவீன துரித உணவு வணிகம், உலகின் உடல் ஆரோக்கியத்தைச் சிதைத்தது. புகையால், போதையால் சிதைத்ததைவிடப் பல மடங்கு அதிகம் என்கிறார்கள் உணவு வணிகத்தை உற்றுக் கவனிக்கும் பல அறிஞர்கள்.

அதிக உடல் எடையுள்ள, கடுமையாய்ப் புகைக்கும் பழக்கம் உடைய ஜப்பானியர்களைவிட,  புகைப்பழக்கம் அதிகம்  இல்லாத அமெரிக்க ஐரோப்பிய குண்டர்களுக்கு வரும் நுரையீரல் புற்றுநோய் ஏகத்துக்கும் அதிகமாக இருப்பது ஏன் என ஒரு ஆய்வு நடைபெற்றது. அமெரிக்க ஐரோப்பியரின் இனிப்பு – உப்பு - கொழுப்பு நிறைந்த துரித உணவு வகைகளே என முடிவு வந்தது.

ஜப்பானியர்,  இயல்பிலேயே குறைவான கொழுப்பும் சரியான புரதமும் உள்ள மீனைப் பிரதானமாகவும், வெள்ளைச் சர்க்கரையோ தூள் உப்போ இல்லாத  மரக்கறி உணவையும் அதிகம் எடுப்பதால்,  புகை அவர்களுக்கு நுரையீரல் புற்றை அதிகம் கொடுக்கவில்லை. அதற்காகப் புகைத்துவிட்டு மீன்கறி சாப்பிடச் சொல்வதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். துரித உணவு சாப்பிடுவது என்பது புகைபிடிப்பதைவிட, கோக்கைன் சாப்பிடுவதைவிட, மது அருந்துவதைவிட அதிக ஆபத்து என்பதை உணர வேண்டிய தருணம் இது.

‘ஐயோ மாப்பிள்ளை புகைப்பாரா? அப்போ இந்தச் சம்பந்தம் வேண்டாம்’ எனச் சமூகம் ஒதுக்கியது போல்,  ‘பொண்ணு அடிக்கடி பர்கர் சாப்பிடுமாமே, வேற இடம் பார்க்கலாம்’ எனும் சமூகக் காப்பு இனி வரும். கட்டாயம் வந்தாகவும் வேண்டும்.

துரித உணவும்… நசுங்கும் இதயமும்…

சர்க்கரை நோயில் துரித உணவு வகைகளைத் தூற எறிந்தே ஆக வேண்டும். ஒவ்வொரு துரித உணவிலும் உள்ள உப்பும் கெட்ட கொழுப்பும் அதீத இனிப்பும்தான் சர்க்கரை நோயாளியைப் படுவேகமாக இதய நோயாளி ஆக்குகின்றன. எப்படி?

ஆண்மைக் குறைவு முதல் சிறுநீரக நோய் வரை இனிப்பு நோயில் நடக்கும் நுண்ணிய ரத்த நாளங்களின் பாதிப்புதான் இதற்கும் மிக முக்கியக் காரணம். மிக நுண்ணிய நாளங்கள் உள்ள ஆணுறுப்பினுள் சர்க்கரை நோயால் ரத்தம் செல்வது எப்படிக் குறைகிறதோ, அதே போல மிக நுண்ணிய ரத்த நாளமுள்ள இதயத் தசைக்கும் ரத்தம் சரிவரப் போகாமலிருக்க வாய்ப்புள்ளது.

உடலுறவுச் சிக்கலுக்காக மருந்தைத் தேடி ஓடும் அதே நேரம்,   இதயத் தசையும் தளரத் தொடங்குவதைப் பலர் உணர மறுப்பது வேதனை. அப்படி அவதியுறுவோர், இதயத்தின் இயக்கமும் சரியாக உள்ளதா எனக் குடும்ப மருத்துவரை அணுகித் தெரிந்துகொள்ளுங்கள். அதற்காக, உடனடியாக ஆஞ்சியோவெல்லாம் அவசியமில்லை. அரசாங்கத்தில் இலவசமாகவும், தனியாரில்  நூறு ரூபாய்க்குச் செய்யப்படும் ஈ.சி.ஜி., மிக அற்புதமாய் இதயத்தின் பணியைச் சுட்டிக்காட்டும்.

சர்க்கரை நோயில் ஏற்படும் மாரடைப்பு இன்று மிக அதிகம். அதிலும், மவுனமான வலியற்ற மாரடைப்புதான் அதிகம். இனிப்பு நோய் நாட்பட நாட்பட அல்லது வயோதிகம் வர வர, இதய நோய் ஏற்படும் வாய்ப்பு பிறரைக் காட்டிலும் இனிப்பு நோயருக்கு இருமடங்கு என்கின்றனர் மருத்துவர்கள்.

துவர்ப்பதெல்லாம் உப்பல்ல

எல்லா துரித உணவிலும் மறைந்து நிற்கும் உப்பு மிகப் பெரிய ஆபத்து. அந்த உப்பெல்லாம் கடலிலிருந்து எடுக்கப்படுவதாக ஒருபோதும் எண்ண வேண்டாம்.  உப்புச் சுவையுள்ள வகை வகையான ரசாயனங்களே அவை.

இந்த உப்புக்களுக்கும், அன்று நம் தெருக்களில், ‘உப்பு உப்பேய்..!’ என நலிந்த குரலில் கூவி, படியில் அளந்து விற்ற தூத்துக்குடி  ஏழைத் தாத்தா தந்த உப்புக்கும் ஏராளமான வித்தியாசம் உண்டு. அவரின் கண்ணீரும் கடலின் தண்ணீருமாய் இருந்த அந்த உப்பில் சோடியம் குளோரைடுடன்  நம் சக பயணிகளான கடல்வாழ் உயிரிகளின் அன்பு முத்தங்களும் இணைந்திருந்தன. இன்றைய வணிக உப்போ கனிமங்களின் கலவைதான்!

உள்நாட்டு உணவிலும் உப்பு

அதீதச் சர்க்கரை உள்ள ‘ஹை ஃப்ருக்டோஸ் கார்ன் சிரப்’ (high  fructose corn syrup - HFCS),  கூடவே ‘ட்ரான்ஸ் ஃபேட்’ (trans fat) கொழுப்புக்களும் கூடிய துரித உணவு வகைகள் நுண்ணிய ரத்த நாளங்களைச் சிதைக்கின்றன. தயார்  நிலை புலாலில் உள்ள சோடியம் நைட்ரேட் உப்பு, சாக்லேட்டில் உள்ள எச்.எஃப்.சி.எஸ், சிப்ஸிலும் பர்கரிலும் பீசாவிலும் ஒளிந்துள்ள ‘ட்ரான்ஸ் ஃபேட்’ எல்லாம் சிறிய உதாரணங்கள். இன்னும் ஒரு முக்கிய விஷயம், இவை பன்னாட்டு உணவு வகைகளில் மட்டுமல்ல; உள்நாட்டுப் புளிக்குழம்பு பேஸ்ட், ‘ரெடி டு ஈட் சாம்பார் சாதம்’  போன்றவற்றிலும் சந்தை கட்டி உள்ளதை மறந்துவிடக்கூடாது.

வெள்ளைத் தாமரை இதழ் உலர்த்திய பொடி, இதயம் காக்கும் அற்புதச் சித்த மருந்து. தேயிலையுடன், செம்பருத்தி இதழ் போட்டுச் சாப்பிடும் தேநீர், காலையில் சாப்பிடும் 5-7 பாதாம் பருப்பு, 2 அக்ரோட்டுப் பருப்பு (வால்நட்), சூரியவணக்க மூச்சுப் பயிற்சி கிரியாக்களுடன் கூடிய பிராணாயாமம், மனத்தைச் செம்மைப்படுத்தி அழுத்தங்களை அகற்றும் எளிய தியானப் பயிற்சி, எல்லாவற்றிற்கும் மேலாக நடைப் பயிற்சி ஆகியவை இனிப்பு நோயில் இதயம் காக்கும் முக்கிய நலப் பழக்கங்கள்.

(தொடரும்)

கட்டுரையாளர்,

சித்த மருத்துவர்

தொடர்புக்கு: herbsiddha@gmail.com

SCROLL FOR NEXT