விபத்து, போலியோ போன்றவற்றால் கால்கள் செயலிழந்த ஏழை, எளிய மக்களுக்குச் செயற்கையான கால்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு நாற்காலிகள் ஆகியவற்றை வழங்கி அவர்களின் மறுவாழ்வுக்கு உறுதுணையாக இருந்துவருகிறது சென்னை சூளையில் இயங்கிவரும் ‘ஆதிநாத் அறக்கட்டளை.’1979ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆதிநாத் அறக்கட்டளையின் தற் போதைய தலைவராக மோகன் ஜெயின் உள்ளார்.
சுமார் 40 வருடங்களைக் கடந்து மக்கள் சேவையில் ஈடுபட்டு வரும் ஆதிநாத் அறக்கட்டளை மூலம் இதுவரை 40 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலன் பெற்றிருக்கிறார்கள். கடந்த ஆண்டில் மட்டும் 1 கோடியே 40 லட்சம் ரூபாய் அளவிலான சமூகப் பணிகள் இந்த அறக்கட்டளை மூலம் செய்யப்பட்டுள்ளது.
செயற்கைக் கால்கள்: பொருளாதார வசதியில்லாத குடும்பங்களின் மருத்துவத் தேவைகளை நிவர்த்தி செய்யும் இடமாக ஆதிநாத் அறக்கட்டளை செயல்படுகிறது. செயற்கைக் கால் வேண்டு பவர்களுக்கு இவர்களது அலுவல கத்தில் உள்ள தொழிற்சாலையில் வைத்தே கால் அளவிடப்பட்டுக் குறைந்தது மூன்று மணி நேரத்துக்குள் மருத்துவர்கள் ஆலோசனையுடன் செயற்கைக் கால் பொருத்தப்படுகிறது. செயற்கைக் காலைப் பொருத்திக்கொண்டு நடப்பதில் சிரமம் ஏற்படுகிறதா என்பதைக் கவனித்து, குறைகள் ஏதேனும் இருந்தால் உடனுக்குடன் சரிசெய்யப்படுகிறது.
கண்களுக்கு... பார்வைக் கோளாறுகளுக்கான சிகிச்சைகளும் இங்கே இலவசமாக அளிக்கப்படுகின்றன. தினமும் மதியம் 1.30 முதல் 3.30 வரை அங்கு வரும் பயனாளர்கள் கண் தொடர்பான மருத்துவர்களிடம் பரிசோதித்துக் கொள்ளலாம். கண் அறுவை சிகிச்சை யுடன் பார்வை பாதிப்புள்ளவர்களுக்குக் கண்ணாடிகளும் அளிக்கப்படுகின்றன. ஒவ்வொரு மாதமும் 120 பேருக்குக் கண் அறுவை சிகிச்சையும் இவர்கள் மூலம் செய்யப்படுகிறது. அத்துடன் காது கேளாத குழந்தைகளுக்கும் முதிய வர்களுக்கும் காதுகேட்புக் கருவியும் இலவசமாக வழங்கப்படுகிறது.
பிசியோதெரபி சிகிச்சைகள்: வேலைப் பளு காரணமாக இடுப்பு வலி, மூட்டு வலியுடைவர்களுக்கும், எலும்பு முறிவுப் பிரச்சினை உள்ள வர்களுக்கும் பிசியோதெரபி சிகிச்சை களும் வலி நிவாரண சிகிச்சைகளும் வழங்கப்படுகின்றன. நரம்பியல் தொடர்பான நோய்கள், தோல், பல் போன்ற பிரச்சினைகளுக்கும் சிறப்பு மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகின்றன. மேலும், அலோபதி மருத்துவம் மட்டுமல்லாமல் ஆயுர்வேதம், அக்குபங்சர் போன்ற சிகிச்சைகளும் அளிக்கப்படுகின்றன.
யோகப் பயிற்சிகள்: மன அழுத்தம், பதற்றம் ஆகியவற்றிலிருந்து விடுபடத் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் காலை வேளையில் ஆண்களுக்கும் பெண் களுக்கும் யோகப் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. மருத்துவ உதவிகள் மட்டுமல்லாது மாண வர்களின் தனித் திறன்களை வளர்த் தெடுக்கும் பயிற்சிகளும் இங்கே அளிக்கப்படுகின்றன.
அணுகுவது எப்படி? - ஆதிநாத் அறக்கட்டளையில் உதவி பெற விரும்புகிறவர்கள் சூளையில் உள்ள அந்த அறக்கட்டளையின் அலுவலகத்துக்கு நேரடியாகச் சென்று உரிய தகவல்களை அளித்து மருத்துவ உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம். ஆதிநாத் அறக்கட்டளையில் வழங்கப்படும் அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் இலவச மாக வழங்கப்படுகின்றன. நூற்றுக் கணக்கானவர்களுக்கு மருத்துவ உதவிகளைச் செய்துவரும் ஆதிநாத் அறக்கட்டளையின் இயக்குநர் மோகன் ஜெயினிடம் பேசியபோது, “ஏழைகளுக்குச் செய்யும் உதவி இறை வனுக்குச் செய்வதற்கு ஒப்பானது. இதுவே எங்கள் அறக்கட்டளையின் அடிப்படைக் குறிக்கோள்.
மனிதர் களாகப் பிறந்திருக்கிறோம், இல்லாதவர்களுக்கு நம்மால் முடிந்த அளவு உதவ வேண்டும். இதன் அடிப் படையில்தான் ஆதிநாத் அறக்கட்டளை தொடங்கப்பட்டது. எங்களைத் தேடி வரும் மக்களுக்குத் தினமும் மருத்துவ உதவிகளை வழங்கி வருகிறோம். குறிப்பிட்ட நாளில்தான் உதவி என நாங்கள் செயல்படவில்லை. ஒரு நாளில் குறைந்தது 400 முதல் 500 பேர்வரை எங்கள் அறக்கட்டளைக்கு வருகை தருகிறார்கள். சாதி, மதம் போன்ற வேறுபாடில்லாமல் மருத்துவ உதவிகளைச் செய்து வருகிறோம்.
எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் எங்கள் அறக்கட்டளையைத் தொடர்பு கொண்டு உதவிபெறலாம். எனினும் தமிழ்நாட்டில் உள்ள மக்கள்தான் அதிக எண்ணிக்கையில் உதவி பெற்று வருகிறார்கள். மருத்துவ உதவிகள் மட்டுமல்லாது, பெண்கள் சுய வருமானத்தை ஈட்டிக்கொள்ளத் தையல் இயந்திரம், வேலை எனப் பல உதவிகளையும் செய்து வருகிறோம். மக்கள் சேவைக்காக மாதம் ரூபாய் 18 லட்சம் வரை செலவு செய்து வருகிறோம்.
எங்கள் அறக்கட்டளையைத் தேடி வருபவர்களை ஒருபோதும் வெறுங் கையோடு அனுப்பியது இல்லை. மக்களிடம் எங்கள் அறக்கட்டளை பற்றிய தகவல் சென்றடைய வேண்டும். அதன் மூலம் இன்னும் கூடுதலான வர்கள் எங்களிடம் இலவசமாக மருத்துவ சிகிச்சைகளைப் பெற வேண்டும்” என்றார்.
ஆதிநாத் அறக்கட்டளையைத் தொடர்புகொள்ள: 044-43807077 | trustadinath@gmail.com
- indumathyg@hindutamil.co.in