நலம் வாழ

மூலிகையே மருந்து 09: சிறுபீளையின் பெரும்பயன்!

டாக்டர் வி.விக்ரம்குமார்

பொ

ங்கல் பண்டிகையின்போது ‘காப்புக்கட்டும்’ மூலிகைகளுள் சிறுபீளை முக்கியமானது. நமது ஆரோக்கியத்துக்கு சிறந்த காப்பாக அமையும் என்பதை உணர்த்துவதற்காகத்தான் ‘பண்டிகை காப்புக்கட்’டில் சிறுபீளைக்கு இடம் கொடுத்தது தமிழ்ச் சமுதாயம்.

‘கடுமையான காற்றுக்கும் உதிராமல் இருக்கும் பூ’ (வளிமுனைப் பூளை) என்று வலிமைக்கு எடுத்துக்காட்டாக சிறுபீளையை அகநானூறு குறிப்பிடுகிறது. ‘வரகரசி சோறுபோல பூளைப் பூ காட்சியளிக்கும்’ என பெரும்பாணாற்றுப்படை பதிவுசெய்துள்ளது.

பெயர்க் காரணம்: பொங்கப்பூ, பூளாப்பூ, சிறுகண்பீளை, பீளைசாறி, கற்பேதி, பாஷாணபேதி, கண்பீளை என சிறுபீளைக்கு நிறைய பெயர்கள் உண்டு. கற்களைக் கரைக்கும் வன்மையுடையதால் ‘கற்பேதி’ என்றும், கண்களிலிருந்து வெளியாகும் பீளைபோல இதன் பூக்கள் இருப்பதால் ‘கண்பீளை’ என்றும் பெயர் உருவானது.

அடையாளம்: சில அடிகள் உயரம்வரை நிமிர்ந்து வளரக்கூடிய சிறுசெடி வகை இது. இலைகளுக்கு இடையில் சிறுசிறு வெள்ளை நிறப் பூக்களைக் கொண்டிருக்கும். இலை, தண்டில் வெள்ளை நிற ரோம வளரிகள் காணப்படும். ‘ஏர்வா லானாட்டா’ (Aerva lanata) என்ற தாவரவியல் பெயர்கொண்ட சிறுபீளை ‘அமரந்தஸியே’ (Amaranthaceae) குடும்பத்துக்குள் அடங்கும். டானின் (Tannins), டிரைடெர்பீன் (Triterpenes), ஏர்வோஸைடு (Aervoside), ஏர்வைன் (Aervine), சுண்ணாம்புச்சத்து (Calcium), இரும்பு (Iron), வனிலிக் அமிலம் (Vanillic acid) போன்ற தாவர வேதிப்பொருட்கள் சிறுபீளையில் இருக்கின்றன.

உணவாக: சிறுபீளையோடு பனைவெல்லம் சம அளவு சேர்த்தரைத்து, நெல்லிக்காய் அளவு எடுத்து பாலில் கலந்து குடித்துவர, சிறுநீர் எரிச்சல் உடனடியாகக் குறையும். சிறுபீளை, நெருஞ்சில், மாவிலங்கப்பட்டை, வெள்ளரி விதை ஆகியவற்றை சேர்த்துத் தயாரிக்கப்படும் குடிநீரை அருந்த, சிறுநீர் நன்றாகப் பிரியும். சிறுநீர்ப்பெருக்கி செய்கை மட்டுமின்றி சிறுநீரகக் கற்களை கரைக்கும் (Lithotriptic) வன்மையும், சிறுநீரகப் பாதையில் உருவாகும் கிருமித் தொற்றுக்களை அழிக்கும் தன்மையும் சிறுபீளைக்கு உண்டு.

மருந்தாக: ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் சிறுபீளையானது பேஸில்லஸ் சப்டிலிஸ் (Bacillus subtilis), ஸ்டஃபிலோகாக்கஸ் ஆரெஸ் (Staphylococcus aureus) போன்ற பாக்டீரியாவுக்கு எதிராகச் செயல்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஈரல் தேற்றியாகவும் ஒவ்வாமையைத் தூண்டும் காரணிகளை அழிக்கும் சக்தியாகவும் சிறுபீளை செயல்படுகிறது. ரத்தத்தில் அதிகரித்திருக்கும் யூரியா, கிரியாடினின் அளவைக் குறைக்கும் தன்மை இதற்கு உண்டு என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடலில் நடைபெறும் வளர்சிதை மாற்றத்தைத் துரிதப்படுத்தி, உடலில் தேங்கும் கழிவை உடனடியாக வெளியேற்றும்.

‘அறுகு சிறுபீளை நெல்லோடு தூஉய்ச் சென்று…’ எனும் சங்கப்பாடல் வரி, சிறுபீளை, அறுகம்புல் பொடியைச் சாதத்தில் கலந்து சாப்பிட, இடுமருந்தால் ஏற்பட்ட பாதிப்புகள் முறியும் என்பதை பதிவிடுகிறது. நஞ்சுமுறிவு செய்கை குறித்தும், சிறுநீரகங்களில் அதன் செயல்பாடு குறித்தும் ஆழமான ஆய்வு, பாடலின் உண்மையை விளக்கும்.

வீட்டு மருந்தாக: அரிசிக் கஞ்சியில் சிறுபீளையைச் சேர்த்து கொதிக்க வைத்து ‘சூப்’ போல குடித்துவர உடலுக்கு வலிமையைக் கொடுக்கும். பிரசவ காலத்தை நெருங்கும் கர்ப்பிணிகளின் உடல் பலத்தைக் கூட்டுவதற்காக சிறுபீளைக் கஞ்சி வழங்கப்படுகிறது.

குழந்தைகளைக் குளிப்பாட்டும் நீரில் சிறுபீளை சமூலத்தை (முழு தாவரம்) போட்டுக் கொதிக்க வைத்துப் பயன்படுத்தினால், குழந்தைகளுக்குச் சுரம் தாக்காது என்பது கிராமங்களில் நிலவும் நம்பிக்கை. சிறுபீளையை உலரவைத்து தலைபாரம் உள்ளவர்கள் புகை போடவும் செய்கின்றனர்.

பாம்புக்கடிக்கான மருத்துவத்தில், சிறுபீளைச் சாறு அனுபானங்களில் ஒன்றாகப் பயன்படுத்தப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறுபீளைக் குடிநீரை இருமலைக் குறைக்கவும் தொண்டைப் புண்களைக் குணப்படுத்தவும் பயன்படுத்துகின்றனர். இதன் வேர்க் கஷாயத்தை கல்லீரல் சார்ந்த தொந்தரவுகளுக்கு ராஜஸ்தானிய பழங்குடிகள் பயன்படுத்துகின்றனர்.

பீளை வகைகளில் சிறுபீளை தவிர, பெரும்பீளை என்றொரு வகையும் உண்டு. வீக்கத்தைக் குறைப்பதற்கு பெரும்பீளையை குடிநீரிட்டுப் பருகலாம். மருத்துவரின் ஆலோசனைப்படி சிறுபீளையை அருந்தும் நாள் கணக்கு, அளவை அமைத்துக்கொள்வது நல்லது.

இத்தகைய சிறப்புடைய சிறுபீளையை சிறுபிள்ளைத்தனமாக ஒதுக்கலாமா?

கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com

SCROLL FOR NEXT