ரத்த நாளங்கள்போல, சிறுநீரக நெப்ரான்கள்போல, இனிப்பு நோயில் பாதுகாக்க வேண்டிய முக்கிய விஷயம் புற நரம்புகள். ரத்தச் சர்க்கரை அளவு கட்டுக்குள் இல்லாதபோது பெரும்பாலோருக்கு வரும் முக்கியச் சிக்கல் கால் பாதம், உள்ளங்கையில் வரும் எரிச்சலுடன் கூடிய வலி. சில நேரத்தில் தீ சுட்டது போன்ற எரிச்சல் அல்லது பஞ்சில் நடப்பது போன்ற உணர்வு. இதை சர்க்கரை நோயின் புற நரம்புத் தாபித நோய் (Diabetic peripheral neuropathy) என்கின்றனர்.
ஆரம்பத்தில் சற்று லேசாகத் தொடங்கினாலும், கொஞ்சம் உதாசீனப்படுத்திவிட்டால், இந்தச் சிக்கல் நாள்பட்ட அவதியைத் தந்துவிடும். சித்த மருத்துவத்தில் இதை ‘கரபாத சூலை’ எனச் சரியான பெயர்க்காரணத்துடன் வெகுகாலம் முன்பே அழைத்திருக்கிறார்கள்.
நரம்பு செல்கள் அனைத்தும் ‘வேதிப்பொருட்கள் மூலமே செய்திகளைப் பரிமாறிக்கொள்கின்றன’ என்பதைப் பள்ளிக் காலத்தில் படித்தோம் அல்லவா? அந்தப் பரிமாற்றம் குலைவதில்தான் இந்தப் புற நரம்புத் தாபிதம் உருவாகிறது.
ஐந்து கிலோ மீட்டர் எனும் கணக்கில், தினசரி நடைப்பயிற்சியை விடாது தொடர்ச்சியாகச் செய்யும் இனிப்பு நோயினருக்கு, புற நரம்புத் தாபிதம் பெரும்பாலும் வருவதில்லை. கூடவே பிராண ஓட்டத்தை உடலெங்கும் சமன்படுத்தும், பிராணாயாம –யோகாசனப் பயிற்சி செய்வோருக்கு புற நரம்புகள் பாதுகாப்பாகவே இருக்கும்.
உலக சுகாதார நிறுவனம் முதல் அனைத்து ஆய்வாளர்களும் அங்கீகரிக்கும் ‘ரேண்டமைஸ்டு கிளினிக்கல் டிரையல்’ (Randomised Clinical Trial) எனப்படும், நோயாளிகளிடம் நடத்தப்படும் சோதனையில், இதுவரை உலகெங்கும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற 13 பரிசோதனைகளில், ‘அக்யூபங்சர்’ முறை நீரிழிவு நோயில் ஏற்படும் புற நரம்புத் தாபித வலியைக் குறைப்பதை அறிந்திருக்கிறார்கள்.
எனவே, வரும் முன் காக்க நடைப்பயிற்சி செய்யுங்கள். மூச்சுப் பயிற்சி செய்யுங்கள். லேசாக ஆரம்பிக்கும் போதே யோகாசனப் பயிற்சியை அல்லது அக்யூபங்சர் பயிற்சியை முறையாகப் பயின்ற மருத்துவர்களின் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்ளுங்கள். நிச்சயம் பாதங்களை உறுதியாகப் பாதுகாக்க முடியும்.
சரி, இதற்கு என்ன மூலிகை பயன்படும்? அமுக்கரா கிழங்கு. சித்த மருத்துவத்தின் மிக முக்கியமான மூலிகை. ‘இந்தியன் ஜின்செங்’ (Indian ginseng) என உலக மூலிகை வணிகத்தில், இதற்குச் செல்லப்பெயரும் உண்டு. அமுக்கரா கிழங்கைச் சேகரித்து, சுத்தம்செய்து, புட்டு அவிப்பதுபோல, இதைப் பாலில் இட்டு புட்டு அவியல்செய்து அவசியப்படுவோருக்கு ஆயிரம் ஆண்டுகள் பரிமாறியுள்ளது சித்த மருத்துவம். இந்த அமுக்கரா கிழங்குச் சூரணத்தைச் சித்த மருத்துவரிடம் பரிந்துரை பெற்று பயன்படுத்தும்பட்சத்தில், புற நரம்புத் தாபிதம் நீங்கும். கூடுதல் பலனாக, உற்சாகம் பீறிடும். உடல் வலியும் போகும்.
தொட்டாற்சிணுங்கி நாம் மறக்க முடியாத ஒரு மூலிகை. சிறுபிள்ளையாக இருக்கும்போது ஓடிப்போய் அதன் இலைகளைத் தொட, அவை வெட்கி நாணி, இலைகளை மூடிக்கொள்ளும். இந்தக் காட்சி ‘வாட்ஸ் ஆப் தலைமுறை’ அறியாதது. வரப்பு ஓரத்து தலைமுறைக்கு அது வாழ்வோடு ஒட்டிய கவிதை. அது வெறும் விளையாட்டுச் செடியல்ல. நரம்புக்கு உரம் சேர்க்கும் மூலிகை. இது நீரிழிவு நோயின் புற நரம்புத் தாபித நோய்களில் பெரிதும் பயன் அளிக்கும்.
கூடுதல் செய்தி… தற்போது ஆரம்பகட்ட பார்கின்சன் எனும் நடுக்குவாத நோயிலும்கூட இதன் பயன் ஆராயப்பட்டு, பயன் தருவது பற்றிப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். கூடவே ஓரிதழ்தாமரை, குறுந்தொட்டிவேர், வாலுளுவை அரிசி என நீரிழிவு நோய் புற நரம்புத் தாபிதத்துக்குப் பயன்படும் மூலிகைப் பட்டியல் நிறையவே உண்டு.
சரி. உணவில் என்ன செய்ய முடியும்? ‘உயிர்ச்சத்து பி12 சரியாக இருக்க வேண்டுமே!’ என்கிறார்கள். குறிப்பாக, பி12 துளிகூட காய்கறிகளில் இல்லை. அதனால், சைவ உணவு சாப்பிடுவோருக்கு பி12 பஞ்சம் நிச்சயம் உண்டு என்கிறது நவீன உணவு அறிவியல்.
பாலில் கொஞ்சம், கோழி ஈரலில் கூடுதலாய் எனப் புலால் வழிப் பரிமாறலில் பி12 சத்து நிறையவே கிடைக்கும். முருங்கையும் பொன்னாங்கண்ணிக் கீரையும் புற நரம்பைப் பாதுகாக்கப் பயன்படும் இரு முக்கிய கீரைகள் என்பதால் அவற்றில் தஞ்சமடையலாம்.
எளிய பாதப் பயிற்சி
சாதாரணமாகச் சேரில் உட்கார்ந்து தொலைக்காட்சி பார்க்கும்போது, காலடியில் ஒரு துண்டை விரித்து, அதன் மீது காலை வைத்து, இரு காலின் விரல்களால் துணியைக் கவ்வி நகர்த்தும் எளிய பயிற்சியை நோயுள்ளவர் கண்டிப்பாகச் செய்ய வேண்டிய ஒன்று. இப்பயிற்சி கால், விரல், கெண்டைக்கால் தசைகளைத் தூண்டி, பாதங்களில் ரத்த ஓட்டத்தைத் துரிதப்படுத்தும். புற நரம்பில் வரும் தாபித்ததைக் குறைக்க அது உதவும்.
பக்திப் பரவசத்தில், கொதிக்கும் வெயிலில், கற்கள் பதிக்கப்பட்ட பிரகாரத்தில் சுற்றுவது, பூமிதிக்கும் சடங்கில் கடவுளை நோக்கி காதலுடனோ கதறலுடனோ இறங்குவது பேராபத்து. இவை எல்லாம் ஆறாப் புண்ணை, புற நரம்புத் தாபிதம் உள்ள பாதங்களில் உருவாக்கிவிடும். ஆதலால் கடவுளிடம்கூட, ஆற அமர அன்பு செலுத்துங்கள். இனிப்பு தேசத்தின் கட்டாயத் தேவை இது!
(தொடரும்)
கட்டுரையாளர், சித்த மருத்துவர்
தொடர்புக்கு: herbsiddha@gmail.com