நலம் வாழ

நலம், நலமறிய ஆவல் 39: கழுத்து வலி போக்கும் கால்சியம்!

கு.கணேசன்

எங்கள் அப்பாவுக்கு 55 வயதாகிறது. நடப்பதற்குச் சிரமமாக இருப்பதால், மருத்துவரிடம் அழைத்துச் சென்றோம். கழுத்து எலும்பு தேய்மானம் அடைந்திருப்பதாக எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்துப் பார்த்தபோது சொன்னார்கள். இதற்கு என்ன உணவுப் பழக்கம் இருந்தால் விரைவில் குணமடையும்? இந்த நோய் பற்றிக் கூடுதல் தகவல் தெரிவியுங்கள். உங்கள் பதிலுக்குக் காத்திருக்கிறோம்.

- சி. சிவசங்கர், மின்னஞ்சல்.

மத்திய வயதுள்ளவர்களுக்கும் அதற்கு மேல் வயதுள்ளவர்களுக்கும் கழுத்துவலி வருவதற்கு முக்கியக் காரணம், கழுத்தெலும்பு தேய்மானம். ‘செர்விகல் ஸ்பாண்டிலைட்டிஸ்’ (Cervical Spondylitis) என்பது இதன் மருத்துவப் பெயர். முள்ளெலும்புகளுக்கு இடையில் உள்ள ஜவ்வு தேய்ந்துபோவது அல்லது விலகிவிடுவது போன்ற காரணங்களாலும் கழுத்துவலி வருவது உண்டு.

பொதுவாக நாற்பது வயதில் இந்த ஜவ்வு தேயத் தொடங்கும். இதற்கு ஜவ்வுகளில் நீர்ச்சத்து குறைவதும், எலும்புகளில் கால்சியம் சத்து குறைவதும் முக்கியக் காரணங்கள். இதனால், எலும்புகள் மெலிந்து, வலுவிழந்துவிடும். இவ்வாறு வலுவிழந்த எலும்புகள் வழக்கமான தசைகளின் அழுத்தம் காரணமாக, விரைவிலேயே தேய்ந்துவிடும். ஜவ்வு விலகியிருந்தால், அது கைகளுக்கு வரும் நரம்புகளை அழுத்தும். அப்போது கழுத்தில் மட்டுமல்லாமல் கைகளுக்கும் வலி பரவும். சில நேரம் வயதானவர்களுக்கு கழுத்தெலும்பில் எலும்பு முடிச்சுகள் (Osteophytes) வளரும். இதனாலும் கழுத்து வலி வரக்கூடும்.

இப்போதெல்லாம் பலரும் இரு சக்கர வாகனங்களை ஓட்டிச் செல்லும்போதும் செல்போனில் பேசுகிறார்கள். அப்போது கழுத்தை ஒரு பக்கமாகச் சாய்த்துக்கொண்டு பேசுகிறார்கள். இந்தத் தவறான பழக்கம் நாளடைவில் கழுத்துவலியை ஏற்படுத்துகிறது.

குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் அடிக்கடி பயணிப்பதும் கழுத்துவலியைச் சீக்கிரத்தில் கொண்டுவந்துவிடும். உடலுழைப்பும் உடற்பயிற்சியும் இல்லாதவர்களுக்குக் கழுத்துத் தசைகள் சீக்கிரத்தில் இறுகிவிடும். இதுவும் 50 வயதில் நிகழும். புகைபிடிக்கும் பழக்கம் இருந்தாலோ உடற்பருமன் இருந்தாலோ கழுத்துவலி சீக்கிரத்தில் வந்துவிடும்.

கழுத்துவலிக்கு இன்னொரு காரணம் இது: வயதாக ஆக கழுத்துப் பகுதியில் உள்ள தசைகள் விரைவில் சோர்ந்து போகும். அப்போது கழுத்தை அந்தத் தசைகளால் தாங்கிப் பிடிக்க முடிவதில்லை. அதன் வெளிப்பாடாகக் கழுத்துவலி வரும். அதிக சுமையைத் தலையில் தூக்குவது, நீண்ட நேரம் கழுத்தை அசைக்காமல் ஒரே நிலையில் வைத்துக்கொள்வது போன்றவை இந்த மாதிரி கழுத்துவலிக்குப் பாதை போடும்.

இந்த நோயின் ஆரம்பத்தில் கழுத்தில் மட்டும் வலி ஏற்படும். பிறகு தோள்பட்டைக்கு வலி பரவும். கைகளில் குடைவதுபோல் வலிக்கும். விரல்கள்வரை வலி பரவக்கூடும். சிலருக்குக் கை, விரல்கள் மரத்துப்போவதும் உண்டு. நாளாக ஆக கழுத்தைத் திருப்பும்போது கழுத்துவலியுடன் தலைசுற்றலும் ஏற்படும். நடப்பதற்குச் சிரமமாக இருக்கும். உங்கள் அப்பாவுக்கு உள்ள நிலைமை இதுதான் எனத் தெரிகிறது.

கழுத்தை எக்ஸ்ரே, சி.டி. ஸ்கேன் அல்லது எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்துப் பார்த்து நோயைப் புரிந்துகொள்ளலாம்.

ஆரம்பநிலையில் உள்ள கழுத்துவலியைச் சாதாரண வலி மாத்திரைகளால் குணப்படுத்திவிடலாம். பிரச்சினை நீடிக்கிறது என்றால் மருத்துவரின் ஆலோசனைப்படி கழுத்தில் பட்டை அணிந்துகொள்வது, கழுத்துக்கு ‘ட்ராக்ஷன்’ போட்டுக்கொள்வது, பிசியோதெரபி ஆகியவை உரிய பலன் தரும். சிலருக்குக் கழுத்தெலும்பில் அறுவை சிகிச்சையும் தேவைப்படலாம்.

புரதம், கால்சியம், வைட்டமின்கள், தாதுக்கள் மிகுந்த பால், பால் பொருட்கள், மீன், முட்டை, இறைச்சி, காய்கறி, பழங்களை உட்கொள்ள வேண்டும். கொள்ளு, சோயா பீன்ஸ், உளுந்து, பீட்ரூட், அவரை, துவரை, பட்டாணி, காலிஃபிளவர், வெங்காயம், வெண்டைக்காய், வெந்தயம், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, தண்டுக்கீரை, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, எலுமிச்சை, திராட்சை போன்றவற்றில் கால்சியம் மிகுந்துள்ளது. இந்த உணவு வகைகளில் ஒன்றைத் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

# எப்போதும் நேராக நிமிர்ந்து உட்காரவும் நிற்கவும் நடக்கவும் பழகிக்கொள்ளுங்கள்.

# பேருந்துகளில் பயணம் செய்யும்போது முடிந்தவரை பின் இருக்கையில் உட்கார்ந்து பயணம் செய்வதைத் தவிருங்கள். பயணங்களில் உட்கார்ந்துகொண்டே உறங்குவதைத் தவிருங்கள். முடியாதபோது அல்லது அவசியம் ஏற்படும்போது தலையைப் பின்பக்கமாக சாய்த்துக்கொண்டு உறங்குங்கள்.

# ஒன்றரை மணி நேரத்துக்கு மேல் தொடர்ந்து தொலைக்காட்சி பார்க்க வேண்டாம்.

# கணினியில் வேலை செய்கிறவர்கள் அதன் திரை, கண் பார்வைக்கு நேர்மட்டத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். தலையைத் தூக்கியவாறு திரையைப் பார்க்கவேண்டும் என்றிருந்தால் கழுத்துவலி உறுதி.

# கழுத்து அதிக நேரம் ஒரே நிலையில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். உதாரணமாகப் படிக்கும்போதும் கணினியைப் பார்க்கும்போதும் தொலைக்காட்சியைப் பார்க்கும்போதும் 20 நிமிடங்களுக்கு ஒருமுறை கழுத்தை வேறு பக்கம் திருப்பி ஓய்வு தர வேண்டும்.

# தலையைக் குனிந்துகொண்டே அதிக நேரம் வேலை செய்யக் கூடாது. உதாரணம் - தையல் வேலை செய்கிறவர்கள்.

# மிருதுவான, சிறிய தலையணையைப் பயன்படுத்துங்கள். உங்களுக்கு எப்படிப் படுத்துக்கொண்டால் கழுத்தும் தலையும் வசதியாக இருக்கிறதோ, அப்படிப் படுத்து உறங்குங்கள்.

# அளவுக்கு அதிகமான சுமையைத் தூக்காதீர்கள்.

# உடல் பருமன் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

# நடத்தல், நீந்துதுல், சைக்கிள் ஓட்டுதல் போன்ற உடற்பயிற்சிகளில் ஒன்றை தினமும் கடைப்பிடியுங்கள்.

# கழுத்துத் தசைகளுக்கு வலுவூட்டும் தசைப்பயிற்சிகளை அல்லது யோகாசனப் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்வதும் நல்லது.

# மோசமான சாலைகளில், ஸ்பீடு பிரேக்கர்களில் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும்போது வேகத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

‘நலம், நலமறிய ஆவல்' கேள்வி - பதில் பகுதியில் பதில் அளிக்கிறார் பிரபல மருத்துவ எழுத்தாளர் டாக்டர் கு. கணேசன். முக்கியமான மருத்துவச் சந்தேகங்களை

வாசகர்கள் இப்பகுதிக்கு அனுப்பலாம்.

மின்னஞ்சல்: nalamvaazha@thehindutamil.co.inமுகவரி: நலம், நலமறிய ஆவல்,

நலம் வாழ, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002.

SCROLL FOR NEXT