13
வயதிலேயே குடிப்பழக்கம். 16 வயதில் கால்பந்து விளையாட்டில் அறிமுகம். 17 வயதில் மருத்துவ மாணவர். 19 வயதில் புரொஃபஷனல் கால்பந்து விளையாட்டு வீரர். 20 வயதில் திருமணம். 21 வயதில் தந்தை. 25 வயதில் பிரேஸில் கால்பந்து அணிக்கு கேப்டன். 30-களில் சர்வாதிகாரத்துக்கு எதிரான போராளி. 57 வயதில் மரணம். இன்றைக்கு அவர் ஒரு ‘கல்ட் ஹீரோ!’
சாமானியர்களைப் போல எண்களில் வாழ்ந்தவர் அல்ல, டாக்டர் சாக்ரடீஸ். எண்ணம் போல் வாழ்ந்தவர். அவர் சந்தித்த சிக்கல்களுக்கும் உயர்வுகளுக்கும் அதுவே காரணமாக இருந்தது.
உலகக் கால்பந்து வரலாற்றில் பிரேஸில் நாட்டுக்குத் தனி இடம் உண்டு. பீலே தொடங்கி, ஜீக்கோ, கரின்சா, ரொனால்டோ, ரொனால்டினோ, ரிவால்டோ, நெய்மார் வரை எத்தனையோ நட்சத்திர கால்பந்து வீரர்களை உருவாக்கிய நாடு அது. இந்த வீரர்களின் பட்டியலில், டாக்டர் சாக்ரடீஸுக்கு மிக முக்கியமான இடம் உண்டு. ஏனென்றால், அவர்தான், பிரேஸில் கால்பந்தாட்டத்தில் ஜனநாயகத்தன்மையைக் கொண்டு வந்தவர்!
வரி ஆய்வாளராக இருந்த ராய்முண்டோவுக்குத் தலைமகனாகப் பிறந்தார் சாக்ரடீஸ். ராய்முண்டோவுக்குப் புத்தக வாசிப்பில், அதிலும் தத்துவஞானி சாக்ரடீஸின் தத்துவ விசாரங்களில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அதன் காரணமாகவே தன் முதல் மகனுக்கு சாக்ரடீஸ் எனப் பெயரிட்டார்.
சிறுவயது முதலே முழு நேர கால்பந்தாட்ட வீரராக இருக்கவே விரும்பினார் சாக்ரடீஸ். ஆனால் அவரை மருத்துவராக்கி அழகு பார்க்க வேண்டும் என்பது அவரது தந்தையின் விருப்பம். தந்தையின் கனவைத் தட்ட முடியவில்லை. தன்னுடைய கனவையும் புறம்தள்ள முடியவில்லை. தேர்வு சமயத்தில், உள்ளூர் கால்பந்து கிளப் போட்டிகள் நடைபெறும். அந்தப் போட்டிகளில் விளையாடச் சென்றால், படிப்பு பாதிக்கும். போகவில்லையென்றால், அணியில் தன்னுடைய நிலை கீழிறங்கும். இளமையில் அவரை மிகவும் அலைக்கழித்தது இந்தப் பிரச்சினைதான்.
இறுதியில், தந்தையின் ஆசை நிறைவேறியது. டாக்டர் ஆனார் சாக்ரடீஸ். மருத்துவப் பயிற்சிக் காலத்தில், பிரேஸிலின் ஊரகப் பகுதிகளுக்குச் சென்று மருத்துவம் பார்த்தார். வார இறுதியில் தன் ஊருக்கு வந்து கால்பந்து விளையாடிவிட்டுச் செல்வார். உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியில் விளையாட வேண்டும் என்பதுதான் அவர் கொண்டிருந்த லட்சியம். அது நிறைவேற வேண்டுமானால், முழு நேரக் கால்பந்தாட்ட வீரராக மாறி, ‘கிளப்’ போட்டிகளில் விளையாட வேண்டும். எனவே சில காலம் கழித்து, மருத்துவத் தொழிலைக் கைவிட்டு, புரொஃபஷனல் ஃபுட்பாலராக மாறினார்.
மிகவும் வெப்பமான நாடு பிரேஸில். கோடைக்காலத்தில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேலே வெப்பம் இருக்கும். குளிர்காலத்தில் 80 டிகிரிக்கும் மேலே இருக்கும். இப்படியான ஒரு தேசத்தில், தண்ணீரைப் போல பீர் குடிப்பதும் சகஜமான ஒரு நிகழ்வு. சிறியவர், பெரியவர் என்ற வித்தியாசமில்லாமல் எல்லோரும் பீர் குடிப்பவர்களாக இருந்தார்கள். யாரும் அதைக் கண்டிக்கவில்லை. சாக்ரடீஸுக்கு அப்படித்தான் குடிப்பழக்கம் ஏற்பட்டது.
குடிப்பழக்கம் மட்டுமல்ல, புகைப்பிடிக்கும் பழக்கமும் அவரிடம் இருந்தது. அவ்வளவுதானா என்றால், இல்லை. ஆறடி உயரம், கூர்மையான பார்வை, அளவான தாடி, சுருட்டைத் தலைமுடி, ஒல்லியான உடல் என அவர் வந்து நிற்பதைப் பார்த்தால், கிரேக்கப் புராணத்திலிருந்து வந்த கடவுளோ என்று நினைக்க வைக்கும் அளவுக்கு அவரது நடை, உடை, பாவனைகள் இருந்தன. எனவே அவருக்கு நிறைய ரசிகைகளும் இருந்ததில் ஆச்சரியமில்லை. அவர்களில் பலருடன் தொடர்பு வைத்திருந்தார்.
ஆனால் இந்தக் காரணங்களால், ‘அவர் ஒரு சிறந்த வீரர் இல்லை’ என்ற விமர்சனம், அவர் வாழ்ந்த காலத்திலோ அல்லது மறைந்த பிறகோ வரவேயில்லை. ஏனென்றால், மைதானத்தில் அவர் காட்டிய ஈடுபாடு. கால்பந்தை, ஒரு போட்டியாக அல்லாமல், மன மகிழ்ச்சிக்காக விளையாடியவர் அவர். அதனால், பயிற்சி ஆட்டங்களுக்குச் செல்வதை வெறுத்தார். இது, அவரது அணியின் பயிற்சியாளர்களையும், அவர் சார்ந்த கிளப் மேலாளர்களையும் கோபப்படுத்தியது. ‘என்னைக் கட்டாயப்படுத்தினால் நான் விளையாடவே வரமாட்டேன்’ என்று சாக்ரடீஸ் எதிர்ப்புக் காட்டியதால், அவர்கள் அடங்கிப் போனார்கள். சாக்ரடீஸிடம் இருந்த இயல்பான திறனால் ஈர்க்கப்பட்ட அவர்கள், அவருக்கு மட்டும் பயிற்சி ஆட்டங்களிலிருந்து விலக்கு அளித்தார்கள்.
1982-ல், ‘ஃபிஃபா’ உலகக் கோப்பைப் போட்டியில் விளையாட வாய்ப்புக் கிடைத்தது. விளையாட மட்டுமா..? அந்த அணிக்கே அவர்தான் கேப்டன்! அந்தப் போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதற்காக, புகைப்பழக்கத்தை விட்டார் சாக்ரடீஸ். எவ்வளவு சிறப்பாக விளையாடியபோதும் காலிறுதியில் இத்தாலியிடம் அவர்கள் தோல்வியடைந்தார்கள்.
தன் கால்பந்து வாழ்க்கையின் மிக முக்கியமான பகுதியை ‘கொரிந்தியன்ஸ்’ என்ற கிளப்பில் விளையாடிக் கழித்தார் சாக்ரடீஸ். 1978 முதல் 1984 வரை அங்குதான் இருந்தார். அந்தக் காலகட்டத்தில், பிரேஸிலில் சர்வாதிகாரம் உச்சத்தில் இருந்தது. பெரும்பாலும், கால்பந்து ‘கிளப்’களை அரசாங்கத்தைச் சேர்ந்தவர்களே நடத்தியதால் ஆட்சியில் இருந்த சர்வாதிகாரம், ‘கிளப்’களிலும் பிரதிபலித்தது.
குறைந்த சம்பளம், போட்டிகளின்போது வீரர்களைத் தனி அறையில் அடைத்து வைப்பது, கிளப் மேனேஜர்களை எதிர்க்கும் வீரர்களை ஓரம் கட்டுவது, அந்த வீரர்களை வேறு ‘கிளப்’களில் சேரவிடாமல் தடுப்பது என கொத்தடிமைகள் போல வீரர்கள் நடத்தப்பட்டனர். இதற்கு எதிராக, ‘கொரிந்தியன்ஸ் டெமாக்ரஸி’ என்ற இயக்கத்தைத் தொடங்கினார் சாக்ரடீஸ். பிறகு அந்த நிலைமைகள் மாறின. அந்த இயக்கம், ‘கிளப்’பைத் தாண்டி, அரசியலிலும் கிளை பரப்பியது.
1989-ல் கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, மருத்துவத் தொழிலைத் தொடர்ந்தார். அரசியலிலும் ஈடுபட்டார். நாட்டில் தேர்தல் நடத்தப்பட்டு, ஜனநாயக முறையில் அதிபர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார். ‘அப்படி ஜனநாயக முறையில் அதிபர் தேர்வு செய்யப்படவில்லை என்றால், நான் இத்தாலிக்குச் சென்று விடுவேன்’ என்று முழங்கினார். அந்த அளவுக்கு மக்களிடம் அவருக்குச் செல்வாக்கு இருந்தது.
அரசியல் ரீதியாக, அவரது முழக்கம் போதிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லையென்றாலும், இதர கால்பந்து கிளப்களில் இருந்த சர்வாதிகாரப் போக்கும் மாறியது. அதற்கு, இன்றுள்ள வீரர்களும், இனி வரும் வீரர்களும் அவருக்கு நன்றிக்கடன்பட்டிருக்க வேண்டும்!