நலம் வாழ

சர்வதேச யோகா நாள் ஜூன் 21: நோய் தீர்க்கும் யோகா

டாக்டர் பி.திருவருட்செல்வா

உடற்பயிற்சி… இன்றைய இளைஞர் கூட்டம் பெரிதும் பின்பற்றி வரும் ஒன்று. உடலைக் கட்டுமஸ்தாக வைத்துக்கொள்வதையே அவர்களில் பெரும்பாலானோர் தலையாயக் குறிக்கோளாகக் கொண்டுள்ளார்கள். பெரியோர்களும் அவரவர் வயதுக்கேற்ற உடற்பயிற்சிகளைச் செய்து வருகின்றனர். உடற்பயிற்சி உடலுக்கு நல்லதுதான். ஆனால், உடற்பயிற்சி மட்டுமே ஒருவரை ஆரோக்கியமாக மாற்றிவிடுமா என்றால், ‘இல்லை’ என்பதே பதில்!

உடற்பயிற்சி, உடல் தசைகளை மட்டுமே வலுப்படுத்தும். உடலின் உள்ளுறுப்புகளை வலுப்படுத்தவோ உறுப்புகளின் செயல் திறனைக் கூட்டவோ உடற்பயிற்சியால் முடியாது. உடற்பயிற்சியால் முடியாததை யோகாசனம் செய்யும். இன்னும் சொல்லப் போனால் உடல், உள்ளுறுப்புகளை மட்டுமல்ல… மனதையும் யோகா வலிமைப்படுத்துகிறது.

கண், காது, மூக்கு, தொடு உணர்வு, நாக்கு ஆகிய ஐம்புலன்களால் மனம் சிதறிப் போகாமல் ஒருநிலைப்படுத்துவதே யோகா.

ஆசனம் என்பது உடல், உள்ளுறுப்புகள் நன்கு செயல் புரியவும் வலுவடையவும் மேற்கொள்ளப்படும் செய்முறையே.

பொதுவாக உடலை நல்ல நிலையில் வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் யோகாசனம் செய்யும்போதும், மருத்துவர் அறிவுரைப்படி குறிப்பிட்ட நோய் சார்ந்த யோகாசனம் செய்யும்போதும் என்ன நடக்கிறது என்று பார்த்தால், பிராண வாயு உடலின் அனைத்துப் பகுதிகளுக்கோ குறிப்பிட்ட பகுதிக்கோ நல்ல முறையில் செல்கிறது.

அப்போது உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். அதன் காரணமாகத் திசுக்களுக்குச் சீரான ஊட்டம் கிடைக்கும். அதனால் உடல் சார்ந்த பிரச்சினைகளும் குறையும் அல்லது நீங்கும்.

அதேபோல திசுக்களில் உருவாகும், செல்களைப் பாதித்து நோயை ஏற்படுத்தும் ‘நிலையில்லாத அணுக்களை’ (ஃபிரீ ராடிக்கல்ஸ்) பெருமளவில் குறைக்கிறது.

சித்த மருத்துவத்தில் யோகம் பற்றியும் ஆசனங்கள் பற்றியும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. சித்த மருத்துவத்தின் சிறப்பான ‘காயகல்பம்’ என்னும் முறையில் யோகாசனமும் ஒன்று.

இந்தக் காயகல்பத்தையே இன்றைய நவீன அறிவியல் ‘ஆன்ட்டி ஆக்ஸிடண்ட்’ என்கிறது. சித்த மருத்துவர், தனது நோயாளிகளுக்கு மருந்து வழங்குவதுடன், நோய் சார்ந்த யோகாசனப் பயிற்சியையும் பின்பற்றச் சொல்லி அறிவுறுத்துவார். ஏனென்றால், முறையான யோகாசனப் பயிற்சியால், நாம் உட்கொள்ளும் மருந்து, உடலில் முழுமையாக உட்கிரகிக்கப்படும். அதன்மூலம், மருந்தின் முழு வீரியமும் உடலுக்குக் கிடைத்து, நோயாளிகள் விரைவில் குணமடைய உதவுகிறது.

யோகாசனம் செய்யும்போது எந்த நிலையில் மூச்சை உள் இழுக்க வேண்டும், எந்த நிலையில் மூச்சை வெளிவிட வேண்டும் என்ற வழிகாட்டுதல் தேவை. அப்போதுதான் யோகாசனம் செய்ததற்கான முழுப் பலன் கிடைக்கும்.

அதேபோல நோயுற்றிருக்கும்போதோ நீண்ட கால உடல் சார்ந்த பிரச்சினைகள் ஏதேனும் இருந்தாலோ சில ஆசனங்களைச் செய்யக் கூடாது என்ற விதி இருக்கும். அவற்றைக் கவனமாகப் பின்பற்ற வேண்டும். முறைப்படி யோகாசனம் கற்ற ஆசானிடம் சென்று யோகாசனம் கற்றுக்கொள்வதே எப்போதும் நல்லது.

எப்படிச் செய்யலாம்?

வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு யோகாசனம் செய்யக் கூடாது. அப்படியே சாப்பிட்டுவிட்டால், மூன்று மணி நேரம் கடந்த பிறகே பயிற்சி செய்ய ஆரம்பிக்க வேண்டும்.

மலம், சிறுநீர் போன்றவை உடலில் தேங்கி இருக்கும்போது ஆசனம் செய்தல் கூடாது.

பயிற்சி செய்யக்கூடிய இடம் திறந்தவெளியாக, காற்றோட்டமான, சுத்தமான இடமாக இருப்பது நல்லது.

யோகாசனம் செய்யும்போது பொதுவாக வாயால் மூச்சு விடுவதையும், மூச்சை உள்இழுப்பதையும் தவிர்க்க வேண்டும். மூக்காலேயே சுவாசிக்க வேண்டும். குறிப்பிட்ட சில ஆசனங்களில் வாயினால் மூச்சு வாங்கி, விட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டால் மட்டும் பின்பற்றலாம்.

வெறும் தரையில் யோகாசனம் செய்வதைத் தவிர்த்து, துணி விரித்துச் செய்வது நன்று.

யோகாசனம் செய்யும்போது நன்கு நிமிர்ந்து நேராக இருக்க வேண்டும். கூனிட்டு உட்காருதல், உடலைக் குறுக்கி இருத்தல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

யோகாசனம் செய்யும்போது நிதானமாகவும் மெதுவாகவும் செய்ய வேண்டும். அவசர அவசரமாகச் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

வேண்டாமே சுய ஆசனம்

பலர், யோகாசனத்தைச் செய்ய விரும்பி ஆசனம் செய்ய வேண்டிய முறையைப் பற்றியோ அது சார்ந்த விழிப்புணர்வோ இல்லாமல், புத்தகங்களைப் படித்தோ இணையதளத்தைப் பார்த்தோ சுயமாகச் செய்கின்றனர். அவ்வாறு செய்வது மிக மிகத் தவறு. இது பல்வேறு பின்விளைவுகளை உருவாக்கக்கூடும்.

கட்டுரையாளர், சித்த மருத்துவர்
தொடர்புக்கு: siddhathiru@gmail.com

SCROLL FOR NEXT