இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும்பொருட்டு, தமிழ்நாடு இயற்கை வேளாண் கூட்டமைப்பு, சென்னை ஆர்கானிக் ஃபார்மர்ஸ் மார்க்கெட் இணைந்து மாதாந்திர இயற்கை உழவர் சந்தையை சென்னையில் நடத்தத் திட்டமிட்டுள்ளன.
இச்சந்தையில் இயற்கை விவசாயிகள், மகளிர்க் குழுக்கள், சமூக நிறுவனங்கள் சார்பாக 20 அரங்குகள் இடம் பெறவுள்ளன. இயற்கைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள், ஆர்கானிக் மளிகைப் பொருள்கள், மரபு அரிசி, சிறுதானியங்கள், பருப்பு வகைகள், செக்கிலாட்டிய எண்ணெய் போன்ற பொருள்கள் விற்பனைக்கு உள்ளன.
மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள், பருத்தி ஆடைகள் , சுற்றுச்சூழலுக்கு உகந்த வீட்டு உபயோகப் பொருள்கள், தின்பண்டங்கள், மூலிகைத் தேநீர், பானங்களும் இச்சந்தையில் கிடைக்கும்.
சென்னை ஆகஸ்ட் 4ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள சி.எஸ்.ஐ. பெயின் பள்ளி வளாகத்தில் முதல் இயற்கைச் சந்தை தொடங்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை இதே இடத்தில் இச்சந்தையைத் தொடர ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
தொடக்க நிகழ்வில் இயக்குநர் வெற்றி மாறன், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சாந்த ஷீலா, இயற்கை விவசாயி அரியனூர் ஜெயச்சந்திரன், இயற்கை விவசாயப் பயிற்சியாளர் ஆர். வெற்றிமாறன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இத்துடன் இயற்கை வேளாண்மை, சுகாதாரம், சுற்றுச்சூழல் குறித்து முக்கிய நிபுணர்களின் அமர்வு கள், பயிலரங்குகள், குழந்தைகளுக்கான அரங்குகளும் இடம்பெற்றுள்ளன.
இந்தச் சந்தையானது பிளாஸ்டிக் இல்லா (ஞெகிழியற்ற), ஜீரோ-வேஸ்ட் நிகழ்வாக இருப்பதை நோக்கமாகக் கொண்டிருப்பதால் வாடிக்கையாளர்கள் பைகள், சொந்தக் கொள்கலன்களைக் கொண்டுவர நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
தொடர்புக்கு: 99620 43710 / 89391 38207