மூளைக்கட்டி என்ற உயிர்க்கொல்லி நோய் தன்னைத் தக்கவைத்துக் கொள்ள 'கேலக்டின்' என்ற புரோட்டீனை உற்பத்தி செய்து உடல் எதிர்ப்பு சக்திகளிடமிருந்து தன்னை திறம்பட மறைத்துக் கொள்வதாக புற்று நோய் ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
தீவிர மற்றும் நீண்ட நாளைய மூளைக்கட்டிகள் குறித்த இந்த ஆய்வு எலிகளில் மேற்கொள்ளப்பட்டது. அதில் இந்த புரோட்டீன் எவ்வாறு மூளைக்கட்டியை பாதுகாக்கிறது என்ற விவரம் தெரிய வந்தது.
உண்மையில் இந்த ஆய்வாளர்களின் நோக்கம் என்னவெனில் கேலக்டின் - 1 என்ற இந்த புரோட்டீனை மூளைக்கட்டி செல்கள் அதிகம் உற்பத்தி செய்வதன் மூலம் புற்றுநோய் அபாயகரமான அளவுக்கு வளருவதையும், பரவுவதையும் தடுக்குமா என்று பார்க்கவே ஆய்வு செய்துள்ளனர்.
ஆனால் ஆய்வின் முடிவில் மூளைக்கட்டியை இந்தப் புரோட்டீன் பாதுகாத்து வளர்க்கிறது என்ற மாறுபட்ட விளைவே தெரியவந்தது. எனவே இந்த கேலக்டின் என்ற புரோட்டீனை கேன்சர் செல்கள் உற்பத்தி செய்வதைத் தடுக்கும்போது மூளைக்கட்டி உள்ளிட்ட புற்றுநோய்க் கட்டிகளும் வளர்ச்சியடைவதை தடுக்க முடியும் என்பதோடு அதனை முற்றிலும் அகற்ற முடியும் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நம் உடலில் உள்ள இயல்பான எதிர்ப்புச் சக்திகள் புற்றுக் கட்டிகள் உருவாக்கும் செல்களை உடனடியாகக் கண்டுகொண்டு அதனை அழித்து விடக்கூடியவை. ஆனால் இந்த செல்கள் கேலக்டின் - 1 என்ற புரோட்டீனை உற்பத்திச் செய்யத் தொடங்கி விட்டால் நோய் எதிர்ப்புச் சக்திகள் புற்று நோய்க் கட்டிகளின் அபாயத்தன்மையை கண்டுபிடிக்க முடியாமல் போய் விடுகிறது.
அதன் பிறகு கேன்சர் செல்கள் நன்றாக வளர்ந்து விட்ட பிறகே உடலின் நோய் எதிர்ப்புச் சக்திகள் அடையாளம் காண்கின்றன. ஆனால் அப்போது அதனால் ஒன்றும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது என்று இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டனில் உள்ள நரம்பு அறுவைசிகிச்சைத் துறை இந்த முக்கியமான ஆய்வை மேற்கொண்டுள்ளது. இந்த ஆய்வு கேன்சர் ரிசர்ச் என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
மூளைக்கட்டி ஏன் ஏற்படுகிறது என்பதற்கான சரியான காரணங்கள் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.