எனக்கு 25 வயதாகிறது. மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். திருமணம் ஆகவில்லை. இளநரை உள்ளது. முடி உதிர்வும் இருப்பதால் பாராமரிக்க வசதியாக முடியைச் சிறியதாக வெட்டிக்கொண்டேன். மருத்துவரிடம் ஆலோசனை பெற்று கடந்த 10 நாட்களாகப் பரிந்துரைக்கப்பட்ட (Altris 5 solution) மருந்தைப் பயன்படுத்தி வருகிறேன். பரம்பரையாக வரும் நரையாக இருந்தால் முடி கறுப்பாக மாறுவது கடினம் என்று அறிந்துகொண்டேன்.
என் அம்மா, தாத்தாவுக்கும் இளம் வயதிலேயே நரை முடி தோன்றியது. பொடுகுக்குத் தனியாக ஷாம்பு பயன்படுத்துகிறேன். இவற்றால் ஏதாவது பக்கவிளைவுகள் வருமா என்றும் என் முடி கறுப்பாக மாற மேற்கூறிய மருந்து உதவுமா என்றும் அறிந்துகொள்ள விரும்புகிறேன். மேலும் குளோரின் கலந்து வரும் நீருக்கு மாற்றாக உப்புநீரைப் பயன்படுத்துமாறு சிலர் கூறுகின்றனர். இது குறித்து தங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்.
- சீதா குமாரி, மின்னஞ்சல்
இளம் வயதிலேயே முடி உதிர்வதற்கு என்ன காரணம் எனக் கண்டறிய வேண்டும். அதைச் சரிப்படுத்தினால் முடி உதிர்வது நின்றுவிடும். உங்கள் வயதில் முடி உதிர்வதற்கான பொதுவான காரணங்களைப் பார்ப்போம்.
முடி வளர்வதற்குப் புரதச்சத்து, இரும்புச்சத்து, தாமிரச்சத்து, துத்தநாகச்சத்து, அயோடின், வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ், பயோட்டின் மற்றும் வைட்டமின் – சி சத்துகள் தேவை. இவற்றில் ஏதேனும் ஒரு சத்து குறைந்தாலும் முடி உதிரத் தொடங்கிவிடும். அதிலும் இரும்பும் புரதமும் உடலின் தேவைக்கு இல்லையென்றால், முடி உதிர்வது உறுதி.
ஈஸ்ட்ரோஜன், தைராக்சின் போன்ற ஹார்மோன்களின் குறைபாடுகளால் தலைமுடி உதிர்கிறது. மன அழுத்தம் அதிகமாக இருந்தாலும் தலைமுடி உதிரும். சமீபத்தில் டைபாய்டு, மஞ்சள் காமாலை, அம்மை நோய் போன்றவை பாதித்திருந்தால் தலைமுடி உதிரலாம். முடி உதிர்வதற்கு பொடுகும் ஒரு முக்கியக் காரணம்தான்.
குளித்தபின் ஈரம் காய்வதற்குள் தலைவாருதல், வீரியம் மிகுந்த அல்லது தரம் குறைந்த ஷாம்புகளைப் பயன்படுத்துதல், அடிக்கடி முடியை பிளீச் செய்தல், தரமற்ற தலைச்சாயங்களைப் பூசுதல், கடினமான சீப்புகளைப் பயன்படுத்துதல், ஹேர் டிரையரை அதிகமாகப் பயன்படுத்துதல், தலைமுடியை இறுக்கமாகக் கட்டுதல் போன்றவை தலைமுடி உதிர்வதை ஊக்குவிக்கின்றன.
தலைமுடியில் வேர்க்கால் எப்படி இருக்கிறது? அதற்கு உயிர் இருக்கிறதா? மறுபடியும் வளரச் செய்ய முடியுமா என்று முடியை ஸ்கேன் செய்து பார்த்து, சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.
உங்களுக்குப் பொடுகு இருப்பதாகச் சொல்லியிருக்கிறீர்கள். அதற்குச் சிகிச்சையும் பெற்று வருகிறீர்கள். சிகிச்சையைத் தொடருங்கள். பலன் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
அத்துடன், அடர் பச்சைக் காய்கறிகள், கீரைகள், பேரீச்சை, கேரட், முட்டை, பருப்பு, பால், பால் பொருட்கள், முழுதானியங்கள், சோயாபீன்ஸ், காளான், ஆரஞ்சு, முந்திரி, பாதாம் போன்ற கொட்டை வகைகள், வாழைப்பழம், மீன், ஈரல் போன்றவற்றை அதிகமாகச் சாப்பிட்டால் முடி வளர்வதற்கான சாத்தியம் கூடும். பணிச் சூழலில் மன அழுத்தம் இருந்தால், அதைத் தவிர்க்கப் பாருங்கள். இது ஒரு முக்கியமான தடுப்புமுறை.
இளநரைக்கு வம்சாவளி ஒரு முக்கியக் காரணம். உங்களுக்கு இந்த மாதிரி இளநரை வந்திருக்குமானால், அதற்குச் சிகிச்சை பயன் தராது. தலைச்சாயம்தான் தீர்வு. ஆனால், வைட்டமின் குறைவு, தாதுச்சத்துக் குறைவு, பிட்யூட்டரி பிரச்சினை, தைராய்டு பிரச்சினை போன்றவை காரணமாக இளமையில் நரை ஏற்பட்டிருந்தால், அதைக் குணப்படுத்த முடியும். பயாட்டின், ஃபோலிக் அமிலம், கால்சியம் பென்டோதினேட், பி.ஏ.பி.ஏ .(PABA), துத்தநாகம் போன்ற பல சத்துகள் கலந்த மாத்திரைகளைத் தொடர்ந்து உட்கொண்டுவர, இளநரை மறையும். தைராய்டு பிரச்சினை உள்ளதா எனப் பரிசோதித்துத் தெரிந்துகொண்டு சிகிச்சை பெறுங்கள். நிறைய தண்ணீர் குடியுங்கள். தினமும் கால் மணி நேரமாவது வெயிலுக்குச் செல்லுங்கள். நல்ல காற்றோட்டமான இடத்தில் படுங்கள்.
நீங்கள் தற்போது சாப்பிட்டு வரும் மாத்திரைகளால் பக்கவிளைவுகள் ஏற்படாது. அதிக குளோரின் கலந்த தண்ணீரிலோ உப்புநீரிலோ குளித்தால், முடி உதிர வாய்ப்புண்டு. மென்மையான தண்ணீரில் குளித்தால் நல்லது.
‘நலம், நலமறிய ஆவல்' கேள்வி - பதில் பகுதியில் பதில் அளிக்கிறார் பிரபல மருத்துவ எழுத்தாளர் டாக்டர் கு. கணேசன். முக்கியமான மருத்துவச் சந்தேகங்களை வாசகர்கள் இப்பகுதிக்கு அனுப்பலாம். மின்னஞ்சல்: nalamvaazha@thehindutamil.co.in முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002. |