‘நலம் வாழ‘ இணைப்பில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்ற மூன்று தொடர்கள் தற்போது ‘தி இந்து’ வெளியீடுகளாக நூல் வடிவம் பெற்றுள்ளன. அந்தப் புத்தகங்கள் பற்றி:
சந்தேகம் சரியா? | டாக்டர் கு.கணேசன்
வாழ்க்கையில் சந்தேகம் வரலாம். சந்தேகமே வாழ்க்கையாகிவிடக் கூடாது. சற்று ஓய்வாக இருக்கும்போது நமது உருவத்தைக் கண்ணாடியில் பார்த்தால், நம் உடல் பற்றி ஏகப்பட்ட சந்தேகங்கள் எழும். இந்த இடத்தில் ஏதோ வீக்கமாக இருப்பதுபோல் தெரிகிறதே... ஆனால் வலி இல்லை... ஒருவேளை புற்றுக்கட்டியாக இருக்குமா? இடது பக்கத் தோளைவிட வலது பக்கத் தோள்பட்டை இறங்கியிருப்பதுபோல் தெரிகிறதே... ஒருவேளை மூட்டு இறங்கியிருக்குமா? இப்படி நூறு சந்தேகங்கள் வரும். இதுபோல அன்றாட வாழ்வில் பலரும் எதிர்கொள்ளும் ஏராளமான சந்தேகங்களுக்கான விளக்கத்தை படிப்பவர்களை பதற்றப்படுத்தாமல் டாக்டர் கு.கணேசன் வழங்கியுள்ளார். ‘தி இந்து - நலம் வாழ’ இணைப்பிதழில் அவர் எழுதிய பதில்களின் தொகுப்பே `சந்தேகம் சரியா?' என்னும் நூல்.
‘பல்லி விழுந்த உணவு விஷமா?’, ‘முட்டையைப் பச்சையாகக் குடிக்கலாமா?’, ‘தொற்றுநோயால் புற்றுநோய் வருமா? என்பது போன்ற அடிக்கடி நமக்கு எழும் 50 கேள்விகளுக்கான பதில்களை விரிவாகவும் எளிய மொழியிலும் தன்னுடைய நீண்டகால மருத்துவ அனுபவத்தோடு டாக்டர் கு.கணேசன் அளித்திருக்கிறார்.
உயிர் வளர்த்தேனே | போப்பு
நல்ல உணவு எது, சுவையான உணவை எப்படிச் சமைப்பது, செயற்கை சுவையூட்டிகளைப் பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் எப்படி சுவையூட்டுவது எனப் பலரும் மறந்துபோன நம் உணவை மீண்டும் தேட ஆரம்பித்துவிட்டார்கள்.
அந்த வகையில் ‘நலம் வாழ’ இணைப்பிதழில் உணவை மையப்படுத்தி ஓராண்டு வெளியான தொடர் `உயிர் வளர்த்தேனே’. தனக்கிருக்கும் பரந்த உணவு ஞானத்தை இந்தத் தொடரில் வெளிப்படுத்தினார் எழுத்தாளர் போப்பு.
கஞ்சி தரும் முழுப் பலன், சூப், சைவ, அசைவ பிரியாணி, சிறுதானிய புதுமை உணவு செய்முறைகள், கோதுமையை முழுமையாக எப்படிப் பயன்படுத்துவது, கோடை காலத்துக்கு ஏற்ற உணவு, குளிர்காலத்துக்கு ஏற்ற உணவு, பனிக்காலத்துக்கு ஏற்ற உணவு என காலத்துக்கேற்ற வகையில் உணவை அறிமுகப்படுத்துவதுடன் அவற்றின் செய்முறை, அவற்றால் கிடைக்கும் பலன்கள், ஆரோக்கிய மேம்பாடு என பல தகவல்களையும் ஒரு சிறுகதைக்கான சுவாரசிய மொழியில் சொல்லும் கட்டுரைகளின் தொகுப்பு இது.
மரபு மருத்துவம் | டாக்டர் வி. விக்ரம்குமார்
கேள்வி கேட்டால்தான் நியாயம் பிறக்கும். ஆனால் கேள்வி கேட்காமல் நம்முடைய அன்றாட வாழ்வில் உணவு வடிவில் எத்தனையோ இறக்குமதிகளை அனுமதித்துவிட்டோம். அதன் விளைவைதான் நீரிழிவு வடிவிலும், மனப் பதற்றத்தின் வடிவிலும் இன்றைக்குப் பலரும் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். ஆரோக்கிய வாழ்க்கைக்கு உதவும் நாம் மறந்துவிட்ட மருத்துவ சிகிச்சை முறையை, உணவுப் பழக்கத்தைப் பற்றி `மரபு மருத்துவம்’ என்னும் தலைப்பில் ‘நலம் வாழ’ இணைப்பிதழில் எழுதிவந்தார் டாக்டர் வி.விக்ரம்குமார்.
ஆவி பிடித்தலால் கிடைக்கும் நன்மை, தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் கிடைக்கும் நன்மை, வாழை இலையில் சாப்பிடுவது எப்படி ஆரோக்கியத்துக்கு உதவுகிறது என பல கட்டுரைகள் வழிகாட்டுகின்றன. அத்துடன் வைட்டமின் டி எங்கே கிடைக்கும் என்று தேடுபவர்களுக்கு வெயிலின் அவசியத்தை விக்ரம் புரியவைக்கிறார். கொசுக்கடியிலிருந்து தப்பிக்க இயற்கைவழியைக் காண்பிக்கிறார். இயற்கை உணவின் மூலம் தாய்ப்பாலை பெருக்கும் உபாயத்தைக் கூறுகிறார். இந்தப் புத்தகத்தில் உள்ள 40 கட்டுரைகளில் நாம் மறந்த உணவு முறை, வாழ்க்கை முறையை கண்முன் கொண்டுவந்து நிறுத்தியுள்ளார் டாக்டர் விக்ரம்குமார்.