இந்திய அளவில் முட்டை உற்பத்தி அதிகம் நடைபெறும் ஊர்களில் ஒன்று நாமக்கல். இங்கிருந்து முட்டைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகின்றன. முட்டைக்கான விலை நாமக்கல்லில் தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது. ஜூன் 17ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் விலையை மேலும் 5 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி ரூ.5.30 காசுகளாக இருந்த முட்டை விலை ரூ5.35 காசுகளாக உயர்ந்தது. முட்டை உற்பத்தி குறைந்த நிலையில் தேவை அதிகரித்துள்ளதால் தொடர்ந்து விலை உயர்ந்துவருவதாக உற்பத்தியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்காச்சோளம் விலை உயர்வு
கரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தனிப் பயிராகவும் ஊடுபயிராகவும் மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது. பெரும்பாலும் தீவனத் தயாரிப்புக்காக மக்காச்சோளம் வாங்கப்படுகிறது. இங்கு வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலம் மக்காச்சோளம் விற்கப்படுகிறது. கடந்த சில வாரங்களாகக் கிலோ ரூ.22க்கு விற்கப்பட்ட மக்காச்சோளம், இப்போது கிலோ ரூ.24க்கு விற்கப்பட்டுவருவதாகச் சொல்லப்படுகிறது.
நாட்டுக்கோழிப் பண்ணைக்கு 50% மானியம்
சேலம் மாவட்டத்தில் நாட்டுக் கோழிப் பண்ணைகள் அமைக்க, மானியம் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பயனாளியாகத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு கோழிக் கொட்டகை, கட்டுமானச் செலவு, கருவிகள் வாங்கும் செலவு, நான்கு மாதங்களுக்கான தீவனச் செலவு ஆகிய செலவுகளில் 50% தொகை மானியமாகத் தமிழக அரசு வழங்க உள்ளது. இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க இருக்கும் பயனாளி, சொந்த ஊரில் நிரந்தரமாக வசிப்பவராகவும் கோழிக் கொட்டகை அமைக்கத் தேவைப்படும் 625 சதுரஅடி நிலம் அவரது பெயரில் பதிவாகியும் இருக்க வேண்டும். கொட்டகை அமைக்கும் இடம் மனிதக் குடியிருப்புப் பகுதியிலிருந்து விலகி இருக்க வேண்டும். இந்தத் திட்டத்தில் கைம்பெண்கள், ஆதரவற்றோர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், பட்டியல் பழங்குடியினருக்கு முன்னுரிமை வழங்கப்படும். மாவட்டத்தில் உள்ள கால்நடை அலுவலகங்களில் ஜூன் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பம் அளிக்க வேண்டும்.