மாயா பஜார்

நட்சத்திரங்கள் ஏன் வெடிக்கின்றன? | வானம் நமக்கொரு போதிமரம் 7

த.வி.வெங்கடேஸ்வரன்

தலையில் காய்கறிக் கூடையைச் சுமைந்து செல்லும் பெண்ணைப் பார்த்திருப்பீர்கள். கூடையில் உள்ள காய்கறிகளின் எடை அளவுக்குத் தலை மீது அழுத்தத்தை உணர்வார்கள். சுமக்க முடியாத அளவுக்குச் தலைச்சுமை கூடிவிட்டால் நிலைகுலைந்து கீழே விழுந்துவிடுவார்கள் அல்லவா? சூரியன் போன்ற விண்மீன்களில் இதுபோல நிலைகுலைவு ஏற்படுவதுதான் ‘விண்மீன் வெடிப்பு’, அதாவது ‘நோவா’ எனும் நிகழ்வு.

பூமியின் ஈர்ப்பு விசை காரணமாகத் தலையில் உள்ள கூடை கீழ் நோக்கி இழுவிசையைச் சந்திக்கிறது. அதற்கு ஈடாக அவரின் உடல் தலைவழியே முட்டுக்கொடுக்கிறது. அதாவது, அங்கே இரண்டு எதிரும் புதிருமான விசைகள் செயல்படுகின்றன. இரண்டு திசைகளில் செயல்படும் விசைகளின் இழுபறி நம் கண்களுக்கு எளிதில் புலப்படுவது இல்லை. என்றாலும் ஈர்ப்புவிசையால் கூடை கீழ் நோக்கி இழுபடும் அதே நேரத்தில், தலை மேல் நோக்கி முட்டுக்கொடுக்கிறது. சூரியனின் மேற்புறத்தில் உள்ள பொருளை எடுத்துக்கொள்வோம்.

அதற்கு எடை இருக்கும், அதாவது அந்தப் பொருள் சூரியனின் மையத்தை நோக்கி இழுபடும். அந்தப் பொருள் கீழே சென்றுவிடாமல் அங்கேயே இருக்க முட்டுக்கொடுப்பது எது? சூரியன் உற்பத்தி செய்து வெளியிடும் ஆற்றல் முட்டுக்கொடுக்கிறது. வாயுவின் மீது கூடுதல் வெப்பம் செலுத்தினால் வாயு விரிவடையும். அதாவது, வெப்ப ஆற்றல் விலக்குதன்மை கொண்டது. சூரியனின் மையத்தில் உருவாகும் ஆற்றல் கதிர்களாக வெளிப்படும்போது மையத்தை விட்டு எதிர்த்திசையில் தள்ளுவிசையைத் தரும்.

அதாவது, காய்கறி சுமக்கும் பெண்ணின் தலையில் இரண்டு திசையில், இழுபறி செய்யும் எதிரும் புதிருமான விசைகளைப் போலவே, சூரியன் உள்ளும் இழுபறி. சூரியனின் ஈர்ப்புவிசைப் பொருள்களை அதன் மையம் நோக்கி இழுவிசை செலுத்த, மையத்தில் உருவாகும் ஆற்றல் வெளிப்புறமாகத் தள்ளுவிசையைத் தரும். இந்த இழுபறியின் தற்காலிகச் சமநிலையில்தான் சூரியன் குறிப்பிட்ட அளவில் நிலைநிற்கிறது.

சுமார் 500 கோடி ஆண்டுகளுக்கு முன்னர், சூரியன் உருவானபோது இன்றுள்ள சூரியன்போல 70 மடங்கு பெரியதாக இருந்தது. ஈர்ப்புவிசை எல்லாப் பொருள்களையும் உள்நோக்கி இழுத்தபோது, பூந்தியை அழுத்தி லட்டு பிடிப்பதுபோல, தற்போது உள்ள அளவுக்குச் சுருங்கிவிட்டது.

இந்த நிலையில் உள்நோக்கிய இழுவிசையும் வெளிநோக்கிய வெப்ப விலக்குவிசையும் சற்றேறக் குறைய சமம். ஸ்கூட்டர் ஓடிக்கொண்டே இருந்தால் ஒருகட்டத்தில் அதன் எரிபொருள் தீர்ந்து போகும். அதுபோல இன்னும் சுமார் 500 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு சூரியனின் உள்ளே எரிபொருள் அடர்த்தி குறைந்துவிடும். அதன் தொடர்ச்சியாக உருவாகும் ஆற்றல் அளவு குறைந்துவிடும். இந்தக் கட்டத்தில் எதிரும் புதிருமாகச் செயல்படும் விசைகள் சமநிலை தவறும். ஈர்ப்புவிசை கை ஓங்கும்.

எனவே, சூரியனின் உள்புறப் பொருள்கள் மேலும் சுருங்கிவிடும். ஸ்பாஞ்சைப் பிழிந்தால் அதன் உள்ளே உள்ள நீர் வெளியேறும் அல்லவா? அதுபோலச் சூரியனின் உள்புறம் உள்ள பொருளை அழுத்தி, சுருக்கினால் அதனுள் பொதிந்து இருந்த ஆற்றல் வெளியேறும். இதன் காரணமாக, சூரியனின் மேற்புற அடுக்கு ஊதிய பலூன்போல விரிவடையும். தற்போது உள்ள சூரியனின் அளவுபோல சுமார் 200 மடங்கு சூரியனின் அளவு பெரிதாகும். அந்தக் கட்டத்தைச் ‘சிவப்பு ராட்சச’ நிலை என்பார்கள்.

இன்னும் 500 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு சிவப்பு ராட்சச நிலையை அடையும் சூரியன், புதன், வெள்ளி ஆகிய இரண்டு கோள்களை விழுங்கிவிடும். பூமிக்கு மிக நெருக்கமாக வந்துவிடும். அந்தச் சுட்டெரிக்கும் வெப்பத்தில் பூமியின் கடல்கள் எல்லாம் ஆவியாகி மறைந்துவிடும்.

அள்ளஅள்ளக் குறையாத அட்சயபாத்திரம்போல ஸ்பாஞ்சிலிருந்து நீர் வெளியேறிக்கொண்டே இருக்காது. அதுபோல என்றாவது ஒருநாள் சிவப்பு ராட்சச நிலையின் மையத்தில் எரிபொருள் மறுபடி தீர்ந்துபோதும் அல்லவா? அந்தச் சூழலில் ஈர்ப்புவிசையின் கை மறுபடி ஓங்கும். இரும்புக்கரம் கொண்டு நசுக்குவதுபோலச் சூரியனின் பொருள்களை எல்லாம் ஈர்ப்புவிசை மையம் நோக்கிக் குவிக்கும்போது, சூரியனின் அளவு பூமியின் அளவு போலச் சிறிதாக மாறிவிடும்.

ஒவ்வோர் அணுவைச் சுற்றியும் எலெக்ட்ரான்கள் உள்ளன. இவை எதிர்மின்னோட்டம் கொண்டவை. எதிர்மின்னோட்டம் கொண்ட துகள் மற்றோர் எதிர்மின்னூட்டம் கொண்ட துகளைச் சந்திக்கும்போது விலக்குவிசை ஏற்படும். இதன் காரணமாகக் குறிப்பிட்ட அடர்த்திக்குக் கூடுதலாகப் பொருள்களை நெருக்கமாக அழுத்த முடியாது. இந்த நிலையில் எலக்ட்ரான்களுக்கு இடையேயும் புரோட்டன்களுக்கு இடையேயும் ஏற்படும் மின்விலக்கு விசை, பொருள்களை வெளிநோக்கித் தள்ளும். ஈர்ப்புவிசை உள்நோக்கி இழுக்கும். இந்த இழுபறியில் சூரியன் மறுபடி நிலைத்தன்மை அடையும்.

வெறும் பூமி அளவுக்குச் சூரியன் சுருங்கும் என்றால், அந்தச் சுருங்கும் நிகழ்வின் போது மீ ஆற்றல் வெளியேறும். ‘அணையப் போகிற விளக்கு பிரகாசமாக எரியும்’ என்பார்களே, அதுபோல. இதன் தொடர்ச்சியாக அந்த விண்மீன் மிகமிகப் பிரகாசமாக ஒளிரும்.

இப்படிப் புயல்போல வெளியேறும் ஆற்றல் சூரியனின் மேல் அடுக்குகளை வெளிநோக்கி ராட்சச வேகத்தில் ஊதித்தள்ளிவிடும். வெளி அடுக்குச் சடசடவென விரியும். இதுதான் பார்வைக்கு விண்மீன் வெடிப்பதுபோலக் காட்சி தரும். மேலடுக்கு விரியும் நிலையில் உள்ளே மையம் சுருங்கிச் சின்னதாக மாறிக்கொண்டிருக்கும். மேலடுக்கு விரிவாக்கம், உள் பகுதி சிறிதாகும் போக்கு இரண்டும் ஒருசேர நிகழும். இதைத்தான் ‘விண்மீன் வெடிப்பு’ அல்லது ‘நோவா’ என்கிறோம்.

இதன் இறுதியில் சூரியன் வெள்ளைக்குள்ளன் வகை விண்மீன் என்கிற நிலைக்கு மாறும். சூடான பாத்திரம் மெல்ல மெல்ல சூட்டை வெளியிட்டு வெப்பம் குறைவது போல பல கோடி ஆண்டுகள் வெள்ளைக்குள்ள நிலையில் சூரியன் மங்கலாக ஒளிரும். உள்ளே தேங்கியுள்ள ஆற்றலை மெல்ல வெளியிடும். இதுதான் சூரியனின் இறுதி நிலை. இதேபோன்ற நிகழ்வுகள் ஒவ்வொரு விண்மீனுக்கும் நடக்கும். ஒவ்வோர் ஆண்டும் நம் விண்மீன் திரளில் மட்டும் 40 முதல் 50 விண்மீன்கள் நோவாவாக வெடித்துச் சிதறுகின்றன என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

(அறிவோம்)

- tvv123@gmail.com

SCROLL FOR NEXT