மாயா பஜார்

பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட யூரியா! - யூரியா | அறிவியல் திருப்புமுனைகள் 19

நன்மாறன் திருநாவுக்கரசு

ஜெர்மனியைச் சேர்ந்த வேதியி யலாளர் ஃபிரெட்ரிக் வோலர். இவர் தன் பரிசோதனைக் கூடத்தில் சில்வர் சயனைடு, அமோனியம் குளோரைடு ஆகிய வேதிப்பொருள்களை வைத்துச் சோதனை செய்துகொண்டிருந்தபோது, ‘யூரியா’ எனும் வேதிப்பொருள் உருவானது. அந்தச் செயல், அறிவியல் உலகின் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

பண்டைய வேதியியல், ‘ரசவாதம்’ என்கிற பெயரில் அறியப்பட்டது. ரசவாதம் என்பது அறிவியலுடன் கொஞ்சம் தத்துவம், மாந்திரீகம் எல்லாம் கலந்த முறை. ஒரு பொருள் இன்னொன்றாக எப்படி உருமாறுகிறது என்பதை இந்த ரசவாதிகள் ஆராய்ந்தனர்.

முறையான பரிசோதனைக் கூடங்களை நிறுவி, வெவ்வேறு சோதனைகள் நடத்தி, பொருளில் ஏற்படும் மாற்றத்தை ஆராய்ந்து ஆவணப்படுத்திய தொடக்கக்கால அறிவியலாளர்கள். இதனை நவீன உலகுக்கு ஏற்றவாறு மாற்றி யமைக்கப் பங்களித்தவர்களில் முக்கியமானவர் ஐரிஷ் இயற்கை அறிவியலாளரான ராபர்ட் பாயில்.

அவர் எழுதிய The Sceptical Chymist எனும் புத்தகம் பருப்பொருள்களின் இயல்பு பற்றிய பழமைவாதக் கருத்துகளை மாற்றியது. பொருள்களை முறைப்படுத்தி, பரிசோதனை முறையில் அணுகும் பார்வையைக் கொடுத்தது. இவர் காட்டிய வழியில் பல்வேறு சோதனைகள் நடைபெற்றன. புதிய வேதிப்பொருள்கள் கண்டறியப்பட்டு தனிமங்கள், சேர்மங்கள் என்றெல்லாம் அவை வகைப்படுத்தப் பட்டன.

இந்த வகையில் அப்போது அறிவியல் உலகில் முக்கியமாக அறியப்பட்ட ஒரு வேதிப்பொருள் யூரியா. இது கார்பன், நைட்ரஜன், ஆக்சிஜன், ஹைட்ரஜன் இணைந்த வேதிப்பொருள்.

மனித உடலில் இயற்கையாக உருவாகக்கூடியது. உடலில் அதிக அளவில் நைட்ரஜன் சேரும்போது அவற்றைச் சிறுநீர் மூலமாக உடல் வெளியேற்றும். அப்போது யூரியா அதில் இடம்பெறும்.

1773இல் ஹிலார் மரின் ரூயல் எனும் பிரெஞ்சு வேதியியலாளர் சிறுநீரைச் சூடுபடுத்தி, அவற்றில் கொஞ்சம் சாராயத்தைக் (Alcohol) கலக்கும்போது யூரியாவைப் பிரித்தெடுத்தார்.

இதைத் தொடர்ந்து கார்ல் வில்ஹெம் ஷீலே போன்ற பல அறிவியலாளர்கள் பின்னாள்களில் பல்வேறு சோதனைகளை நிகழ்த்தி, சிறுநீரில் யூரியா இடம்பெறுவதை உறுதிசெய்து, பெயரிட்டனர்.

இந்தச் சமயத்தில்தான் ஸ்வீடனைச் சேர்ந்த ஜோன்ஸ் ஜேக்கப் பெர்சீலியஸ் உலகிலுள்ள பொருள்கள் குறித்து முக்கியமான ஒரு பார்வையை முன்வைத்தார். அதற்கு முன்புவரை வேதியியலாளர்கள் பொருள்களை இரண்டு வகைகளாகப் பிரித்தனர்.

முதல் வகை, உயிரில் இருந்து கிடைக்கக்கூடிய பொருள்கள் என்றனர். சர்க்கரை, கொழுப்பு, புரதம், யூரியா போன்றவை தாவரங்கள், விலங்குகள் போன்ற உயிரினங்களிடம் இருந்து மட்டுமே கிடைக்கக்கூடியவை.

இவை உயிர்ப் பொருள்கள் (Organic Substance) என அறியப்பட்டன. இன்னொரு வகை உயிரற்ற ஆதாரங்களில் இருந்து கிடைக்கக்கூடியவை என்றனர். கனிமங்கள், உலோகங்கள், உப்பு, பாறைகள் போன்றவை உயிரற்ற பொருள்களில் இருந்து கிடைப்பவை என்பதால் இவற்றைக் கனிமப் பொருள்கள் (Inorganic Substance) என்றனர்.

பெர்சீலியஸ் இந்த வேறுபாட்டை இன்னும் ஆழப்படுத்தினார். உயிர்ப் பொருள்களைச் செயற்கையாக உருவாக்க முடியாது என்று ஏற்கெனவே இருந்த கருத்தை அவர் ஆதரித்தார்.

உயிரினங்களின் உடலில் உள்ள உயிராற்றல் (Vital Force) எனும் சக்தியே உயிர்ப் பொருள்களை உருவாக்குகிறது. இதனால் அவற்றை உயிரற்ற ஆதாரங்களில் இருந்து உருவாக்க முடியாது என்றார். இந்தச் சிந்தனை உயிர்மவாதம் (Vitalism) என அறியப்பட்டது.

இந்த உயிர்மவாதக் கருத்துக்கு முக்கிய எடுத்துக்காட்டாக விளங்கியது யூரியாதான். சிறுநீரில் இருந்து யூரியா கிடைப்பதால் அது உயிர்ப்பொருள் என்றே அறியப்பட்டது. அறிவியல் உலகம் இந்த உயிர்மவாதத்தை ஏற்றுக்கொண்டது. ஆனால், சில அறிவியலாளர்கள் அதனைக் கேள்வி கேட்கத் தொடங்கினர்.

இதனை முதலில் செய்தவர் பிரெஞ்சு வேதியியலாளர் மிஷெல் ஷெவ்ரல். இவர் உயிரினங்களின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட கொழுப்புகளை ஆராய்ந்து கொண்டிருந்தபோது, அவை பரிசோதனைக் கூடத்தில் வேறு பொருள்களாக உருமாறுவதைக் கவனித்தார்.

இதன்படி பார்க்கும்போது உயிர்ப்பொருள்கள் மாற்றம் அடைய, எந்த மர்ம ஆற்றலும் தேவையில்லை என்றார். அதேபோல் இங்கிலாந்தைச் சேர்ந்த அறிவியலாளர் வில்லியம் ப்ரவுட், கலப்படமில்லாத யூரியாவின் வேதிக் கட்டமைப்பைப் பரிசோதனைக் கூடத்தில் ஆராய்ந்து, சாதாரண வேதிப்பொருள்கள் போலவே இந்த உயிர்பொருள்களையும் ஆராய முடியும் என்று நிறுவினார்.

ஆனாலும் உயிர்ப்பொருள்களை உயிரினங்கள் மட்டுமே உருவாக்க முடியும் என்கிற சிந்தனையே மேலோங்கி இருந்தது. இந்தச் சிந்தனையைக் கேள்விக்கு உட்படுத்தியவர்களில் முக்கியமானவர் ஃபிரெட்ரிக் வோலர்.

1800இல் ஜெர்மனியில் பிறந்தவர். மருத்துவமும் வேதியியலும் பயின்றார். உயிரினங்களின் உடலில் இருந்து கிடைக்கும் பொருள்களின் வேதியியல் கட்டமைப்பை ஆராய்ந்து வந்தார்.

ஒருநாள், சில்வர் சயனைடு எனும் வேதிப் பொருளை அமோனியம் குளோரைடுடன் கலந்து அவர் பரிசோதித்தபோது நிகழ்ந்த வேதிவினையில் யூரியா உருவானது. இதனைக் கண்டு திகைத்தார் வோலர்.

இத்தனை நாள்கள் உயிரின உடலில் இருந்தே உற்பத்தி செய்ய முடியும் என்று நம்பப்பட்டுவந்த யூரியாவைச் செயற்கையாகப் பரிசோதனைக் கூடத்தில் உருவாக்க முடியும் எனப் புரிந்துகொண்டார்.

இதுவே வோலர் சேர்க்கைமுறை (Whler Synthesis) என அறியப்பட்டது. இந்தப் பரிசோதனை உயிர்ப்பொருள்களை உயிராற்றல் எனும் சக்தி இல்லாமலேயே உருவாக்க முடியும் என்பதைக் காட்டியது.

வோலரின் பரிசோதனை உயிர்மவாதம் எனும் கருத்தாக்கத்தை உடனே மாற்றிவிடவில்லை. ஆனால், பின்னாள்களில் அறிவியல் துறையின் பல பிரிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

முதலில் தத்துவரீதியாக உயிர்கள், உயிரற்ற பொருள்கள் இரண்டுக்கும் இடையே இருந்த மலையளவு வேறுபாட்டைக் குறைத்து, இரண்டுக்கும் இடையேயான வித்தியாசம் ஒரு சிறிய கோடுதான் என்று நிரூபித்தது.

அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் உயிர்கள் எப்படி உருவாகி இருக்கலாம் என்று பரிசோதனைக் கூடங்களில் நிகழ்த்தப்பட்ட ஆய்வுகளுக்கான அடிப்படையை அமைத்துக் கொடுத்தது.

அடுத்தது மருத்துவத் துறையில் நம் உடலுக்கு வேண்டிய வேதிப்பொருள்களைச் செயற்கையாகப் பரிசோதனைக் கூடத்தில் உருவாக்கித் தர முடியும் என்பதற்கு முன்னோடியாக இந்தச் சோதனை அமைந்தது.

அதேபோல் கரிம வேதியியல் எனும் வேதியியல் துறையை உயிர்ப்பித்து, பிற தொழில்சார்ந்த வேதிப்பொருள்களை உருவாக்கவும் வழிவகுத்தது. குறிப்பாக யூரியாவைச் செயற்கையாக உருவாக்க முடியும் என்கிற பரிசோதனை கொடுத்த தொடக்கம், பின்னாளில் வெவ்வேறு ஆய்வுகளுடன் இணைந்து நைட்ரஜன் உரங்களை உருவாக்குவதற்கு அடிப்படையாக அமைந்தது.

இதன் விளைவாக அதிக அளவில் உரங்கள் உற்பத்தி செய்யப்பட்டு 20ஆம் நூற்றாண்டில் பசுமைப் புரட்சி ஏற்பட்டது. உலகம் முழுவதும் உணவு உற்பத்தி அதிகரித்தது. இவ்வாறு, ஒரு யூரியா சேர்க்கை முறை பெரும் திருப்புமுனையாக அமைந்து, உலகில் பெரும் மாற்றத்தை விளைவித்துள்ளது.

(திருப்புமுனையைக் காண்போம்)

- tnmaran25@gmail.com

SCROLL FOR NEXT