நம் நாட்டில் போர் நடைபெறாவிட்டாலும் நமக்கும்கூட சிலிண்டர், பெட்ரோல் எனப் பல பாதிப்புகள் இருக்கின்றன. ஆனால், போர் நடைபெறும் நாடுகளில் உயிர், பொருள் என அனைத்தும் அழிக்கப்படுவதைக் காணும்போது அதிர்ச்சியாக இருக்கிறது. போர் இல்லாத உலகம் சாத்தியமில்லையா, டிங்கு? – கே. ரஞ்சிதா, 10-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, அரியலூர்.
ஒரு போர் ஆரம்பிப்பதற்குப் பலவிதமான காரணங்கள் இருக்கலாம். ஆனால், போர் மனிதகுலத்துக்குத் தீங்கானது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு இந்த உலகம் இரண்டு உலகப் போர்களைச் சந்தித்தது. லட்சக்கணக்கான மனித உயிர்களை இழந்தது.
பொருளாதாரத்தை இழந்தது. ஒரு நாடு இழந்த பொருளாதாரத்தை, செல்வத்தை 20, 30 ஆண்டுகளில் பெற்றுவிடலாம். ஆனால், இழந்த மனித உயிர்களை மீண்டும் உயிரோடு கொண்டுவர முடியுமா? உங்களையும் என்னையும்போல சாதாரண மனிதர்கள், போர் வேண்டாம் என்று நினைக்கிறோம்.
போர்களை நடத்தும் நாடுகளில் இருக்கும் மக்களும் போர் வேண்டாம் என்றே நினைக்கிறார்கள். ஆனால், அரசாங்கங்கள் இவற்றை எல்லாம் கருத்தில்கொள்ளாமல், தங்கள் அரசியல், ஆயுத வியாபாரம், வளங்கள், பேராசைக்காகப் போர்களை நடத்தத் தயக்கம் காட்டுவதில்லை.
இன்றுகூட உணவு இல்லாத, பாதுகாப்பான குடிநீர் இல்லாத, தங்குவதற்கு இடம் இல்லாத மனிதர்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். பூமியின் காலநிலை மாறி வருகிறது. சூழல் மாசு அடைந்து வருகிறது. இன்னும் எத்தனையோ நோய்களுக்கு மருந்து கண்டறிய வேண்டியிருக்கிறது.
இவற்றில் எல்லாம் கவனம் செலுத்தி, அனைத்து நாட்டு அரசாங்கங்களும் சேர்ந்து தீர்வு காண முயல வேண்டும். அதுதான் முன்னேற்றம். அதை விட்டுவிட்டு, போர்களில் எல்லாவற்றையும் மீண்டும் மீண்டும் இழப்பது, மனிதகுலத்தைப் பல நூறு ஆண்டுகளுக்குப் பின்னோக்கித் தள்ளிவிடும்.
போட்டி, பொறாமை, நான் உயர்ந்தவன் என்பது போன்ற எண்ணங்களை அரசாங்கங்கள் கைவிட்டு, மனித உயிர்களையும் இந்தப் பூமியையும் உயர்வாக எண்ணும் போதுதான் போர் இல்லாத உலகம் சாத்தியமாகும். அதுவரை போர் இல்லாத உலகம் உருவாவதற்கான அனைத்து முயற்சிகளையும் சாதாரண மக்களாகிய நாம் தொடர்ந்து மேற்கொள்வோம், ரஞ்சிதா!
வண்டியில் வேகமாகப் போகும்போது தொப்பி பறக்கிறது. அந்தத் தொப்பியை பின்பக்கமாகத் திருப்பி அணிந்தால் பறப்பதில்லையே ஏன், டிங்கு? – ரா. புகழ்மணி, 6-ம் வகுப்பு, ஊ.ஒ.ந.நி. பள்ளி, திருவந்தவார், காஞ்சிபுரம்.
நாம் வண்டியில் செல்லும்போது நம்மை நோக்கி வரும் காற்று பலமாக வீசும்போது தொப்பி பறக்கிறது. காரணம், தொப்பியின் முன்பக்கத்தில் நீட்டிக்கொண்டிருக்கும் (பில்) பகுதியின் அடியில் காற்று வந்து மோதி, அதை மேலே தூக்கி, பறக்க வைக்கிறது.
அதே தொப்பியைப் பின்பக்கமாகத் திருப்பிப் போடும்போது, நீட்டிக்கொண்டிருக்கும் பகுதி கழுத்துப் பகுதிக்கு இறங்கிவிடுகிறது. இப்போது வேகமாக வரும்காற்று, முன்னோக்கி நீட்டிக்கொண்டிருக்கும் பகுதி இல்லாததால், தலைக்கு மேலே சென்று, தொப்பியைக் கீழ்நோக்கி அழுத்திவிட்டுச் சென்றுவிடுகிறது. எனவே தொப்பி பறக்காமல் இருக்கிறது, புகழ்மணி.