மலைப்பிரதேச கூம்பு வடிவ மரங்கள் ஏன் பூப்பதில்லை, டிங்கு? - நா. தருவின், 5-ம் வகுப்பு, நோட்ரே டேம் அகாடமி, போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி.
மலைப்பிரதேசத்தில் காணப்படும் மரங்களின் தாவரவியல் அமைப்பு முற்றிலும் மாறுபட்டது. கூம்பு வடிவ ஊசியிலை (Conifers) மரங்களில் வழக்கமான பூக்களுக்குப் பதிலாக, ‘கூம்புகள்’ (Cones) உருவாகின்றன.
காரணம், மலைப்பிரதேசங்களில் கடுமையான வானிலை நிலவும். அதாவது குளிர்ந்த காற்று வீசும், பனிப்பொழிவும் இருக்கும்.
இதனால் பூக்கள் எளிதில் சேதமடைந்துவிடக் கூடும் என்பதால், இயற்கையிலேயே இங்கு வாழும் மரங்கள் ஊசி போன்ற இலைகளுடனும் கடினமான கூம்புகளுடனும் காணப்படுகின்றன. இதன் மூலம் கடினமான வானிலையைத் தாங்கி, விதைகளை இந்த மரங்களால் பாதுகாக்க முடிகிறது, தருவின்.
சனிக்கோளில் பெரும்பாலும் ஹைட்ரஜனும் ஹீலியமும் உள்ளன. நம் சூரியனிலும் இதே வாயுக்கள்தான் உள்ளன. அப்படி என்றால் சனியும் ஒரு சூரியனா, டிங்கு? - ஜெ. பாலவிக்னேஸ்வரன், 7-ம் வகுப்பு, ஊ.ஒ.ந.நி. பள்ளி, தங்களாச்சேரி, மதுரை.
நல்ல கேள்வி. சனிக்கோள் மட்டுமல்ல வியாழன் கோளிலும் சூரியனைப் போலவே பெரும்பாலும் ஹைட்ரஜன், ஹீலியம் வாயுக்கள்தான் நிறைந்துள்ளன.
ஆனால், ஒரே மாதிரியான வாயுக்கள் இருப்பதாலேயே சனி, வியாழன் கோள்கள் சூரியனாக அதாவது ஒரு நட்சத்திரமாக மாறிவிட முடியாது. வாயுக்களைவிட நிறையும் (Mass) ஈர்ப்பு விசையும் சூரியனுக்குத் தேவை.
சூரியனின் மையப் பகுதியில் அதிக அளவு ஈர்ப்பு விசையின் காரணமாக அழுத்தமும் வெப்பமும் ஹைட்ரஜன் அணுக்களை ஒன்றிணைத்து, அணுக்கரு இணைவை (Nuclear Fusion) ஏற்படுத்துகின்றன.
இதன் காரணமாகவே சூரியன் ஒளியையும் வெப்பத்தையும் வெளியிடுகிறது. சனிக் கோளும் வியாழன் கோளும் சூரியன் அளவுக்குப் போதுமான நிறையைப் பெறவில்லை. எனவே அங்கு அணுக்கரு இணைவு ஏற்படவில்லை. அதனால் அவை சூரியன் இல்லை, பாலவிக்னேஷ்வரன்.