மாயா பஜார்

எல்-நினோ என்றால் என்ன? | டிங்குவிடம் கேளுங்கள்

Guest Author

மனிதர்களுக்கு இதயம் 1 நிமிடத்திற்கு சுமார் 72 முறை துடிக்கிறது. அதேபோல் மற்ற விலங்குகள், பறவைகளுக்கு எவ்வளவு முறை துடிக்கும் என்று சொல்ல முடியுமா, டிங்கு? - பே. கதிர்வேலன், 8-ம் வகுப்பு, ஊ.ஒ.ந.நி. பள்ளி. தங்களாச்சேரி, மதுரை.

சிறிய உயிரினங்களுக்கு அவற்றின் வளர்சிதை மாற்றம் வேகமாக இருக்கும், அதனால் இதயத் துடிப்பும் அதிகமாக இருக்கும். பெரிய உயிரினங்களுக்கு வளர்சிதை மாற்றம் குறைவாக இருப்பதால், இதயத் துடிப்பும் குறைவாக இருக்கும். அதாவது சிறிய உயிரினங்களின் உடல் பரப்பு, அவற்றின் எடையுடன் ஒப்பிடும்போது அதிகமாக இருக்கும்.

இதனால் உடலின் வெப்பத்தை அவை வேகமாக இழக்கும். அந்த வெப்பத் தேவையை ஈடுசெய்யவும் உடலுக்குத் தேவையான ஆற்றலை உடனடியாக வழங்கவும் இதயம் ரத்தத்தை வேகமாகச் செலுத்த வேண்டியிருக்கிறது.

எனவே யானை, திமிங்கிலம் போன்ற பெரிய உயிரினங்களுக்கு ஆற்றல் செலவு குறைவாக இருப்பதால், அவற்றின் இதயம் மெதுவாகத் துடிக்கிறது.

அதாவது ஒரு நிமிடத்துக்கு நீலத் திமிங்கிலத்துக்கு 8-10, யானைக்கு - 25-35, குதிரைக்கு 28-40, டால்பினுக்கு 35-45, சிங்கத்துக்கு 50-60, மாட்டுக்கு 50-80, ஆட்டுக்கு 70-80, புறாவுக்கு 185, கிளிக்கு 200, கோழிக்கு 250-300, எலிக்கு 250-400, ஓசனிச்சிட்டுக்கு (Humming bird) 1,260 முறை இதயம் துடிக்கிறது, கதிர்வேலன்.

எல்-நினோ விளைவு என்றால் என்ன, டிங்கு? - ஜி. இனியா, 10-ம் வகுப்பு, தி விஜய் மில்லினியம் மேல்நிலைப் பள்ளி.

கிருஷ்ணகிரி நிலநடுக்கோட்டை ஒட்டியுள்ள பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பில் வெப்பத்தால் ஏற்படும் மாற்றத்தை எல்-நினோ, லா-நினா என்று வகைப்படுத்தி இருக்கிறார்கள்.

கடலின் மேற்பரப்பு வெப்பம் சராசரிக்கும் அதிகமாக இருந்தால் எல்-நினோ ஏற்படும். வெப்பம் சராசரிக்கும் குறைவாக இருந்தால் லா-நினா ஏற்படும்.

இவை இரண்டும் ஏற்படாதபோது சமநிலை உருவாகும். இந்த மூன்று நிலைகளும் உலகம் முழுவதும் காலநிலையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

பசிபிக் பெருங் கடலில் எல்-நினோ ஏற்படும்போது இந்தியாவில் பல மாநிலங்களில் வெப்பம் உயர்ந்து, மழை குறைந்து, வறட்சி ஏற்படும். லா-நினா ஏற்படும்போது இந்தியாவில் பல மாநிலங்களில் கடுமையான குளிர் வாட்டும். இப்போது எல்-நினோ ஏற்பட்டுள்ளதால், இந்தியாவில் கடும் வறட்சி ஏற்படப் போகிறது என்கிறார்கள், இனியா.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT