மாயா பஜார்

நிலவு எந்தத் திசையில் உதிக்கிறது? | டிங்குவிடம் கேளுங்கள்

Guest Author

சூரியன் கிழக்கில் உதித்து, மேற்கில் மறைகிறது. ஆனால், நிலா எந்தத் திசையில் உதித்து எந்தத் திசையில் மறைகிறது, டிங்கு? - பா. பூமிகா, 5-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.

சூரியனைப் போலவே நிலவும் கிழக்கில் உதித்து, மேற்கில்தான் மறைகிறது. சூரியனும் நிலவும் கிழக்கில் உதித்து, மேற்கில் மறைவதுபோல் தெரிவதற்குக் காரணம், பூமியின் சுழற்சியே. பூமி தன்னையும் சுற்றிக்கொண்டு, சூரியனையும் மேற்கிலிருந்து கிழக்காகச் சுற்றி வருகிறது என்று உங்களுக்குத் தெரியும்.

          

சூரியன் அதே இடத்தில்தான் எப்போதும் இருக்கிறது. பூமி தன்னைத் தானே சுற்றும்போது பூமியின் ஒரு பக்கத்தில் பகலாகவும் இன்னொரு பக்கத்தில் இரவாகவும் (சூரிய வெளிச்சம் படாத பகுதி) இருக்கிறது.

நிலவும் தன்னைத் தானே சுற்றிக்கொண்டு பூமியைச் சுற்றி வருகிறது. இவ்வாறு சுற்றி வரும் காலம் 27.3 நாள்கள். எனவே நிலவு ஒவ்வொரு நாளும் 50 நிமிடங்கள் தாமதமாக கிழக்கில் உதித்து, மேற்கில் மறைவது போல் தோன்றுகிறது, பூமிகா.

தும்மும்போது நாம் ஏன் கண்களை மூடுகிறோம், டிங்கு? - ம. செந்தூரப்பாண்டி, 7-ம் வகுப்பு, ஊ.ஒ.ந.நி.பள்ளி, தங்களாச்சேரி, மதுரை.

தும்மும்போது நாம் கண்களை மூடுவது அனிச்சைச் செயல். மூக்கிலிருந்து வெளியேறும் தூசி, கிருமி போன்றவை கண்களைத் தாக்காமல் இருப்பதற்காக, மூளை கண்களை மூடச் சொல்லிக் கட்டளை இடுகிறது.

எனவே, இமைகள் மூடிவிடுகின்றன. தும்மும்போது முகத்தில் உள்ள நரம்புகள் இணைந்து செயல் படுகின்றன, அதனால் கண்களை மூடுவது இயல்பானது, செந்தூரப்பாண்டி.

SCROLL FOR NEXT