மாயா பஜார்

விமானத்தில் சாப்பிடும்போது சுவை குறையுமா? | டிங்குவிடம் கேளுங்கள்

Guest Author

விமானத்தில் பறக்கும்போது நாம் உண்ணும் உணவின் சுவைக்கும் நிலத்தில் இருக்கும்போது உண்ணும் உணவின் சுவைக்கும் வித்தியாசம் இருக்கும் என்கிறார்களே, உண்மையா, டிங்கு? - ஜெ. பாலவிக்னேஸ்வரன். 7-ம் வகுப்பு, ஊ.ஒ.ந.நி.பள்ளி, தங்களாச்சேரி, மதுரை.

உண்மைதான். ஆனால், சுவையில் மிகப் பெரிய மாற்றம் எல்லாம் இருக்காது. விமானத்துக்குள் நிலத்தில் இருப்பதைவிடக் காற்றின் அழுத்தம் குறைவாகப் பராமரிக்கப்படுகிறது. ஈரப்பதமும் குறைவாக இருக்கும் என்பதால் நாக்கு, மூக்கு, தொண்டை போன்ற பகுதிகள் வறண்டு விடுகின்றன.

இதனால் நாக்கின் சுவை அரும்புகள் தற்காலிகமாக உணர்திறனைச் சிறிதளவில் இழக்கின்றன. அதேபோல மூக்குக்கும் வாசனையை முகர்வதில் சிறிது தடுமாற்றம் இருக்கும். அதனால் உணவின் சுவையில் கொஞ்சம் மாற்றத்தை உணர்வோம்.

இதன் காரணமாகவே விமானத்தில் சாப்பிடும் உணவு வகைகளில் உப்பு, காரம், இனிப்பு ஆகியவற்றைச் சற்றுக் கூடுதலாகச் சேர்த்திருப்பார்கள், பாலவிக்னேஸ்வரன்.

டீ அதிகம் குடித்தால் தலைமுடி விரைவாக நரைத்துவிடும் என்கிறாள் என் தோழி, உண்மையா டிங்கு? - ஜி. இனியா, 10-ம் வகுப்பு, தி விஜய் மில்லினியம் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி.

தேநீர் அதிகம் குடித்தால் உடல் நலத்துக்குக் கேடு என்பதற்காக உங்கள் தோழி இப்படிச் சொல்லியிருக்கலாம், இனியா. தேநீர் குடிப்பதால் தலைமுடி விரைவாக நரைக்காது. ஆனால், அளவோடு தேநீர் குடிப்பது நல்லது.

SCROLL FOR NEXT