அரணை (பாம்புராணி) நம்மைக் கடிக்க வரும்போது, மறந்து கடிக்காமல் போய்விடும் என்று சொல்கிறார்களே, உண்மையா டிங்கு? - ரா. தக்ஷ்ணா, 7-ம் வகுப்பு, நாச்சியார் பள்ளி, ஜமீன் ஊத்துக்குளி.
இப்போதும்கூட இப்படியெல்லாம் சொல்கிறார்களா! அரணை பல்லி இனத்தைச் சேர்ந்தது. மிகவும் சாதுவான உயிரினம். மனிதர்களைக் கண்டால் ஓடி ஒளிந்துகொள்ளவே நினைக்கும். அரணையை எடுத்துக் கையில் வைத்தாலும் கடிக்காது. தனக்கு ஆபத்து என்பதை உணரும்போது மட்டும், தன்னைக் காப்பாற்றிக்கொள்ள கடிக்கலாம்.
அப்போது மிக லேசான காயம் ஏற்படலாம். மற்றபடி அரணையின் கடி விஷத்தன்மையுடையது அல்ல. பல்லியைப் போலவே ஆபத்து ஏற்படும்போது, தன்னுடைய வாலை வெட்டிவிட்டு, எதிரியின் கவனம் சிதறும்போது தப்பித்துவிடும். மற்றபடி அரணை கடிக்க வந்துவிட்டு, மறந்துவிட்டு செல்லாது. மனிதர்களைக் கண்டதும் ஓடி ஒளியவே செய்யும், தக்ஷ்ணா.
பிப்ரவரிக்கு மட்டும் 28 நாள் ஏன், எதனால் டிங்கு? – நா. செம்மொழி, 2-ம் வகுப்பு, நோட்ரே டேம் அகாடமி, போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி.
நாம் இப்போது கிரிகோரியன் நாள்காட்டியைப் பயன்படுத்துகிறோம். கிரிகோரியன் நாள்காட்டி வருவதற்கு முன்பு, ஜுலியன் நாள்காட்டி பயன்பாட்டில் இருந்தது. அதற்கு முன்பு ரோமன் நாள்காட்டி இருந்தது. ரோமன் நாள்காட்டி நிலவின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு மார்ச் முதல் டிசம்பர் வரையிலான 10 மாதங்களைக் கொண்ட ஓர் ஆண்டாகத் திகழ்ந்தது.
ரோமானியர்கள் இரட்டைப்படை எண்கள் துரதிர்ஷ்டமானவை என்று கருதியதால், இந்த மாதங்கள் 29 அல்லது 31 நாள்களைக் கொண்டதாக அமைக்கப்பட்டிருந்தன. ரோமானிய மன்னர் நுமா போம்பிலியஸ் ஜனவரி, பிப்ரவரி ஆகிய 2 மாதங்களைப் புதிதாகச் சேர்த்தார். ஓர் ஆண்டுக்கு 365 நாள்கள் இருக்க வேண்டும் என்றால், இந்த இரண்டு மாதங்களில் ஒன்று இரட்டைப்படை எண்ணாக இருக்க வேண்டும்.
எனவே பிப்ரவரி மாதம், இறந்தவர்களைக் கெளரவிக்கும் விதமாக 28 நாள்கள் கொண்ட மாதமாக மாற்றப்பட்டது. பின்னர் ஜூலியஸ் சீஸர் நிலவு சுழற்சியைத் தவிர்த்து, சூரிய சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட மாதங்களாக மாற்றினார்.
அவருடைய ஜூலியன் காலண்டரே, 1582இல் 13ஆம் போப் கிரிகோரியின் கட்டளைப்படி செம்மைப்படுத்தப்பட்டு, இன்று நாம் அறிந்த கிரிகோரியன் காலண்டராக உருவானது. இத்தனை மாற்றங்களிலும் பிப்ரவரி 28 நாள்கள் என்பது மட்டும் மாற்றத்துக்கு உள்ளாகவில்லை. எனினும் 4 ஆண்டுகளுக்கு (லீப் ஆண்டு) ஒருமுறை பிப்ரவரிக்கு 29 நாள்கள் வருகிறது, செம்மொழி.