போக்குவரத்தைச் சரிசெய்ய ஒளிரும் சிவப்பு, மஞ்சள், பச்சை விளக்கு முறையை முதலில் அறிமுகம் செய்து, செயல்படுத்தியது யார், டிங்கு? - ரா. தமிழினி, 4- ம் வகுப்பு, ஏ.எம்.எம் மெட்ரிக் பள்ளி, கோட்டூர்புரம், சென்னை.
அமெரிக்காவில் நில், செல் ஆகிய பச்சை, சிவப்பு விளக்குகளே போக்குவரத்தைச் சரிசெய்வதற்குப் பயன்பட்டு வந்தன. நில், செல் என்கிற இந்த இரண்டு விளக்குகளால் சட்டென்று வாகனங்களை நிறுத்தும்போது விபத்துகள் ஏற்பட்டன.
எனவே வில்லியம் பாட்ஸ் என்கிற அமெரிக்கக் காவல்துறையின் சமிக்ஞை அதிகாரி ஒரு திட்டத்தை யோசித்தார். பச்சைக்கும் சிவப்புக்கும் இடையில் மஞ்சள் விளக்கை வைத்து, 1920இல் டெட்ராய்டு நகரில் புதிய போக்குவரத்து சிக்னலை அறிமுகம் செய்தார். இதன் மூலம் வேகத்தைக் குறைக்க வாகனங்கள் தயாராவதால் விபத்துகள் தவிர்க்கப்பட்டன.
1923இல் ஆப்ரிக்க அமெரிக்கரான காரெட் மார்கென் பச்சை, மஞ்சள், சிவப்பு விளக்குகளுக்கு இடையே சில நொடிகள் விளக்கு எரியாமல் நிறுத்திவைத்து, எரியச் செய்யும் சிக்னல் முறையை அறிமுகம் செய்து, அதுக்குக் காப்புரிமையும் பெற்றார். இவர் மூலமே உலகமே மூன்று வண்ண சிக்னலுக்கு மாறியது, தமிழினி.
நம் சூரியனைப்போல் விண்வெளியில் உள்ள அனைத்துச் சூரியன்களும் வெப்பத்தை வெளியிடுமா, டிங்கு? – மு. சின்னன். 8-ம் வகுப்பு, ஊ.ஒ.ந.நிலைப் பள்ளி, தங்களாச்சேரி. மதுரை.
ஆமாம், சின்னன். நம் சூரியன்களைப் போலவே விண்வெளியில் இருக்கும் அனைத்துச் சூரியன்களும் வெப்பத்தையும் ஒளியையும் வெளியிடுகின்றன. இரவில் தெரியும் நட்சத்திரங்களும் சூரியன்கள் அல்லது விண்மீன்களே.
ஆனால், அனைத்துச் சூரியன்கள் அல்லது விண்மீன்கள் ஒரே அளவில் வெப்பத்தையும் ஒளியையும் வெளியிடுவதில்லை. அவற்றின் நிறை, அளவு, வாழ்நாளுக்கு ஏற்றவாறு வெப்பமும் ஒளியும் குறைவாகவோ அதிகமாகவோ வெளியிடுகின்றன.