கடல்நீர் ஆவியாவதால் உருவாகும் மழைநீர் ஏன் உப்புக் கரிப்பதில்லை, டிங்கு? - ஆர். அர்ச்சனா, 7-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, திருவாரூர்.
அடர்த்தி குறைவான பொருள் மேலே செல்லும், அடர்த்தி அதிகமான பொருள் கீழே தங்கிவிடும். கடல் நீர் ஆவியாகும்போது, நீருடன் கலந்திருக்கும் உப்புகளைக் கடலிலேயே விட்டுவிடுகின்றன.
நீராவியில் உள்ள நீரைவிட உப்புப் படிகத்தின் அடர்த்தி அதிகமானது. நீராவியில் உள்ள காற்றில் ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் அடர்த்தி குறைவாக இருப்பதால் அவை மேலே செல்கின்றன.
உப்புப் படிகங்கள் அடர்த்தி அதிகமாக இருப்பதால் கடலிலேயே தங்கிவிடுகின்றன. அதனால்தான் கடல்நீர் உப்பாக இருக்கிறது. தூய்மையான மழைநீர் சுவை, மணம் அற்றதாக இருக்கிறது, அர்ச்சனா
நிறங்களுக்கும் நல்லது கெட்டதுக்கும் தொடர்பு உண்டா, டிங்கு? - ஜெ. பாலவிக்னேஷ்வரன், 6-ம் வகுப்பு, ஊ.ஒ.ந.நிலைப் பள்ளி, தங்களாச்சேரி, மதுரை.
நிறங்களுக்கும் நல்லது கெட்டதுக்கும் தொடர்பு இருப்பதாகச் சொல்ல முடியாது. சீனா, இந்தியா, ஜப்பான் போன்ற ஆசிய
நாடுகளில் இறந்தவர் வீடுகளுக்குச் செல்லும்போது வெள்ளை உடை அணிந்து செல்கிறார்கள். மேற்குலக நாடுகளிலும் ஐரோப்பிய நாடுகளிலும் திருமணத்தின்போது வெள்ளை உடையை அணிகிறார்கள்.
இந்தியாவில் தீய சக்தி, எதிர்ப்பு, எதிர்மறை விஷயங்களுக்குக் கறுப்பு நிறத்தைப் பயன்படுத்துகிறார்கள். சீனாவில் நம்பிக்கைக்கும் உயர் தரத்துக்கும் கறுப்பு நிறத்தை அடையாளமாகக் காட்டுகிறார்கள்.
மேற்குலக நாடுகளிலும் ஐரோப்பிய நாடுகளிலும் துக்கம், தீய சக்தி, இறுதிச் சடங்கு போன்றவற்றுக்குக் கறுப்பைப் பயன்படுத்துகிறார்கள்.
மகிழ்ச்சிக்கும் அமைதிக்கும் நல்லதுக்கும் பயன்படும் ஒரு நிறம், உலகின் வேறு பகுதிகளில் துக்கத்துக்கும் கெட்டதுக்கும் பயன்படுத்தப்படுகிறது. அப்படி என்றால் நிறத்தால் நல்லது, கெட்டது ஏற்படுவதில்லை என்று தெரிகிறதல்லவா, பாலவிக்னேஷ்வரன்.