மாயா பஜார்

பணத்தை அதிகம் அச்சடித்தால் மக்களின் கஷ்டம் தீருமா? | டிங்குவிடம் கேளுங்கள்

செய்திப்பிரிவு

இந்தியாவில் ஏராளமான மக்கள் கஷ்டப்படுகிறார்களே, நாசிக்கில் அதிகமாகப் பணத்தை அச்சடித்தால், அவர்களின் கஷ்டம் தீரும்தானே, டிங்கு? - ஜ.சை. அன்சஃப், 9-ம் வகுப்பு, செயின்ட் பிரான்சிஸ் அசிசி மெட்ரிக். பள்ளி, மார்த்தால், கன்னியாகுமரி.

இந்தச் சிறிய வயதிலேயே கஷ்டப்படும் மக்கள் பற்றி யோசிக்கும் உங்களை நினைத்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது அன்சஃப். ஆனால், நீங்கள் நினைப்பதுபோல் பணத்தை அடித்து, தேவைப்படுவோருக்கு வழங்கிவிட இயலாது. உங்கள் பள்ளியில் மாணவர்கள் அனைவரும் தினமும் 5 ரூபாய் கொடுத்து ஒரு கொய்யாப்பழம் வாங்கிச் சாப்பிடுகிறீர்கள். திடீரென்று உங்களுக்கு 10 ரூபாய் கொடுக்கிறார்கள்.

அதனால் எல்லாரும் 2 கொய்யாப்பழங்களை வாங்குவதற்காகக் கடைக்குச் செல்கிறீர்கள். உங்களுக்குப் பணம் அதிகமாகக் கிடைத்ததுபோல, கடையில் கொய்யாப்பழங்கள் அதிகமான எண்ணிக்கையில் இல்லை. வழக்கம்போல் இருக்கும் எண்ணிக்கையில்தான் உள்ளது. ஆனால், எல்லாரும் 2 கொய்யாப்பழங்களைக் கேட்பதால், கடைக்காரர் ஒரு பழத்தின் விலையை 10 ரூபாயாக மாற்றிவிடுகிறார்.

இப்போது கொய்யாவின் விலை ஏறிவிட்டது. வழக்கம்போல் ஒரு பழம்தான் வாங்க முடியும். ஆனால், செலவோ அதிகமாகிவிட்டது. இதே மாதிரிதான் பணப்புழக்கம் அதிகமாகும்போது, பொருள்களின் விலை அதிகமாகிவிடும். இதைத்தான் பணவீக்கம் என்கிறார்கள். 1934ஆம் ஆண்டுவரை அரசாங்கம் பணத்தை வெளியிட்டு வந்தது. அதற்குப் பிறகு இந்திய ரிசர்வ் வங்கி பணத்தை அச்சிட்டு, வெளியிடும் பணியை மேற்கொண்டு வருகிறது.

முன்பு பணம் அச்சடிப்பது தங்க இருப்பை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அதாவது, ஒரு நாட்டிடம் எவ்வளவு தங்கம் இருக்கிறதோ, அதற்கு ஏற்ப மட்டுமே பணம் அச்சடிக்க முடியும்.

ஆனால், தற்போது பணம் அச்சடிப்பது தங்க இருப்பை அடிப்படையாகக் கொண்டதல்ல. ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி, பொருளாதார வளர்ச்சி விகிதம், தேவை, பணவீக்கம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, பணம் அச்சிடப்படுகிறது.

மத்திய ரிசர்வ் வங்கி பணத்தை வெளியிட்டாலும் அரசாங்கத்தின் அனுமதியும் வேண்டும். பணம் என்பது வெறும் காகிதம் மட்டுமே. அந்தக் காகிதத்துக்கு மதிப்பு அளிப்பது பொருளாதார வலிமைதான்.

நீங்கள் சொல்வதுபோல் பணத்தை அதிகமாக அச்சடித்துக் கொடுத்தாலும் விலைவாசிதான் உயருமே தவிர, மக்களின் கஷ்டம் தீராது. எனவே, பணத்தை அதிகமாக அடித்து, கஷ்டப்படும் மக்களுக்குக் கொடுக்க முடியாது.

SCROLL FOR NEXT