மாயா பஜார்

காலை உணவைத் தவிர்க்கலாமா? | டிங்குவிடம் கேளுங்கள்

Guest Author

சிப்பிக்குள் முத்து உருவாவது எப்படி, டிங்கு? - கே. நர்மதா, 6-ம் வகுப்பு, அரசு உயர்நிலைப் பள்ளி, நாமக்கல்.

சிப்பி மெல்லுடலி வகையைச் சேர்ந்த உயிரினம். மென்மையான உடலைப் பாதுகாக்கும் விதத்தில் கடினமான ஓட்டால் மூடப்பட்டிருக்கும். இந்த ஓட்டுக்குள் சிறிய துளை இருக்கும்.

          

அதன் வழியே ஏதாவது கல், மண், தூசி போன்ற அந்நியப் பொருள்கள் உள்ளே நுழைந்தால், சிப்பிக்கு உறுத்திக்கொண்டிருக்கும். அந்த உறுத்தலைக் குறைப்பதற்காக Nacre எனும் ஒருவிதத் திரவத்தைச் சுரக்கும்.

இந்தத் திரவம் கெட்டியாகும். மீண்டும் உறுத்தல் ஏற்படும்போது மீண்டும் திரவம் சுரக்கும். இப்படிச் சுரக்கும் திரவமே முத்தாக மாறுகிறது.

கடலில் இயற்கையாக இப்படி முத்து கிடைக்கிறது. சிப்பிகளை வளர்த்து, செயற்கையாக உறுத்தலை உண்டாக்கி, முத்துகளை உற்பத்தி செய்கிறார்கள். இதை வளர்ப்பு முத்து என்று அழைக்கிறார்கள், நர்மதா.

காலை நேரத்தில் டிபன் சாப்பிட முடிவதில்லை. அதற்குப் பதிலாக ஸ்நாக்ஸ் சாப்பிடலாமா டிங்கு? - ரயான், 9-ம் வகுப்பு, ஸ்ரீராமகிருஷ்ணா சாரதா மேல்நிலைப் பள்ளி, ஜாகீரம்மாபாளையம், சேலம்.

இரவு சாப்பிட்டு விட்டு, நீண்ட இடை வெளிக்குப் பிறகு சாப்பிடும் காலை உணவைத் தவிர்க்கக் கூடாது. உணவுக்குப் பதிலாக ஸ்நாக்ஸ் என்று மட்டும் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

எந்த வகையான நொறுக்குத் தீனிகள் அல்லது தின்பண்டங்கள் என்று குறிப்பிடவில்லை. சிப்ஸ், பிஸ்கெட், முறுக்கு, மிக்சர், சாக்லெட் போன்றவற்றைச் சொல்கிறீர்கள் என்றால், அது ஆரோக்கியமானதல்ல. அதனால் பொதுவாகச் சொல்கிறேன் ரயான்.

இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவு வகைகளைச் சாப்பிட இயலாவிட்டால் பரவாயில்லை. அவற்றுக்குப் பதிலாக சிறுதானியத்தில் செய்த கொழுக்கட்டை, பட்டாணி, காராமணி, கொண்டைக்கடலை, பாசிப்பயறு, ராஜ்மா சுண்டல், வேக வைத்த முட்டை, பழங்கள், சத்துமாவுக் கஞ்சி, சர்க்கரை அதிகம் சேர்க்காத பழச்சாறு போன்றவற்றைச் சாப்பிடலாம். பத்தாம் வகுப்புக்குச் செல்ல இருக்கும் நீங்கள், அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும் என்பதால் உணவு விஷயத்தில் அக்கறையுடன் இருப்பது நல்லது.

SCROLL FOR NEXT