மாயா பஜார்

பேருந்தில் தூங்கும்போது தலை ஆடுவது ஏன்? | டிங்குவிடம் கேளுங்கள்

செய்திப்பிரிவு

அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள பெர்முடா முக்கோணம் எனும் பகுதிக்கு மேலே விமானங்கள் பறந்தாலோ, கப்பல்கள் சென்றாலோ அவை கடலுக்குள் மூழ்கிவிடும் எனக் கேள்விப்பட்டேன். இந்தச் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உலகத்திலும் அந்தப் பகுதி அப்படியேதான் உள்ளதா, டிங்கு? – சு. அஷ்மிதா, 8-ம் வகுப்பு, புனித அந்தோணியார் மெட்ரிக். பள்ளி, கணேசபுரம், கோவை.

பெர்முடா முக்கோணம் என்பது வட அட்லாண்டிக் பெருங்கடலின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு கற்பனையான முக்கோணப் பகுதி. மியாமி கடற்கரை, பெர்முடா தீவு, புவர்ட்டோ ரிகோ ஆகிய மூன்று புள்ளிகளை இணைக்கும் முக்கோணமாகக் கருதப்படுகிறது.

இந்தப் பகுதிக்கு மேலே செல்லும் விமானங்கள், இந்தப் பகுதியைக் கடக்கும் கப்பல்கள் காணாமல் போவதாக நம்பப்படுகிறது. இது உண்மை அல்ல. செயற்கைக்கோள், மனிதர்களின் பிழைகளால் காலநிலைக் கணிப்பு முறைகள் முன்னேற்றம் அடையும் முன்பு நிகழ்ந்த விபத்துகளில் மனிதத் தவறுகளும் இயற்கைச் சீற்றங்களுமே முக்கியக் காரணங்களாக இருந்தன.

பெர்முடா முக்கோணத்தில் விபத்துகள் மற்ற எல்லாப் பகுதிகளையும்விட அதிகம் என்பது சரியல்ல. அதே அளவுக்கு அதிகமான கப்பல், விமானப் போக்குவரத்து உள்ள பிற கடற்பகுதிகளுடன் ஒப்பிடும்போது, அங்கு காணாமல் போதல் அல்லது விபத்து ஏற்படும் விகிதம் அதிகம் என்பதற்குத் ஆதாரம் இல்லை. அஷ்மிதா.

நாம் படுத்துத் தூங்கும்போது நம் தலை ஆடுவது இல்லை. ஆனால் பேருந்திலோ, நாற்காலியிலோ அமர்ந்து தூங்கும்போது தலை ஏன் ஆடுகிறது, டிங்கு? - எம். ராகேஷ்ராம், 8-ம் வகுப்பு, அரசினர் உயர்நிலைப் பள்ளி, ஆதனூர்.

நாம் தூங்கும்போது உடலில் உள்ள பல தசைகளின் செயல்பாடு குறைகிறது (Muscle Relaxation). குறிப்பாக, கழுத்தைத் தாங்கிப் பிடிக்கும் தசைகளின் செயல்பாடும் குறைகிறது.

படுக்கையில் தூங்கும்போது தலை, கழுத்து, உடலுக்குப் படுக்கையும் தலையணையும் ஆதரவாக இருப்பதால் தலை நிலையாக இருக்கிறது. ஆனால், பேருந்தில் செல்லும்போது பேருந்தின் இயக்கம், வேகம், திருப்பம் காரணமாகத் தலை அசைகிறது.

பேருந்தில் தூங்கும்போது கழுத்துத் தசைகளின் செயல்பாடு குறைவதால், இந்த அசைவுகளை எதிர்த்துத் தலையை நேராக வைத்திருக்கும் திறனும் குறைகிறது.

மேலும், ஈர்ப்பு விசையும் தலையைக் கீழ்நோக்கி இழுக்கிறது. எனவே, பேருந்தின் இயக்கம், கழுத்துத் தசைகளின் குறைந்த செயல்பாடு, ஈர்ப்பு விசை போன்ற காரணங்களால் தூங்கும்போது தலை முன்னோக்கி அல்லது பக்கவாட்டில் சாயத் தொடங்குகிறது, ராகேஷ்ராம்.

SCROLL FOR NEXT