மாயா பஜார்

காகமும் மன்னரும் | கதை

ஜி.சுந்தரராஜன்

வில்லாளபுரத்தை மாயவனார் என்கிற மன்னர் ஆண்டு வந்தார். அரண்மனையைச் சுற்றி நிறைய மரங்கள் இருந்தன. அதில் ஒரு மரத்தில் காகம் கூடுகட்டி வாழ்ந்துவந்தது. காகம் எப்போதும் கத்திக் கொண்டிருக்கும். அது ஏன் கத்துகிறது, எதற்குக் கத்துகிறது என்று யாருக்கும் தெரியாது. சில நேரம் உணவைக் கண்டதும் கத்தும்.

சில நேரம் ஆபத்து என்றால் கத்தும். இன்னும் சில நேரம் அதைப் பார்க்க விருந்தினர்கள் வந்தால் கத்தும். அப்போது விருந்தினர் காகங்களும் அதனுடன் சேர்ந்து கத்துவதால், அரண்மனைக்குள் இருப்பவர்களால் தாங்கிக்கொள்ளவே முடியாது.

இதைக்கூட மன்னர் சகித்துக்கொண்டார். ஆனால், அவர் வெளியே புறப்படும்போது கத்தினால், காரியம் நடக்காது என்று மன்னர் நினைத்தார். எனவே காகத்தை அப்புறப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தார் மன்னர்.

“என் படுக்கையறையை ஒட்டியிருக்கும் மரத்தில் உள்ள காகம் என் தூக்கத்தைக் கெடுக்கிறது. அமைதியைக் குலைக்கிறது. கத்திகத்தி என் காரியத்தைக் கெடுக்கிறது. உடனே இந்தக் காகத்தை அப்புறப்படுத்தி விடுங்கள்” என்று சேவகர்களுக்குக் கட்டளை இட்டார் மன்னர்.

“மன்னா, காகம் கத்துவதற்கும் காரியம் கெடுவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்றார் அரசி. “நானும் அப்படித்தான் நினைத்தேன். ஆனால், கடந்த இரண்டு முறை நான் வெளியே சென்றபோது காரியம் கைகூடவில்லை.”

“இப்படி எல்லாம் யோசிக்காதீர்கள். காகத்துக்கு நம் காரியத்தைக் கெடுக்க வேண்டும் என்கிற எண்ணம் எல்லாம் இருக்காது.” “சரி, நீ சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனாலும் காகத்தின் தொந்தரவை என்னால் இனிமேலும் பொறுக்க முடியாது.”

“மன்னா, அமாவாசை இரவு. எங்கும் வெளிச்சம் இல்லை. பகலிலேயே காகத்தின் கூட்டைக் கண்டறிவது கடினம். இந்த இரவில் எப்படிக் காகத்தைத் தேட முடியும்?” “நீங்கள் சொல்வதும் சரிதான். இந்த இரவை மட்டும் சகித்துக்கொள்கிறேன். நாளை காலை காகம் இந்த அரண்மனை வளாகத்தில் இருக்கக் கூடாது. அதேநேரம் அந்தக் காகத்துக்கு எந்த ஆபத்தும் ஏற்படக் கூடாது” என்றார் மன்னர்.

“நீங்கள் சொன்னதைப் போலவே செய்துவிடுகிறோம் மன்னா” என்று சொல்லிவிட்டுச் சென்றார்கள் சேவகர்கள். இரவில் மன்னர் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தபோது காகம் பெரும் குரல் எடுத்துக் கத்தத் தொடங்கியது. “சேவகர்களே, காகம் இன்று அளவுக்கு அதிகமாகக் கத்துகிறது. என்னவென்று பாருங்கள்” என்றார் மன்னர்.

சேவகர்கள் வேகமாகச் சென்றார்கள். சிறிது நேரத்தில் காகத்தின் குரல் கேட்கவில்லை. மன்னர் நிம்மதியாக உறங்கினார். மறுநாள் காலை மீண்டும் காகத்தின் குரல் வழக்கம்போல் கேட்டது. “சேவகர்களே, இன்றே காகத்தை விரட்டும் பணியை முடித்துவிடுங்கள்.

நேரம் காலம் பார்க்காமல் கத்திக்கொண்டே இருக்கிறது” என்றர் மன்னர். “மன்னா, காகத்தால்தான் நீங்கள் உயிரோடு இருக்கிறீர்கள். எதிரி நாட்டு வீரகள் இருவர் பெரிய கத்தியோடு மரத்தில் காத்திருந்தனர். அவர்களைப் பார்த்து, காகம் கத்த ஆரம்பித்துவிட்டது.

நாங்கள் சென்றபோது இருவரும் மரக்கிளைகளில் ஒளிந்திருந்தனர். காகத்தின் உதவியால் அவர்களைப் பிடித்து, சிறையில் அடைத்துவிட்டோம். “ஆ... இவ்வளவு நடந்திருக்கிறதா? நல்லவேளை அந்தக் காகத்தால் நான் காப்பாற்றப்பட்டேன்.” “மன்னா, அந்தக் காகத்தை அப்புறப்படுத்திவிடவா?” “காகம் மட்டும் கத்தாமல் இருந்திருந்தால் இந்தக் கயவர்கள் உள்ளே நுழைந்து இருப்பார்கள்.

காகத்தால்தான் இவர்களைப் பிடிக்கவே முடிந்திருக்கிறது. அதனால் காகத்தை ஒன்றும் செய்ய வேண்டாம். என் படுக்கை அறையை நான் கிழக்கு பக்கம் மாற்றிக்கொள்கிறேன் ” என்றார் மன்னர். மகிழ்ந்த சேவகர்கள் இருவரும் மன்னரின் படுக்கை அறையை மாற்றும் முயற்சியில் இறங்கினர்.

SCROLL FOR NEXT