விடுமுறையில் ஆனைமலைக்கு வந்திருந்தாள் கோதை. இயற்கை அழகைப் பார்த்துக்கொண்டே நடந்து கொண்டிருந்தபோது, எதிரே நீலி வருவதைக் கண்டாள். ஆசையோடு ஓடிச் சென்று நீலியைக் கட்டிக்கொண்டாள் கோதை.
“எப்ப வந்தே கோதை?” “நேற்றுதான் வந்தேன் நீலி. எங்கே போறே?” “வேலன் தாத்தாவைப் பார்க்க வந்தேன். அவரும் மதிவாணன் மாமாவும் செண்பகக் காட்டுக்குள்ள போயிருக்காங்க.”
“அப்படியா? நானும் வர்றேன்” என்று கோதை நீலியுடன் நடந்தாள். இருவரும் காட்டுப் பாதையில் நடந்து சென்றபோது, ஏதோ குண்டு வெடித்த மாதிரி சத்தம் கேட்டது. கோதை திடுக்கிட்டு நின்றாள். அந்தச் சத்தத்தில் மரங்களில் இருந்த பறவைகள் படபடவென்று சிறகடித்துப் பறந்தன. காய்ந்த இலைகள் சிதறி விழுந்தன.
“என்ன சத்தம் இது?” என்று பதற்றத்துடன் கேட்டாள் கோதை. “துப்பாக்கிச் சத்தம் மாதிரி இருக்கே” என்றாள் நீலி. இருவரும் சில நொடிகள் அசையாமல் நின்றார்கள். அப்போது சர்ரென்று ஏதோ ஒன்று அவர்களைக் கடந்து சென்று, முன்னால் இருந்த சருகுகளுக்கு இடையே விழுந்தது.
“ஐயோ” என்று அலறிய கோதை, நீலியின் கையை இறுகப் பிடித்துக்கொண்டாள். “பயப்படாதீங்க” என்கிற குரல்கள் கேட்டன. திரும்பிப் பார்த்தால் வேலன் தாத்தாவும் வன அதிகாரியும் வந்தார்கள். “தாத்தா, என்ன சத்தம் அது? துப்பாக்கியால சுட்டாங்களா?” என்று கேட்டாள் கோதை.
தாத்தா சிரித்துவிட்டு, “இல்லம்மா. அது, மரம் தன்னோட விதைகளைத் தூக்கி எறிஞ்ச சத்தம்” என்றார். “விதைகளா? மரம் தூக்கி எறிஞ்சதா?” என்று வியந்தாள் நீலி. “வாங்க. அந்தச் சத்தம் வந்த இடத்துக்கே போகலாம்” என்றார் மதிவாணன்.
எல்லாரும் ஒற்றையடிப் பாதையில் சிறிது தூரம் நடந்தார்கள். அங்கே ஓர் உயரமான மரத்தைக் காட்டினார் மதிவாணன். அதன் கிளைகளில் உருண்டையான காய்கள் கொத்துக் கொத்தாகத் தொங்கின.
“இது ரப்பர் மரம். இந்தக் காய் மரத்திலேயே நன்றாக முற்றிக் காயும்போது, காயின் வெளிப்புற ஓடும் உள்புறமும் உலரத் தொடங்கும். அதிலிருக்கும் நீர்ச்சத்துக் குறையும். காய்கள் சுருங்க ஆரம்பிக்கும். சுருங்குவதால் காய்க்குள் இழுவிசை உருவாகும்.”
“இழுவிசையா?” என்று கேட்டாள் கோதை. “ஆமாம். ஒரு ரப்பர் பட்டையை இழுத்துப் பிடிச்சிருக்கோம்னு நினைச்சுக்கோ. அது திடீரென்று அறுந்தால், ‘பட்’ன்னு சத்தம் வரும் இல்லையா? அதுபோலத்தான்.”
மதிவாணன் தரையில் கிடந்த வெடித்த காயின் ஓடை எடுத்துக் காட்டினார். “காய்க்குள்ளே இழுவிசை கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாயிட்டே போகும். கடைசியில் அந்தக் காயால இழுவிசையைத் தாங்க முடியாது. அப்போது காய் திடீரென்று பிளந்து, உள்ளே இருக்கும் விதைகளை வேகமாக வெளியே தூக்கி எறியும்.”
அவர் சொல்லி முடிப்பதற்குள், ’படார்’ என்று மரத்தின் மேலிருந்து மறுபடியும் சத்தம் கேட்டது. ஒரு காய் பிளந்தது. உள்ளே இருந்த விதைகள் சிதறின. “அடடா! ரொம்ப ஆச்சரியமா இருக்கே!” என்ற கோதை, தரையில் கிடந்த விதையைத் தொட்டுப் பார்த்தாள்.
“தாத்தா, பழங்கள் பழுத்தா கீழே விழணும், இல்லைனா பறவைகள் சாப்பிட்டு எச்சம் வழியா விதையைப் பரப்பணும். இந்த மரம் எதுக்காக விதையைத் தூர எறியணும்?” தாத்தா அடிமரத்தின் மீது கைவைத்து, “மரத்தோட புத்திசாலித்தனம்” என்றார்.
“அது எப்படி?” “ஒரு மரம் விதைகளை எல்லாம் தனக்கு அடியிலேயே உதிர்த்தா என்ன ஆகும்? அம்மா மரத்தோட நிழல்ல நிறைய விதைகள் முளைக்க ஆரம்பிக்கும். அப்படி முளைச்சா, சின்னஞ்சிறு கன்றுகளுக்குச் சூரிய வெளிச்சமே கிடைக்காது. மண்ணுல இருக்கிற சத்துகளும் சரியாகக் கிடைக்காது. அதனால எந்தக் கன்றும் பெருசா வளர முடியாது” என்றார் தாத்தா.
“அதனால, இந்த மரம் தன்னோட விதைகளைச் சற்றுத் தொலைவுக்குத் தூக்கி வீசுது. அங்கே விதை விழுந்து முளைத்தால், புதிய கன்றுக்கு வளர இடமும் சூரிய ஒளியும் கிடைக்கும்” என்றார் வன அதிகாரி.
“அதாவது, பிள்ளைகள் தன்னோட காலடியில் நெரிசலா இருக்காம, கொஞ்சம் தள்ளிப் போய் வளரணும்னு மரம் நினைக்குதா?” “அப்படித்தான். இந்த மரத்துக்கு விதைகளைப் பரப்ப வேறு யாருடைய உதவியும் தேவையில்லை.
பறவையையோ காற்றையோ நம்பி இல்லை. பழம் வெடிக்கும்போது, அதற்குள் இருக்கும் விதைகள் வேகமாக வெளியேறி, மரத்திலிருந்து தொலைவில் விழுகின்றன. ஒரு தாவரம், தனது விதைகளைத் தானே பரப்பிக்கொள்ளும் முறைக்கு அறிவியலில் ‘ஆட்டோகோரி’ (Autochory - வெடித்துப் பரவுதல்) என்று பெயர்.
அம்மா மரத்திலிருந்து சிறிது தொலைவில் விதைகள் விழுவதால், புதிய கன்றுகள் வளர இடமும் வெளிச்சமும் கிடைக்கிறது. இது இயற்கையின் தகவமைப்பு” என்றார் மதிவாணன். “காட்டில் ஒவ்வொரு சத்தத்துக்குப் பின்னாலும் ஒரு கதை இருக்கு. ஒவ்வொரு விதைக்குப் பின்னாலும் ஒரு அதிசயம் இருக்கு” என்றார் தாத்தா.
அதேநேரத்தில் மரத்தின் உச்சியிலிருந்து மறுபடியும், ‘படார்’ என்கிற சத்தம் கேட்டது. ஒரு விதை அவர்களுக்கு அருகில் வந்து விழுந்தது. கோதையும் நீலியும் சிரித்துக்கொண்டே மேலே பார்த்தார்கள்.