மாயா பஜார்

சிற்பி | கதை

கொ.மா.கோ.இளங்கோ

செண்பகக் காடு அன்று வழக்கத்தைவிட அழகாக இருந்தது. அங்கிருந்த காய்ந்த மரங்கள் ஒவ்வொன்றும் அழகிய சிற்பங்களாக மாறி இருந்தன. இதற்கெல்லாம் காரணம் ஒரு மரங்கொத்தி. யானைக் குட்டி தும்பிக்கையைத் தூக்கிப் பிளிறுவது, முயலின் நீளமான காதுகளைப் பிடித்து அதன் அம்மா தூக்கி வருவது, புள்ளிமான் தனது கொம்புகளை கூர்செய்வதுபோல மரங்கொத்தி செதுக்கிய சிற்பங்கள் காடு முழுவதும் காணப்பட்டன. காட்டில் சிற்பக் காட்சி நடப்பது போலிருந்தது.

அந்த மரங்கொத்திக்கு எதனால் அப்படி ஓர் ஆசை வந்தது என்று தெரியவில்லை. காய்ந்த மரங்களைத் தேர்ந்தெடுத்து, நண்பர்களின் உருவங்களைச் சிற்பமாக வடித்துக்கொண்டிருந்தது. இதனால் மரங்கொத்திக்கு விலங்குகள் மத்தியில் நல்ல பெயர் கிடைத்தது.

          

அன்று செண்பகக் காட்டின் அரசன் புலி அந்தப் பக்கம் வந்தது. மரங்களில் செதுக்கப்பட்டிருந்த சிற்பங்களைப் பார்த்து வியந்தது. “மரங்கொத்தியே, எங்கே இருக்கிறாய்?” பயத்துடன் பறந்துவந்த மரங்கொத்தி, “சொல்லுங்கள் அரசரே” என்றது. “இந்தச் சிற்பங்கள் எல்லாம் அற்புதம்! நான் இந்தத் தேசத்தின் ராஜா.

நான் என் மனைவியுடன் வேட்டையாடுவதுபோல நீ சிற்பம் செதுக்க வேண்டும். ஆனால், என்னை இப்படி மரத்தில் செதுக்கக் கூடாது. ஒரு பெரிய பாறையில் செதுக்க வேண்டும்” என்று கட்டளையிட்டது புலி. “அரசே, இந்தச் சிறிய அலகால் மரத்தைச் செதுக்கலாம். கல்லைச் செதுக்கினால் அலகு உடைந்துவிடும்” என்று பயத்துடன் சொன்னது மரங்கொத்தி. அதைக் கண்டுகொள்ளவில்லை புலி.

“யானையே, மலையில் இருக்கும் ஒரு பெரிய பாறையை இங்கே உருட்டித் தள்ளு. அதில் இவன் சிற்பம் செதுக்க வேண்டும். இல்லை என்றால் இருவரையும் நாடு கடத்திவிடுவேன்” என்று மிரட்டியது புலி. யானை, “புலியாரே, மலை உச்சியில் இருந்து பாறையை உருட்டுவது ஆபத்து. கீழே உள்ள மரங்கள், செடிகள், விலங்குகள் பாதிக்கப்படலாம். இது சரியான செயல் அல்ல” என்றது.

“நான் சொல்வதைச் செய்” என்று உறுமிவிட்டு, புலி ஒரு மரத்தடியில் காத்திருந்தது. அரசரின் ஆணையைத் தட்டமுடியாத யானை கஷ்டப்பட்டு ஒரு பாறையை உருட்டிக்கொண்டு வந்து நிறுத்தியது. மரங்கொத்தியைப் பார்த்து, “இப்போது என் சிற்பத்தைச் செதுக்கு” என்றது புலி. மரங்கொத்தி சிறிது நேரம் யோசித்தது. பிறகு பாறையைச் சுற்றிச் சுற்றி வந்தது.

அதன் நண்பர்களான முயலும் மானும் கவலைப்பட்டன. “நண்பா, உன் அலகு உடைந்துவிடுமே. என்ன செய்யப் போகிறாய்?” என்று கேட்டது முயல். மரங்கொத்தி புன்னகை செய்தது. “அதிகாரத்தை அறிவால் வெல்லலாம் நண்பர்களே, கவலைப்படாதீர்கள்” என்றது.

பொறுமை இழந்த புலி, “எனக்கு வேறு வேலை இருக்கிறது. சிற்பம் வடித்ததும் சொல்லி அனுப்பு” என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து நகர்ந்தது. மரங்கொத்தி பாறையை விட்டுவிட்டு, காய்ந்த கருங்காலி மரத்தில் விடிய விடிய செதுக்க ஆரம்பித்தது. நண்பர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.

இரண்டு நாள்கள் கழித்து புலி திரும்பி வந்தது. ஆனால், அங்கே பாறையில் எந்த மாற்றமும் இல்லை. புலிக்குக் கோபம் வந்துவிட்டது. “என்ன தைரியம் உனக்கு?” என்று உறுமியது புலி. மரங்கொத்தி மிகவும் பணிவுடன், “புலியாரே, கொஞ்சம் நிதானமாகப் பாருங்கள். அதோ பாருங்கள்” என்றது.

புலி திரும்பிப் பார்த்தது. அந்தப் பாறையைச் சுற்றி இருந்த நான்கு காய்ந்த கருங்காலி மரங்களில், நான்கு புலிகள் அந்தப் பாறையைத் தன் தோள்களில் தாங்கிப் பிடிப்பதுபோல மரங்கொத்தி சிற்பங்களைச் செதுக்கி இருந்தது. அந்தப் பாறை இப்போது ஒரு மிகப்பெரிய சிம்மாசனம்போலக் காட்சியளித்தது.

“புலியாரே, உலகம் போற்றும் உங்கள் வீரத்தை இந்த மரச்சிற்பங்கள் அழகாக வெளிப்படுத்துகின்றன. இந்தப் பாறை உங்களின் ராஜ சிம்மாசனம். இதில் நீங்கள் அமரும்போதுதான் இந்தக் காட்சியே முழுமை அடையும்” என்றது மரங்கொத்தி. புலி மெதுவாக அந்தப் பாறைச் சிம்மாசனத்தில் ஏறி அமர்ந்தது.

அங்கிருந்த விலங்குகள் மிகப் பிரமாதமாக இருப்பதாகக் கூறின. “மரங்கொத்தியே, உன் திறமையைக் கண்டு நான் பிரமிக்கிறேன். இனி நீயே செண்பகக் காட்டின் தலைமைச் சிற்பி. யோசிக்காமல் பாறையில் சிற்பம் செதுக்கச் சொல்லிவிட்டேன். இனி அப்படி ஒரு யோசனை என்னிடமிருந்து வராது” என்றது புலி. மரங்கொத்தி நன்றி சொன்னது. முயலும் மானும் நிம்மதி அடைந்தன.

SCROLL FOR NEXT