பூவசரங்காட்டில் அடிக்கடி கனமழை பெய்யும். நீர் தேங்கிப் பெரும்பாலான இடங்கள் சதுப்பு நிலமாகிவிடும். அதனால் காட்டு விலங்குகள் உணவு தேட முடியாமல் தவித்தன. அதனை அறிந்த சிங்கராஜா காட்டில் உணவுக் கிடங்கு ஒன்றை அமைத்தது.
பெரிய குகை ஒன்றில் எளிதில் கெட்டுப்போகாத எல்லா உணவு வகைகளையும் சேமித்து வைக்கும்படி உத்தரவிட்டது. உணவுக் கிடங்கின் வாசல் பெரிய பாறைகளால் மூடப்பட்டிருந்தது.
காட்டில் உணவு தேட முடியாத காலத்தில் உணவுக் கிடங்கிலிருந்து உணவை எடுத்து விலங்குகளுக்குக் கொடுக்கும்படி அமைச்சர் யானைக்கு சிங்கராஜா உத்தர விட்டிருந்தது.
உணவுக் கிடங்கு பூட்டப்பட்டிருந்தாலும் எப்படியோ உணவு காணாமல் போய்க்கொண்டிருந்தது. யாரோ ஒருசில விலங்குகள்தான் உணவு தேடச் சோம்பல்பட்டு கிடங்கிலிருந்து உணவைத் திருடித் தின்றிருக்கின்றன என்று சிங்கராஜாவுக்குப் புரிந்தது. ஆனாலும் யார் திருடினார்கள் என்று கண்டறிய முடியவில்லை.
உடனே சிங்கராஜா, “உணவுக் கிடங்கில் திருடுபவர் களைக் கண்டறிய உதவுபவருக்குத் தக்க சன்மானம் வழங்கப்படும்” என்று அறிவித்தது. சிங்கராஜாவின் அறிவிப்பைக் கேட்டு சில விலங்குகள் திருடர்களைத் தாங்கள் கண்டறிவதாகக் கூறின. ஆனாலும் அவர்களால் திருடர்களைக் கண்டறிய முடியவில்லை.
சில நாள்களுக்குப் பிறகு முயல் சிங்கராஜாவின் முன்னே வந்து நின்றது. “அரசே, நான் ஒரு மந்திரவாதி. உணவுக் கிடங்கில் திருடும் திருடர்களை என் மந்திரத்தாலேயே கண்டறிந்து விடுவேன்” என்றது.
முயல் சொன்னதைக் கேட்ட சிங்கராஜாவால் அதை நம்ப முடியவில்லை. ஆனாலும், “எப்படியாவது எங்கள் உணவுக் கிடங்கில் திருடுபவர்களைக் கண்டறிந்து விட்டால் போதும். நிச்சயம் நான் அறிவித்தபடி பரிசு உண்டு” என்று சொன்னது.
“இன்னும் ஒரு வாரத்திற்குள் நான் திருடர்களைக் கண்டறிகிறேன். அதற்கு முன் மூன்று நாள்கள் நான் உணவுக் கிடங்கிற்குள் சென்று மந்திரம் போட வேண்டும்” என்றது முயல். சிங்கராஜாவும் முயலை அழைத்துச் செல்லும்படி யானையிடம் சொன்னது.
நான்காவது நாள் சிங்கராஜாவின் முன்னே வந்து நின்றது முயல். “அரசே, நம் உணவுக் கிடங்கில் உணவைத் திருடுவது நரியும் குரங்கும்தான்” என்றது. “உண்மையாகவா, அப்படி என்றால் உடனே நரியையும் குரங்கையும் என்னிடம் அழைத்து வாருங்கள்” என்று பணியாட்களிடம் உத்தரவிட்டது சிங்கராஜா.
சிறிது நேரத்தில் நரியும் குரங்கும் சிங்கராஜாவின் முன்னே வந்து நின்றன. திருடர்கள் அகப்பட்டுவிட்டார்கள் என்பதை அறிந்த மற்ற விலங்குகளும் சிங்கராஜாவின் இருப்பிடத்திற்கு வந்து சேர்ந்தன.
“நீங்கள்தானே நம் உணவுக் கிடங்கில் உள்ள உணவைத் திருடித்தின்றீர்கள். உண்மையைச் சொல்லுங்கள். நீங்களாகவே உண்மையை ஒப்புக்கொண்டால் குறைவான தண்டனை தருவேன். இல்லை என்றால் உண்மையை ஒப்புக்கொள்ள வைப்பேன்” என்றது சிங்கராஜா.
உடனே நரியும் குரங்கும். “அரசே, எங்களை மன்னித்துவிடுங்கள். நாங்கள்தான் உணவுக் கிடங்கிலிருந்து உணவைத் திருடித் தின்றோம்” என்று உண்மையை ஒப்புக் கொண்டன.
“நீங்களே உண்மையை ஒப்புக் கொண்டதால் உங்களுக்கு வேறு தண்டனை எதுவும் தரப் போவதில்லை. ஆனால், இன்றிலிருந்து நீங்கள் இருவரும்தான் நம் உணவுக் கிடங்கின் பாதுகாவலர்கள். உணவு ஏதும் திருடு போனால் நீங்கள்தான் பொறுப்பு” என்று சொன்னது சிங்கராஜா.
பிறகு சிங்கராஜா முயலிடம், “எந்த மந்திரத்தால் நரியும் குரங்கும்தான் திருடர்கள் என்று கண்டறிந்தாய்?” என்று கேட்டது. முயல் சிரித்தது. “அரசே, என் புத்தியால்தான் கண்டறிந்தேன். பெரிய பாறைகளால் மூடப்பட்டிருக்கும் உணவுக் கிடங்கை யானை, காண்டாமிருகம் போன்ற பெரிய விலங்குளால்தான் திறக்க முடியும்.
அதனால் உணவுக் கிடங்கிற்குள் செல்ல வேறு ஏதேனும் வழி இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அந்த வழியைக் கண்டறிய தேன் நிரம்பிய மலர்களை உணவுக் கிடங்கினுள் வைத்தேன். பிறகு உணவுக் கிடங்கைச் சுற்றி வந்தேன்.
அப்போது ஓரிடத்தில் வண்டுகளும் எறும்புகளும் ஒரு சிறிய கல்லின் இடைவெளியில் குகைக்குள் போய் வருவதைப் பார்த்தேன். அந்த இடத்தில் ஒரு துளை இருப்பதையும் அது கல்லால் மூடப்பட்டிருப்பதையும் தெரிந்து கொண்டேன்” என்றது முயல்.
“நரியும் குரங்கும்தான் திருடர்கள் என்பதை எப்படிக் கண்டறிந்தாய்?” என்று கேட்டது சிங்கராஜா. “உணவுக் கிடங்கினுள் செல்லும் ரகசிய வழியில் ஈரக் களிமண்ணைப் பரப்பி வைத்தேன். நரி, குரங்கின் கால்தடங்கள் களிமண்ணில் பதிந்திருந்தன. எனவே அவர்கள்தான் திருடர்கள் என்றும் கண்டறிந்தேன்” என்றது முயல்.
“அப்படி என்றால் மந்திரத்தின் மூலம் நீ இதைக் கண்டறிய வில்லையா?” என்று கேட்டது சிங்கராஜா. “அரசே, மந்திரம் என்பதே அறிவாற்றல்தானே? அறிவால் நல்ல யோசனைகள் கூறுபவரையே மந்திரி என்கிறோம்.
எந்த ஒரு செயலையும் பல்வேறு கோணங்களில் சிந்தித்தால் எல்லாருமே அறிவாற்றலைப் பெற முடியும்” என்றது முயல். முயலின் அறிவாற்றலைக் கண்டு வியந்த சிங்கராஜா சிறந்த பரிசையும் கொடுத்து, காட்டின் அமைச்சராகவும் நியமித்தது.