நவீன இயற்பியலின் மிக முக்கியமான கண்டறிதல்களில் ஒன்று, ஒளிமின் விளைவு (Photo Electric Effect). 19ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில் ஒளி என்பது துகள்களா (Particles), அலைகளா (Waves) என்கிற விவாதம் அறிவியல் அறிஞர்களிடையே தீவிரமாக நிலவியது.
நியூட்டன் போன்றோர் ஒளி என்பது நுண் துகள்களால் ஆனது என நம்பினர். ஆனால் 1801ஆம் ஆண்டு தாமஸ் யங் மேற்கொண்ட சோதனை, ஒளிக்கு அலை பண்பு இருப்பதை உலகுக்குக் காட்டியது.
இதனால் ஒளி என்பது அலை போன்றதே என அறிவியலாளர்களும் கருதத் தொடங்கினர். இந்த நிலையில், ஒளிமின் விளைவுகள் குறித்த ஆய்வுகளே ஒளியின் தனித்துவமான பண்பை உலகுக்கு உணர்த்தின.
ஒளிமின் விளைவு என்றால் என்ன? ஓர் உலோகத்தை எடுத்துக்கொள்வோம். அதன் மேற்பரப்பில் ஒளியைப் பாய்ச்சினால் அது உலோகத்தின் பரப்பிலுள்ள சில எலக்ட்ரான்களை வெளியேற்றும். இதுதான் ஒளிமின் விளைவு என அழைக்கப்படுகிறது.
இந்த நிகழ்வு ஏற்படுவதற்குக் காரணம், ஒளியிலுள்ள போட்டான்கள் (Photons). ஆம், ஒளி என்பது போட்டான்கள் எனும் துகள்களால் ஆனது. இந்த போட்டான்களில் குறிப்பிட்ட அளவு ஆற்றல் இருக்கும். இதனால் அவை உலோகத்தின் மேற்பரப்பில் மோதும்போது எலக்ட்ரான்களைச் சிதறடிக்கின்றன. இவ்வாறு சிதறும் எலக்ட்ரான்கள் போட்டோ எலக்ட்ரான்கள் என அறியப்படுகின்றன.
அதற்காக ஒளி மோதினாலே உலோகங்கள் எலக்ட்ரான்களை வெளியேற்றுமா, என்றால் கிடையாது. ஒளிக்கதிரின் அதிர்வெண், உலோகத்தின் பயன்தொடக்க அதிர்வெண்ணை (Threshold Frequency) விட அதிகமாக இருக்கும்பட்சத்தில்தான் அது நிகழும். பயன்தொடக்க அதிர்வெண் என்பதை எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், உலோகத்திலுள்ள எலக்ட்ரான் வெளியேறுவதற்குத் தேவைப்படும் ஒளியின் குறைந்த அளவு அதிர்வெண்.
இந்த ஒளிமின் விளைவு குறித்த ஆய்வுக்கு முதலில் வித்திட்டவர், பிரெஞ்சு இயற்பியலாளரான எட்மண்ட் பெக்கியூரல். 1839ஆம் ஆண்டு இவர் சோதனை செய்துகொண்டிருந்தபோது ஒளியால் மின்னாற்றலை உருவாக்க முடியும் எனக் கண்டறிந்தார். இதன்பின் வந்தவர்கள் அவரது கண்டறிதலை மேலும் செழுமைப்படுத்தினர்.
ஒளிமின் விளைவுகள் குறித்த ஆய்வுகளுக்குப் பின்னணியாக இருந்தது இரண்டாம் தொழிற்புரட்சி. 1800களில் ஐரோப்பாவில் ஆங்காங்கே மின்சாரம் தலைகாட்டத் தொடங்கியது. தந்தித் தொழில்நுட்பத்தில் மின்சாரம் புகுந்தது. ஜவுளி தொழிற்சாலை களும் அச்சுத் தொழிற்சாலைகளும் மின்சாரத்திற்கு மாறின.
இந்தத் தொழிற்சாலைகளில் மின்னியந்திரங்கள் அப்போது அறிமுகமாகி யிருக்கவில்லை. தொழிற்சாலைகளை ஒளியூட்டுவதற்கு மட்டுமே மின்சாரம் பயன்பட்டது.
இதன்பின் டிராம் கார்கள் மின்சாரத்தில் இயங்கத் தொடங்கின. நகரங்களில் சாலை விளக்குகள் மின்மயமாக்கப்பட்டன. இவ்வாறு மின்சாரத்தின் பயன்பாடு அதிகரிக்கவே, கதிர்வீச்சு குறித்தும், ஒளி குறித்தும் துல்லியமாக அறியும் தேவை உருவானது.
ஏராளமான முதலீடுகள் மின்சாரம் தொடர்பான நிறுவனங்களில் குவிந்தன. கல்வி நிலையங்களும்கூட மின்சாரம், ஒளி சார்ந்த ஆய்வுகளை ஊக்கப்படுத்தின. இந்த ஆய்வுகளில் ஜெர்மனி முன்னணியில் இருந்தது. மின்சாரம், ஒளி தொடர்பான ஆய்வுகளுக்காக ஜெர்மன் அரசு சிறப்பு நிதி ஒதுக்கியது. இதனாலேயே ஜெர்மனியில் இருந்து ஏராளமான அறிவியலாளர்கள் உருவாகத் தொடங்கினர்.
அவர்களில் முக்கியமான ஒருவர் ஹையின்ரிக் ஹெர்ட்ஸ். ஜேம்ஸ் கிளர்க் மேக்ஸ்வல் ஊகித்துச் சென்ற மின்காந்த அலைகளை நிரூபிக்க வேண்டும் என்று ஆய்வுகளில் ஈடுபட்டிருந்த ஹெர்ட்ஸ், 1887இல் புறஊதா ஒளி மின்பொறியை உருவாக்குவதைக் கவனித்தார்.
இதுவே ஒளிமின் விளைவு குறித்த முதல் கண்டறிதல். இதைத் தொடர்ந்து பல்வேறு ஆய்வுகள் நடைபெற்று ஒளிமின் விளைவு நிகழ்வதை அறிவியலாளர்கள் உறுதி செய்தனர்.
ஆனால், அது ஏன் நிகழ்கிறது என்பதை விளக்கியவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன். 1900களில் ஒளி குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டிருந்த ஐன்ஸ்டைன், ஒளி என்பது அலை வடிவில் மட்டுமே இருப்பதில்லை என்பதைக் கண்டறிந்தார்.
ஒளி என்பது தனித்தனி ஆற்றல் சிப்பங்கள் (Packets of energy) வடிவிலும் இருக்கிறது. இந்த ஆற்றல் சிப்பங்கள் பருப்பொருளின் மீது மோதும்போது எலக்ட்ரான்களை உமிழ வைக்கின்றன என்றார். இந்த ஆற்றல் சிப்பங்களே போட்டான்கள் (Photons) என அறியப்படுகின்றன.
இதன் மூலம் அலை, துகள் என இரண்டு பண்புகளையும் ஒளி ஒருங்கே பெற்றுள்ளது. ஒளி பரவும்போது அலையாகவும், பருப்பொருளுடன் இடைவினை புரியும்போது துகளாகவும் செயல்படுகிறது என நிறுவினார். இதுவே ஒளியின் இரட்டைப் பண்பு என அறியப்படுகிறது. இதற்காகவே அவருக்கு 1921ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.
சரி, இந்த ஒளிமின் விளைவு ஏன் முக்கியமானது? காரணம், இந்தக் கண்டறிதல் இயற்பியலின் அடிப் படையையே அசைத்துப் பார்த்தது. குவாண்டம் இயங்கியல் எனும் தனிப் பிரிவு உருவாவதற்கு அடித்தளங் களை அமைத்துக்கொடுத்த கண்டறிதல்களில் ஒன்றாக இருந்தது.
இதைத் தவிர மக்கள் பயன்பாட்டு அறிவியலிலும் ஒளிமின் விளைவுக்குப் பெரும் பங்குண்டு. இன்றைக்குச் சூரியப் பலகைகள், டிஜிட்டல் கேமராக்கள், அறிவியல் கருவிகள் போன்றவை இந்த ஒளிமின் விளைவுகளின் அடிப்படையில்தான் இயங்குகின்றன.
இதேபோல் தூரத்தில் இருக்கும் நட்சத்திரங்களையும், நட்சத்திர மண்டலங்களையும் அவற்றில் இருந்து வெளியேறும் போட்டான்களை வைத்தே அறிவியலாளர்கள் அறிகின்றனர். அந்த வகையில் வானியல் ஆய்வுகளிலும் ஒளிமின் விளைவு பெரும் பங்களிப்பு செய்கிறது.
இவ்வாறு நம் கண்களுக்குள் அடங்காத அண்டத்தின் இயக்கம் குறித்து அறிந்துகொள்வதற்கும், நம் கண்ணுக்குப் புலப்படாத சிறிய குவாண்டம் உலகம் பற்றிப் புரிந்துகொள்வதற்கும் ஒளிமின் விளைவு பயன்படுகிறது.
(திருப்புமுனையைக் காண்போம்)