அன்று காலை சூரியன் உதித்ததும் மஞ்சள் வெளிச்சம் பூமி எங்கும் பரவியது. நெல்வயல் வளையிலிருந்து மூக்கை நீட்டி வெளியே எட்டிப் பார்த்தது கென் எலி. அதன் சிறிய கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன. வயல் முழுவதும் நெற்கதிர்கள் காற்றில் அசைந்தாடின.
வேகமாக வளைக்குத் திரும்பி, “அப்பா, எவ்வளவு அழகான தங்க மணிகள் பாருங்கள்! இவை எல்லாம் எனக்கான உணவுதானே? ஒரே நாளில் இவற்றை நான் தின்று முடிக்க வேண்டும்” என்று சந்தோஷத்தில் குதித்தது கென்.
“பொறுமையாக இரு கென். சூரியன் மறைந்த பிறகு உலகம் அமைதியாகும். அப்போது நாம் வெளியே சென்று வயலில் சிதறி இருக்கும் நெல்மணிகளைச் சேகரிக்கலாம். காலை நேரத்தில் காகங்களும் பருந்துகளும் வட்டமிட்டு நம்மைக் கொத்திச் செல்லக் காத்திருக்கும். பகலில் ஆபத்து அதிகம்” என்று எச்சரித்தது அப்பா ஆன்.
செண்பகக் காடுகளை ஒட்டிய வயலில்தான் வளை தோண்டி அந்த எலிக் குடும்பம் வசித்துவந்தது. கென் பிறந்து சில வாரங்களே ஆனதால், அதற்கு வெளி உலகம் மிகப் பெரிய அதிசயம். நேரம் கிடைக்கும் போதெல்லாம், வளையின் வாசலில் நின்று வேடிக்கை பார்க்கும். காற்றில் கலந்து வரும் மண் வாசனையும் நெற்பயிர்களின் நடனமும் அதற்குப் புது உற்சாகத்தைத் தந்தன.
பகல் முழுவதும், கென் வளைக்குள் உட்கார்ந்து தங்க நெல்மணிகளையே நினைத்துக் கொண்டிருந்தது. ‘இரவு எப்போது வரும்? தங்கத்தை நான் எப்போது தொட்டுப் பார்ப்பேன்? அதன் சுவை எப்படி இருக்கும்?’ என்று கென்னின் இதயம் துடித்தது. மாலையில் சூரியன் மறைந்து மெல்ல இருள் சூழ்ந்தது. நிலவு மேகங்களுக்குப் பின்னால் ஒளிந்துகொண்ட ஓர் அமைதியான இரவு. அந்தச் சுட்டி கென் தன் அப்பாவுக்காகக்கூடக் காத்திருக்காமல், ஆர்வத்தோடு வளையைவிட்டு வெளியே வந்தது.
ஆனால், வெளியே வந்த கென் அப்படியே உறைந்து போனது. அதன் உடல் பயத்தில் நடுங்கியது. காலையில் பார்த்தபோது நெற்கதிர்களில் வரிசையாகவும் அழகாகவும் கோக்கப்பட்டிருந்த தங்க நெல்மணிகளைக் காணவில்லை. அவை நாலாபுறமும் பறந்துகொண்டிருந்தன! அவை ஒவ்வொன்றும் சிறு நெருப்புத் துண்டைப்போலக் காற்றில் மிதந்து சென்றன. நடனமாடின.
“ஐயோ, நெல்மணிகள் எல்லாம் பறக்கின்றனவே” என்று அலறியது கென். ‘என் பசியை அறியாத யாரோ ஒரு மாயக்காரர் பகலில் இந்த வயலுக்கு வந்திருப்பார். நெல்மணி களுக்குச் சிறகுகளைக் கொடுத்திருப்பார். இனி நான் எதைச் சாப்பிட்டு என் பசியைத் தணிப்பேன்? நெல்மணிகள் எல்லாம் பறந்து போய்விட்டால் நான் பசியால் வாடுவேன்’ என்று எண்ணி வருந்தியது கென்.
பயத்துடன் அருகில் இருந்த ஒரு செடிக்கு அடியில் ஒளிந்துகொண்டது. ‘பறக்கும் நெல்மணிகள்' மெல்ல கென் ஒளிந்திருந்த இடத்திற்கு அருகிலேயே பறந்தன. பயத்தில் கண்களை இறுக மூடிக்கொண்ட கென், ‘என்னை ஒன்றும் செய்துவிடாதீர்கள், நான் உங்கள் நண்பன்’ என்று மெல்லிய குரலில் முணுமுணுத்தது.
“குட்டி எலியே, எதற்காகப் பயப்படுகிறாய்?” என்று ஒரு குரல் கேட்டது. கென் மெல்ல கண்ணைத் திறந்து பார்த்தபோது, எதிரில் இருந்த மரக்கிளையில் ஓர் ஆந்தை அமர்ந்திருந்தது.
“ஆந்தையாரே, காலையில் கதிர்களில் ஒட்டிக் கொண்டிருந்த நெல்மணிகள் எல்லாம் இப்போது சிறகு முளைத்துப் பறக்கின்றன. எனக்கான உணவு எல்லாம் காற்றில் மறைந்து போனால் நான் என்ன செய்வேன்? ” என்றது கென்.
சிரித்த ஆந்தை, “கொஞ்சம் உற்றுப் பார் ” என்றது. கென் பார்த்தது. இருளிலும் நெற்கதிர்கள் பாரம் தாங்காமல் வளைந்து நின்றன. கதிர்களில் நெல்மணிகள் அப்படியே இருந்தன. நிலத்திலும் நிறைய நெல்மணிகள் விழுந்து கிடப்பதைக் கவனித்தது.
“அப்படியானால் காற்றில் பறப்பவை? ” என்று குழப்பத்துடன் கேட்டது கென். “அவை நெல்மணிகள் அல்ல, மின்மினிப் பூச்சிகள். பகல் நேரத்தில் இவை செடி மறைவில் ஓய்வெடுக்கும். இரவு வந்ததும் ஒளிரும் விளக்குகளுடன் வெளியே வரும். இவை உனக்கு வழிகாட்ட வந்த தேவதைகள்” என்றது ஆந்தை.
கென்னுக்கு இன்னும் முழுமையாகச் சந்தேகம் தீரவில்லை. அப்போது, வயலில் பறந்து கொண்டிருந்த கூட்டத்திலிருந்து ஒரு மின்மினிப் பூச்சி இறங்கி வந்து, கென்னின் கையில் உட்கார்ந்தது. அந்த ஒளி குளிர்ச்சியாகவும் இதமாகவும் இருந்தது.
அதே நேரத்தில் கென்னைத் தேடி வளையிலிருந்து ஓடிவந்தது ஆன். கையில் இருந்த மின்மினிப் பூச்சியை ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்த கென்னின் தலையை வருடிக்கொடுத்தபடி, “பார்த்தாயா, பகலில் சூரியன் நமக்கு வெளிச்சம் தருவதுபோல, இரவில் மின்மினிகள் நமக்கு வழிகாட்டுகின்றன. இயற்கை யாரையும் கைவிடாது” என்றது.
கென் பயத்தை மறந்து சிரித்தது. அதுவரை இருட்டாகத் தெரிந்த அந்த வயல்வெளி, மின்மினிகளின் ஒளியால் ஒரு மாய உலகம் போல அழகாகத் தெரிந்தது!
அந்த வெளிச்சத்தில் கீழே சிதறிக் கிடந்த நெல்மணிகளை ஒவ்வொன்றாகச் சேகரித்த கென், இனிமையான அனுபவங்களுடன் மகிழ்ச்சியாக வளைக்குத் திரும்பியது.