மாயா பஜார்

விண்மீன்கள் எவ்வளவு காலம் வாழும்? | வானம் நமக்கொரு போதிமரம் 19

த.வி.வெங்கடேஸ்வரன்

எதையாவது ஒன்றை நிரந்தரமானது எனச் சுட்டிக்காட்ட வேண்டும் என்றால், முற்காலத்தில் ‘சூரியனும் சந்திரனும் நிலையானவை, ஆதியிலிருந்து உள்ளவை, என்றும் அழியாதவை’ என்று பொருள்படும்படி ‘சூரியன் சந்திரன் உள்ளவரை’ என்று கூறுவார்கள்.

ஆனால், உண்மையில் விண்மீன்கள் எவ்வளவு காலம் நிலைத்து இருக்கும்? அவற்றின் வாழ்நாள்தான் என்ன? ஒரு குழந்தை பிறந்து, வளர்ந்து, இளம்பருவம் எய்தி, நடுவயதைக் கடந்து, மூப்படைந்து இறப்பதுபோல விண்மீன்களும் பிறக்கின்றன, வளர்கின்றன, மூப்படை கின்றன, மடிகின்றன.

          

நமது சூரியன் பிறந்து சுமார் 460 கோடி ஆண்டுகள் ஆகின்றன. இப்போது அது நடுத்தர வயதை எட்டியுள்ளது. மூப்படையும் நிலையை நோக்கி அது செல்கிறது. அதாவது, அது ஒரு சிவப்பு ராட்சச விண்மீனாக மாறப்போகிறது. பின்னர், அதன் இறுதி நிலையான வெள்ளைக் குள்ள விண்மீனாக மாற சுமார் 500-600 கோடி ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும் என மதிப்பிடப்படுகிறது.

மனிதர்களில் பல வகைகள் உள்ளதைப் போல, விண்மீன்களிலும் பல வகைகள் உண்டு. 1380 கோடி ஆண்டுகளுக்கு முன் நடந்த பெருவெடிப்புக்குப் பிறகு, பிரபஞ்சம் படிப்படியாகப் பரிணாமம் அடைந்து, நமது கண்களுக்குப் புலப்படும் பிரபஞ்சத்தில் சுமார் ஒரு லட்சம் கோடி (செக்ஸ்டில்லியன்) அளவுக்கு விண்மீன்கள் பிறந்துள்ளன.

இவற்றில் பல வாழ்ந்து மடிந்துவிட்டன. சில இன்னமும் உயிருடன் உள்ளன. சில சமீபத்தில்தான் பிறந்தவை. கணிசமான அளவிலான விண்மீன்கள் நம் சூரியனின் ஆயுள் முடிந்த பின்னரும் நீண்ட நாள் வாழும். ஒரு விண்மீனின் ஆயுள் பெருமளவில் அதன் நிறையைச் சார்ந்தது.

கூடுதல் நிறை என்றால் குறைவான ஆயுள்; குறைவான நிறை என்றால் நீண்ட ஆயுள். எடுத்துக்காட்டாக, சூரியனை ஒத்த நிறையுடைய ஒரு விண்மீன், மொத்தமாகப் பிறப்பிலிருந்து அதன் மரணம் வரை சுமார் 1,200 கோடி ஆண்டுகள் வாழும். ஆனால், சூரியனைப் போல இருமடங்கு நிறை கொண்ட ஒரு விண்மீனின் ஆயுள் 150 கோடி ஆண்டுகள்தான். அதாவது, சூரியனின் ஆயுளில் பத்தில் ஒரு பங்கு மட்டுமே.

சூரியனைப்போலப் பத்து மடங்கு கூடுதல் நிறை கொண்ட விண்மீனின் ஆயுள், 2 முதல் 4 கோடி ஆண்டுகளே! அதாவது சூரியனின் மொத்த ஆயுளில் 2% முதல் 4% வரை மட்டுமே. விண்மீனின் நிறையை மும்மடங்காக்கினால், அதன் ஆயுளின் தலைகீழ் விகிதம் கிடைக்கும். அதாவது, சூரியனைப் போல இருமடங்கு நிறை கொண்ட விண்மீனை எடுத்துக்கொள்வோம்.

இரண்டின் மும்மடங்கு (2 x 2 x 2) = 8. அதாவது, அந்த விண்மீனின் ஆயுள், சூரியனின் ஆயுளில் எட்டில் ஒரு பகுதி. 1,200 / 8 = 150 கோடி ஆண்டுகள். சூரியனைப் போல பாதி நிறை கொண்ட விண்மீன் என்றால், (1/2 x 1/2 x 1/2) = 1/8. எனவே, சூரியனின் ஆயுளைப் போல 8 மடங்கு கூடுதலாக வாழும்! இவை எளிமையான சூத்திரங்கள், அறிவியலில் கூடுதல் நுட்பமான சூத்திரங்கள் உண்டு.

ஒரு சாதாரண பைக் ஒரு லிட்டர் பெட்ரோலில் சுமார் 60 - 65 கி.மீ. செல்லும். ஆனால், ஒரு ஹார்லி-டேவிட்சன் ஃபேட் பாய் பைக் 18 கி.மீ.தான் செல்லும். அதாவது, ஒப்பீட்டளவில் ஒவ்வொரு நொடியும் எரிக்கும் எரிபொருளின் அளவு ஹார்லி-டேவிட்சன் பைக்கில் கூடுதலாக இருப்பதால், குறைவான தொலைவு மட்டுமே செல்ல முடியும். அதுபோலத்தான் விண்மீன்களிலும்.

ஒரு விண்மீன், தன் சொந்த நிறையைத் தாங்கிப் பிடித்துக்கொள்ளும் அளவுக்கு உள்ளேயே அதிக அழுத்தத்தில் ஆற்றலை உருவாக்க வேண்டும். எனவே, அதன் நிறை கூடுதலாக இருந்தால், கூடுதல் வேகத்தில் எரிபொருளைப் பயன்படுத்தி, கூடுதல் ஆற்றலை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே, சிறிது காலத்திலேயே அதன் எரிபொருள் தீர்ந்து, மூப்பு நிலை அடைந்து மடிந்துவிடும்.

ஆனால், குறைவான நிறை கொண்ட விண்மீன் என்றால், அது மிகக் குறைவான ஆற்றலை மட்டுமே வெளியிடும். எனவே, மிகக் குறைவான விகிதத்திலேயே எரிபொருள் செலவாகும். இதனால், அது நீடித்து வாழும்.

எனவேதான், சூரியனைப் போல 100 மடங்கு நிறை கொண்ட ஒரு விண்மீன் 10, 20 லட்சம் ஆண்டுகளே வாழும். சூரியனைப்போல 10% நிறை மட்டுமே கொண்ட ‘2MASS J0523 1403’ என்கிற விண்மீனை எடுத்துக்கொண்டால், அது 10,000 கோடி ஆண்டுகளுக்கும் மேல் (சூரியனின் ஆயுளைப் போல பத்து மடங்கு நீடித்த ஆயுள்) வாழும்.

இப்படிக் குறைவான நிறை கொண்ட சிவப்புக் குள்ள விண்மீன்கள், சுமார் 3,800 லட்சம் கோடி ஆண்டுகள் வரைக்கும் நீண்ட ஆயுளைக் கொண்டிருக்க முடியும்.

மெதுசேலா என அழைக்கப்படும் HD 140283 என்கிற விண்மீன்தான், இதுவரை நாம் இனம் கண்டுள்ள விண்மீன்களில் மிகவும் மூத்த விண்மீன்.

இதன் வயது சுமார் 1,200 முதல் 1,300 கோடி ஆண்டுகள். இது சூரியனைப் போல சுமார் மூன்று மடங்கு வயது. மறுபுறம், HH 211 என்கிற குழந்தை விண்மீனின் வயது 10,000 முதல் 13,000 ஆண்டுகள்தான். பிறந்த குழந்தை நிலையில் உள்ள Cha-MMS1 என்கிற விண்மீனின் வயது 2,000 முதல் 3,000 ஆண்டுகள்தான்.

(அறிவோம்)

- tvv123@gmail.com

SCROLL FOR NEXT