மாயா பஜார்

வால்மீன்களுக்கு வால் எப்படி உருவாகிறது? | வானம் நமக்கொரு போதிமரம் 25

த.வி.வெங்கடேஸ்வரன்

சூரியனின் வெப்பமும் ஒளியும் வால்மீனின் மீது தாக்கம் செலுத்தி வால் உருவாகிறது. வால்மீன்களைப் பெரும்பாலும் ‘அழுக்குப் பனிக்கட்டி’ என்பார்கள். அவை கார்பன் மோனாக்சைடு, கார்பன் டைஆக்சைடு, நீர், மீத்தேன், அமோனியா போன்ற வாயுக்களின் உறைந்த பனிக்கட்டிகளும், தூசுப் படலங்களும், சிறு கற்களும், மணல் துகள்களும் கலந்த ஒரு தொகுப்பு.

கோள்களைப் போலவே வால்மீனும் சூரியனைச் சுற்றிவரும். ஆனால் வால்மீனின் சுற்றுப்பாதை கூடுதல் நீள்வட்டமானது. அதாவது, இவை சூரியனிலிருந்து மிகத் தொலைவுக்குச் சென்றுவிட்டு, பின்னர் ஒருமுறை சூரியனை நெருங்கி வரும்.

சூரியனிலிருந்து வெகு தொலைவில் புளூட்டோவுக்கு அப்பால் உள்ள பகுதிகளில் வால்மீன்கள் முற்றிலும் உறைந்த நிலையில் இருக்கும். அப்போது அவை மிக மங்கலாக இருப்பதால், சிறந்த தொலைநோக்கிகளால்கூட அவற்றைக் கண்டறிய முடியாது.

          

ஆனால், அவை சூரியனை நோக்கிப் பயணித்து, செவ்வாயின் சுற்றுப்பாதையைக் கடக்கும்போது, சூரிய வெப்பம் அவற்றின் பனிக்கட்டிகளை ஆவியாக்கத் தொடங்குகிறது. இந்த ஆவியாதல், சூரியனை நெருங்க நெருங்க அதிகரிக்கிறது.

ஹாலி வால்மீனுக்கு அனுப்பப்பட்ட விண்கலம், சூரிய வெப்பம் படும் பகுதிகளில், வெந்நீரூற்றுகள் வழியாக வாயுவும் தூசும் வெளிப்படுவதைக் கண்டறிந்தது. இவ்வாறு வெளிப்படும் வாயுவும் தூசும் வால்மீனின் ‘தலை’ (nucleus) என்கிற மையப் பகுதியைச் சுற்றி ஒரு மங்கலான, ஒளிரும் மேகம் போன்ற அமைப்பை உருவாக்குகின்றன.

இதற்கு ‘ஒளிவட்டம்’ (coma) என்று பெயர். ஒளிவட்டம் உருவான பின்னரே பெரும்பாலும் நமக்கு வால்மீன் புலப்படத் தொடங்கும். இதன் பின்னர் அருகே வரவர மேலும் மேலும் வெப்பம் அதிகரித்து மேலும் கூடுதல் பொருள்கள் ஆவியாகும். இந்தக் கட்டத்தில்தான் வால்மீனின் முதன்மையான அடையாளமான வால் உருவாகிறது. ஆனால் ஒன்றல்ல, இரண்டு வால்கள் உருவாகும்.

பெரும்பாலான வால்மீன்களுக்கு இரண்டு வால்கள் உண்டு. முதலாவது, தூசு வால். சூரிய ஒளியின் அழுத்தம், ஒளிவட்டத்திலுள்ள மிக நுண்ணிய தூசுத் துகள்களைச் சூரியனுக்கு எதிர்த்திசையில் தள்ளுகிறது. இந்தத் தூசுத் துகள்கள் சூரிய ஒளியைப் பிரதிபலிப்பதால் நமக்கு வால்போல இது புலப்படுகிறது.

இரண்டாவது, பிளாஸ்மா வால் (அயனி வால்). சூரியனில் இருந்து வெளிப்படும் ஆற்றல் கொண்ட புறஊதாக் கதிர்கள், ஒளிவட்டத்திலுள்ள வாயுக்களை மின்னேற்றம் அடையச் செய்கின்றன.

இந்த மின்னேற்றம் அடைந்த வாயுத் (அயனிகள்) துகள்களை மின்னேற்றம் கொண்ட எலக்ட்ரான்கள், புரோட்டான்கள் கலந்த கலவையான சூரியக் காற்று (solar wind) தள்ளும். சூரியக்கற்று ஊதித்தள்ளுவாதல் சூரியனுக்கு எதிர்த்திசையில் இந்த வால் நீண்டு செல்லும்.

சில நேரம், இந்தப் பிளாஸ்மா வாலின் ஒரு பகுதி உடைந்து விண்வெளியில் பறந்து செல்லும். பல்லியின் அறுந்த வால் மறுபடி முளைப்பதுபோல மீண்டும் புதிய பிளாஸ்மா வால் உருவாகும்.

வால்மீன்களின் பிளாஸ்மா வால் இயக்கத்தை வைத்துதான் அந்தப் புள்ளியில் கண்களுக்குப் புலப்படாத சூரியக்காற்று எந்த வேகத்தில், எந்தத் திசையில் வீசுகிறது எனக் கணிப்பார்கள்.

வால்மீனின் வால் எப்போதும் சூரியனுக்கு எதிர்த்திசையிலேயே இருக்கும். வால்மீன் சூரியனை நோக்கிச் செல்லும்போது, வால் பின்னால் நீளும். ஆனால், சூரியனைச் சுற்றி வந்து திரும்பிச் செல்லும்போது, வால் முன்னால் அமையும்.

ஒவ்வொரு முறையும் வால்மீன் சூரியனை அணுகும்போது, அதன் ஒரு பகுதி ஆவியாகி, தூசாகச் சிதறி, விண்வெளியில் கலந்துவிடும். எனவே ஒவ்வொரு முறை சூரியனுக்கு அருகே வரும்போதும் வால்மீனுக்கு எடைகுறைப்பு ஏற்படும். பிரபலமான ஹாலி வால்மீன் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு.

இது சுமார் 76 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனை நெருங்கும். ஒவ்வொரு முறையும் அதன் தலை (nucleus) குறைந்தது ஒரு மீட்டர் அளவுக்குச் சுருங்கிவிடுகிறது. தற்போது அதன் விட்டம் சுமார் 10 கி.மீ. என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விகிதத்தில், இன்னும் சுமார் 75,000 ஆண்டுகளில் (அதாவது, 1,000 சுற்றுகளில்) ஹாலி வால்மீன் முற்றிலும் அழிந்துவிடும். இவ்வாறு சிதறும் தூசுகள் சூரியனைச் சுற்றிவந்து, பூமியின் சுற்றுப்பாதையைக் கடக்கும்போது, அவை விண்கல் மழையாக (meteor shower) நமக்குத் தென்படும். ஹாலி வால்மீனின் தூசுகளே ‘ஈட்டா அக்வாரிட்ஸ்’ மற்றும் ‘ஒரியோனிட்ஸ்’ என்கிற இரண்டு முக்கிய விண்கல் மழைக்குக் காரணமாக அமைகின்றன.

(அறிவோம்)

வானியல், வான் இயற்பியல் குறித்த கேள்விகளை மாயாபஜார் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம்.

SCROLL FOR NEXT