மாயா பஜார்

ரின் டின் டின்: நட்சத்திர நாய்! | வரலாறு முக்கியம் மக்களே! - 26

முகில்

1918 முதல் உலகப் போர் நடந்து கொண்டிருந்த நேரம். அமெரிக்க ராணுவ வீரரான லீ டன்கன், பிரான்ஸ் கிராமம் ஒன்றில், போர்ப் பணிகளில் ஈடுபட்டிருந்தார். அங்கே ஜெர்மானிய விமானப் படைகள் குண்டு வீசிச் சென்றதால் பல இடங்கள் பாதிக்கப்பட்டிருந்தன.

அப்போது, நாய்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பட்டி ஒன்று சேதமடைந்திருப்பதைக் கண்டார். ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் ஒன்றும், அதன் ஐந்து குட்டிகளும் அங்கே இருந்தன. அவற்றை மீட்டு, தன் ராணுவ முகாமுக்குக் கொண்டு சென்றார்.

தாயும் மூன்று குட்டிகளும் சில நாள்களில் இறந்தன. குண்டு வீச்சிலும் தப்பிப் பிழைத்த நாய்கள் என்று ஆண் குட்டி ஒன்றையும், பெண் குட்டி ஒன்றையும் லீ டன்கன் வளர்க்க ஆரம்பித்தார். அவற்றுக்கு ரின் டின் டின், நானெட் என்று பெயர் வைத்தார். 1919இல் முதல் உலகப் போர் முடிந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரத்துக்குத் திரும்பினார் லீ டன்கன். நாய்களையும் தன்னுடன் எடுத்துவந்தார்.

நானெட் நோய்வாய்ப்பட்டு இறந்து போனது. மீதமிருந்த ரின் டின் டின், லீ டன்கனின் அன்புக்குரிய செல்லமாக வளர்ந்தது. ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்கள் புத்திசாலித்தனம் மிக்கவை என்று கேள்விப்பட்ட லீ டன்கன், ரின் டின் டின்னுக்கு முறைப்படி எல்லாப் பயிற்சிகளையும் கொடுத்தார். நாய் காட்சிகளில் ரின் டின் டின் பங்குகொள்ள ஆரம்பித்தது. ஒருமுறை காட்சி ஒன்றில் ரின் டின் டின் சுமார் 12 அடி உயரத்துக்குத் தாவிக் குதித்தது.

அதை லீ டன்கனின் நண்பரான சார்லி ஜோன்ஸ் கேமராவில் படமாக்கினார். அதுக்கு ரின் டின் டின்னுக்குக் கிடைத்த சம்பளம் 350 அமெரிக்க டாலர்கள். அந்தப் படம் புகழ்பெறவும், ரின் டின் டின் ஹாலிவுட் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியது. அது நடித்த முதல் படம், The Man from Hell’s River (1922).

அதில் நடிக்க வேண்டிய ஓநாயை வேலை வாங்க முடியவில்லை என்பதால், அதுக்குப் பதிலாக ரின் டின் டின்னை நடிக்க வைத்தார்கள். ஆம், ஓநாய் வேடத்தில் நாய். அந்தப் படத்தில் மட்டுமல்ல. அதற்குப் பிறகும் சில படங்களில் ரின் டின் டின் ஓநாயாக நடித்தது. வார்னர் பிரதர்ஸ் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தினர் அப்போது நஷ்டத்தில் இருந்தனர்.

Where The North Begins என்கிற திரைப்படத்தைத் தயாரித்துக் கொண்டிருந்தார்கள். லீ டன்கன் அந்தத் திரைப்படத்துக்குத் திரைக்கதை அமைப்பதில் உதவிசெய்ய, ரின் டின் டின் ஓநாயாக நடித்தது. கனடாவின் பனிப்பரப்பில் பல நாள்கள் படம்பிடித்தார்கள். லீ டன்கன் பயிற்சி அளிக்க, ரின் டின் டின் உணர்வுபூர்வமாக நடித்துக் கொடுத்தது.

படத்தை வெளியிடும்போதுகூட வார்னர் பிரதர்ஸுக்கு நம்பிக்கையே இல்லை. இத்துடன் திரைப்படத் தயாரிப்பையே நிறுத்திவிட வேண்டியதுதான் என்று நினைத்துக் கொண்டார்கள். ஆனால், படம் வெளியான பின் ரசிகர்கள் ரின் டின் டின்னைக் கொண்டாடினார்கள். வசூலிலும் சாதனை படைத்தது! வார்னர் பிரதர்ஸ் நிமிர்ந்து நின்றார்கள். ரின் டின் டின்னைத் தங்கள் நிரந்தர ஹீரோவாக்க முடிவு செய்தார்கள்.

அதற்குப் பிறகும் அதை வைத்து பல்வேறு திரைப்படங்களைத் தயாரித்து வெற்றி பெற்றார்கள். இன்றைக்குவரை வார்னர் பிரதர்ஸ் நிலைத்து நிற்க, ரின் டின் டின்னின் பங்களிப்பும் முக்கியமானது. ரின் டின் டின்னை மையக் கதாபாத்திரமாகக் கொண்ட ஹாலிவுட் படங்கள் அடுத்தடுத்து உருவாக்கப்பட்டன. எல்லாம் மெளனப் படங்களே.

சூப்பர் ஸ்டார் நாயாக ஹாலிவுட்டை ஆண்டது ரின் டின் டின். சுமார் 26 படங்களில் நடித்த ரின் டின் டின்னின் ஒரு வாரச் சம்பளம் 6,000 அமெரிக்க டாலர்களாக இருந்தது. வாரம் ஒன்றுக்கு சுமார் 10,000 கடிதங்கள் ரின் டின் டின்னுக்கு வந்துசேர்ந்தன.

ரின் டின் டின்னுக்கு எனத் தனி பங்களா. தனி செஃப். அதைப் பராமரிக்கத் தனி வேலையாள்கள். எப்போதும் சொகுசு காரில் மட்டும் பயணம். இப்படி ஒரு ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் புகழ் அடைவதைப் பார்த்து, பலரும் அந்த ரக நாய்களை வாங்கி வளர்ப்பதில் ஆர்வம் கொண்டனர். 1932இல் ரின் டின் டின் தனது 14வது வயதில் இறந்து போனது. இதுவரை உலகில் பிறந்த ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்களில் ரின் டின் டின் அளவுக்கு எதுவுமே புகழ்பெறவில்லை.

ரின் டின் டின் புகழின் உச்சத்தில் இருந்த 1929ஆம் ஆண்டுதான் முதல் முதலாக ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வாக்கு எடுப்பில் ரின் டின் டின்தான் முதலிடத்தில் வந்தது என்றும், மனிதர்களுக்கு வழங்காமல் நாய்க்கு வழங்கினால் சர்ச்சை உண்டாகும் என்பதால் அதைத் தவிர்த்தார்கள் என்றும் செய்தி உண்டு.

ரின் டின் டின்னின் வழிவந்த வாரிசுகள் என்று ரின் டின் டின் ஜுனியர், இரண்டாம் ரின் டின் டின், மூன்றாம் ரின் டின் டின் என்று பிற்காலத்தில் ஹாலிவுட் படங்களில் வெவ்வேறு ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அவை எவையும் ரின் டின் டின் அளவுக்கு நட்சத்திரமாகப் புகழைப் பெறவில்லை.

(சந்திப்போம்)

- writermugil@gmail.com

SCROLL FOR NEXT