முகலாயப் பேரரசி மரியம், பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருந்தார். முகலாயப் பேரரசர் அக்பரிடம் செய்தி சொல்லப் பட்டது. ‘பிரசவத்தில் பிரச்சினை.’ அப்போது அக்பர், ‘என் மனைவிக்குப் பிரசவம் பிரச்சினை இல்லாமல் நடந்து விட்டால், இனிமேல் நான் வெள்ளிக்கிழமைகளில் வேட்டைக்குப் போக மாட்டேன்’ என்றார்.
இளவரசர் சலீம் நல்லபடியாகப் பிறந்தார். சலீம்தான், அக்பருக்குப் பின் முகலாயப் பேரரசரான ஜஹாங்கிர். அவரின் பிறப்புக் குறித்து இப்படி ஒரு கதை சொல்லப்படுவது உண்டு. வேட்டையாடினாலும் உயிரினங்கள் மீது அக்பர், அன்பாகத்தான் இருந்தார்.
அவருக்கு மிகவும் பிடித்த விலங்கு யானை. சன்சல் என்கிற பெண் யானையைச் சிறுவயதிலேயே பராமரித்து வளர்த்திருக்கிறார். சுமார் 20 ஆயிரம் புறாக்களை வளர்த்த அக்பரின் செல்லப்புறா மோகன். அவரின் பாசத்துக்குரிய நாய் மஹுவா.
சிறுத்தைகளை உயிரோடு பிடித்து, அவற்றை வேட்டைக்காகப் பழக்குவது அக்பருக்குப் பிடித்தமானது. அவரிடம் சுமார் 50 வளர்ப்புச் சிறுத்தைகள் இருந்ததாகக் குறிப்புகள் உண்டு. சமந்த் மாலிக் அக்பருக்கு மிகவும் பிரியமான சிறுத்தை.
அதன் கழுத்தில் நகைகள் அணிவிக்கப்பட்டிருந்தன. அதற்குச் சேவை செய்ய வேலையாள்கள் இருந்தனர். அக்பரோடு அரசவையில் காலாற உலாவிக்கொண்டிருந்தது சமந்த் மாலிக். தந்தையின் ‘உயிரினங்கள் மீதுள்ள நேச’ குணம், மகன் ஜஹாங்கிரிடமும் இருந்தது.
பத்து வயதில் இளவரசர் ஜஹாங்கிர், ராஜபுத்திரர்களுக்கு எதிரான ஒரு போர்க்களத்தில் இருந்தார். அப்போது, புலியிடமிருந்து மான் குட்டி ஒன்றைக் காப்பாற்றினார். அந்த மான்குட்டியை, போர் முகாமில் வைத்துப் பாதுகாத்தார்.
ஓர் இரவில் மான்குட்டி காணாமல் போனது. ஜஹாங்கிர் அதைத் தேடிப் புறப்பட்டார். அந்த மான்குட்டியை எதிரிகள் பிடித்து வைத்திருப்பதைக் கண்டார். அதை அப்படியே விட்டால், அன்று இரவே அது அவர்களுக்கு உணவாகிவிடும்.
துணிச்சலுடன் ஜஹாங்கிர் எதிரிகள் முகாமுக்குள் புகுந்தார். அவரைக் கண்டதும் மான்குட்டி சந்தோஷத்தில் குரல் எழுப்பியது. தந்திரமாகச் செயல்பட்டு மான்குட்டியை மீட்டுப் பத்திரமாகத் திரும்பினார்.
பேரரசர் ஆன பிறகு ஜஹாங்கிர், ஓர் இயற்கை ஆர்வலராக விலங்குகள், பறவைகள் குறித்து அறிந்துகொள்வதில் கவனம் செலுத்தினார். வெளிநாட்டுப் பறவைகள், விலங்குகள் குறித்து, ஓவியர்களை வைத்து ஓவியங்கள் தீட்டி, குறிப்புகளுடன் ஆவணப்படுத்திய பெருமை ஜஹாங்கிருக்கு உண்டு.
அதில் ஓவியர் மன்சூர் வரைந்த விலங்குகள், பறவைகளின் ஓவியங்கள் ஜஹாங்கிரின் அவைக்குறிப்புகளைச் சொல்லும் ‘ஜஹாங்கிர்நாமா’வில் காணப்படுகின்றன. ‘காஷ்மீர் ஏரியில் நான் அந்தப் பறவையைக் கண்டேன்.
நீரினுள் ஓரிடத்தில் மூழ்கி, வெகுநேரம் கழித்து இன்னோர் இடத்தில் வெளியே வந்தது. இரண்டு பறவைகளைப் பிடித்துவர உத்தரவிட்டேன். அவற்றுக்கு வாத்துபோல கால்கள் இருக்கின்றனவா அல்லது நிலவாழ் பறவைகளைப்போல கால்கள் இருக்கின்றனவா என்று அறிந்துகொள்ள விரும்பினேன்.
ஆனால், அதில் ஒரு பறவை உடனே இறந்துவிட்டது. இன்னொன்று மறுநாள் இறந்து போனது.’ ஜஹாங்கிர் குறிப்பிட்டிருக்கும் அந்தப் பறவை, பட்டைத் தலை வாத்து. அதேநேரம் அத்துடன் சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்பே அழிந்துபோன டோடோவின் உருவத்தை, ஓவியர் மன்சூர் நேர்த்தியாக வரைந்து ஆவணப்படுத்தி இருக்கிறார்.
ஜஹாங்கிரின் விலங்கு, பறவை ஆராய்ச்சி எல்லைமீறிப் போனதும் உண்டு. ஒருமுறை அவருக்கு எத்தியோப்பியாவில் இருந்து வரிக்குதிரை ஒன்று பரிசாக வந்து சேர்ந்தது. இது வரிக்குதிரைதானா என்று ஜஹாங்கிருக்குச் சந்தேகம்.
‘கறுப்புக் கோடுகள் எல்லாம் நீங்க வேண்டும். அது வெள்ளைக் குதிரையாக மாறும் வரை தேய்த்துக் கழுவுங்கள்’ என்று உத்தரவிட்டார். கழுவினாலும் கறுப்பு நீங்கவில்லை. உண்மையைப் புரிந்துகொண்ட பேரரசர், வரிக்குதிரையை ஓவியத்தில் கொண்டுவந்தார்.
சாரஸ் பெருங்கொக்கு ஜோடி ஒன்றை ஜஹாங்கிர் விருப்பத்துடன் வளர்த்துவந்தார். லைலா, மஜ்னு என்று அவற்றுக்குப் பெயர். சில ஆண்டுகளுக்குப் பிறகு அவை சேர்ந்து கூடு அமைத்தன.
அதில் லைலா இரண்டு முட்டைகளை இட்டது. அது எப்படி அடைகாக்கிறது, மஜ்னு எப்படி உதவுகிறது என்று எல்லாம் ஒரு பறவையியல் ஆய்வாளராகத் தொடர்ந்து கவனித்தார் ஜஹாங்கிர்.
குஞ்சு பொரித்து வெளிவந்ததும், அவற்றுக்கு எந்த ஆபத்தும் நேர்ந்துவிடக் கூடாது என்பதில் ஜஹாங்கிர், லைலாவைவிட அதிக அக்கறை காட்டினார். மஜ்னு, தன் குஞ்சுகளைத் தலைகீழாகத் தூக்கிச் செல்வதைக் கவனித்தார்.
‘அவனைப் பிடித்துத் தனியே அடையுங்கள். குஞ்சுகள் வளரும் வரை நெருங்க விடாதீர்கள்’ என்று உத்தரவிட்டார் பேரரசர். ஜஹாங்கிர் சிங்கப் பிரியராகவும் இருந்திருக்கிறார். அவருடைய சிங்கக் காப்பகத்தில் சுமார் 1,00 சிங்கங்கள் வரை வளர்க்கப்பட்டதாகக் குறிப்புகள் உண்டு. ஒருமுறை பேரரசர் ஜஹாங்கிர் சுற்றுப்பயணத்துக்குச் சென்றுவிட்டு, பல நாள்கள் கழித்து ஆக்ராவுக்குத் திரும்பினார்.
அதுவரை அவரைக் காணாமல் தவித்துக் கிடந்த அவரின் செல்லச் சிங்கம் ஒன்று, ஜஹாங்கிர் வந்துவிட்டார் என்று உணர்ந்ததும் பாதுகாவலர்களை மீறி தப்பித்துச் சென்றது. அவையில் ஜஹாங்கிர், முக்கியஸ்தர்களுடன் பேசிக் கொண்டிருக்கும்போது சிங்கம் அவரை நோக்கிப் பாய்ந்து வந்தது.
எல்லாரும் பதறி ஓட, சிங்கமோ ஜஹாங்கிர் மீது விழுந்து கொஞ்ச ஆரம்பித்தது. அவர் அவையில் இருக்கும்வரை அவருடனேயே ‘சமர்த்தாக’ இருந்தது. லாகூரிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் அமைந்த ஷேய்க்குபுரா காட்டுப்பகுதியில் ஹிரன் மினார் என்கிற ‘வேட்டை அரண்மனை’யை ஜஹாங்கிர் அமைத்தார்.
அங்கே வெளிமான்கள் அதிகம். அவற்றை வேட்டையாடுவதில் ஜஹாங்கிருக்கு ஆர்வம். அப்படி வேட்டையில் பிடிபட்ட ஒரு வெளிமானை ஜஹாங்கிருக்கு மிகவும் பிடித்துப் போனது.
கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குள்ளாகவே, அந்த மான் பேரரசருடன் பாசமாகப் பழகியது. ‘ஹன்ஸ்ராஜ்’ - விலங்குகளுக்கெல்லாம் தலைவன் என்கிற அர்த்தத்தில் அந்த மானுக்குப் பெயர் சூட்டினார் ஜஹாங்கிர்.
ஒருநாள் ஜஹாங்கிர், தன் நண்பர்களுடன் மான்களை வேட்டையாடிக் கொண்டிருந்தார். பணியாளர், பேரரசரால் வேட்டை யாடப்பட்ட மான் ஒன்றைத் தூக்கிவந்தார். அதைப் பார்த்ததும் ஜஹாங்கிர் நொறுங்கிப் போனார். அது ஹன்ஸ்ராஜ்.
தெரியாமல் தன் பாசத்துக்குரிய மானையே வேட்டையாடிருந்தார். குற்ற உணர்வு பேரரசரைக் குத்தியது. ஆகவே, தன் பிரியத்துக்குரிய ஹன்ஸ்ராஜைப் புதைத்த இடத்தில் உயரமான மினார் ஒன்றைக் கட்டினார். சுமார் 100 அடி உயரத்தில் அமைந்த அந்த மினார், இன்றைக்கும் ஹன்ஸ்ராஜ் மீதான ஜஹாங்கிரின் பாசத்தைச் சொல்லிக் கொண்டிருக்கிறது.
(நிறைவுற்றது)
- writermugil@gmail.com