மாயா பஜார்

கவலைகளைத் தின்னும் பொம்மைகள்! | குவாதேமாலா நாட்டுப்புறக் கதை

ஷாராஜ்

குவாதேமாலாவின் மேற்கு மலைப்பகுதிகளில் மேகங்கள் நிலத்தைத் தொட்டுச் செல்லும் குளிர்ந்த கிராமத்தில், யாமிலெத் வாழ்ந்து வந்தாள். அவ்வூர் மக்கள் ஏழைகள். அவர்களின் முதன்மைத் தொழில் மலைச்சரிவுகளில் மக்காச்சோளம் பயிரிடுவதும், வண்ணமயமான ஆடைகளை நெய்வதும்தான்.

யாமிலெத்தின் அப்பா நீண்ட நாள்களுக்கு முன்பே வேலை தேடி நகரத்திற்குச் சென்றுவிட்டார். யாமிலெத் தன் அம்மா, பாட்டியுடன் ஒரு வைக்கோல் குடிசையில் வசித்துவந்தாள்.

யாமிலெத்தின் பாட்டி சிறந்த நெசவாளி. ஆனால், முதுமையின் காரணமாகக் கைகள் நடுங்கியதால் அவரால் வேலை செய்ய முடியவில்லை. குடும்பத்தின் வருமானம் குறைந்தது. வீட்டில் இருந்த மக்காச்சோளமும் தீர்ந்துவிட்டது.

“ஒரு வேளை கஞ்சிக்கே வழியில்லையே... நாளைக்கு என்ன செய்வது? எவ்வளவு நாள் பட்டினி கிடக்க முடியும்?” என்று யாமிலெத்தின் அம்மா புலம்பினார். “வேலை தேடி நகரத்துக்குப் போனவன் என்ன ஆனான் என்றே தெரியவில்லையே?” என்று பாட்டி கவலைப்பட்டார்.

வீட்டின் கஷ்டங்களைப் பார்த்து யாமிலெத் வருத்தப்பட்டாள். அறையின் மூலையில் கிடந்த பழைய துணித் துண்டுகள், வண்ண நூல்கள் அவள் பார்வையில் பட்டன. அவற்றைப் பார்த்ததும் பாட்டி ஒருமுறை சொன்னது நினைவுக்கு வந்தது. ‘உலகத்தோர் கவலைகளைப் போக்க தேவதைகள் சிறிய உருவங்களாக வருவார்கள்.’

யாமிலெத்துக்கு ஒரு யோசனை தோன்றியது. அவள் சிறிய குச்சிகளை இணைத்து உடல், கைகள், கால்களுக்கான உருவமாக ஆக்கினாள். அதில் துண்டுத் துணிகளைக் கட்டி, மனித பொம்மைகளைச் செய்தாள். அவற்றுக்கு அழகிய ஆடைகளையும் தைத்து அணிவித்தாள்.

ஒரு விரல் அளவே இருந்த அந்தச் சிறிய பொம்மைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறத்தில் இருந்தன. மொத்தம் ஆறு பொம்மைகள். அவற்றின் முகங்களை வண்ணத்தால் வரைந்தாள். அவை பார்ப்பதற்கு அழகாகவும், கவலையற்றுச் சிரிப்பது போலவும் இருந்தன.

அன்று இரவு பாட்டி தூக்கம் இல்லாமல் புரண்டு கொண்டிருந்தார். யாமிலெத் அந்தச் சிறிய பொம்மைகளை அவரிடம் கொடுத்தாள். “பாட்டி, இவை துயரம் தீர்க்கும் தேவதைகள். உங்கள் கவலைகளை இந்தப் பொம்மைகளிடம் ரகசியமாகச் சொல்லுங்கள்.

பிறகு அவற்றை உங்கள் தலையணைக்கு அடியில் வைத்துவிட்டுத் தூங்குங்கள். இந்தப் பொம்மைகள் உங்கள் கவலைகளைத் தின்றுவிடும்” என்று நம்பிக்கையோடு சொன்னாள் யாமிலெத். “பொம்மைகள் எப்படி மனிதர்களின் கவலைகளைத் திங்க முடியும்?” என்று சிரித்தார் பாட்டி.

ஆனால் யாமிலெத்தின் கண்களில் இருந்த நம்பிக்கையைக் கண்டு, “சரி, முயல்கிறேன்” என்றார். ஒவ்வொரு பொம்மையையும் கையில் எடுத்து, “நாளை உணவுக்கு வழிகாட்டு“, “என் கைகளின் நடுக்கத்தை நிறுத்து“, “என் மகனை வீட்டுக்கு அனுப்பு” என்று தன் இதயத்தின் சுமைகளை ஒவ்வொன்றாக இறக்கி வைத்தார் பாட்டி. பின் அவற்றை ஒரு சிறிய பையில் போட்டுத் தலையணைக்கு அடியில் வைத்து உறங்கினார்.

பல மாதங்களுக்குப் பிறகு அன்று பாட்டி நிம்மதியாக உறங்கினார். காலை உற்சாகத்தோடு எழுந்தார். “யாமிலெத்! இன்று என் மனம் மிகவும் லேசாக இருக்கிறது. எதைக் கண்டும் கவலையோ பயமோ இல்லை. ஏதோ ஒரு பலம் எனக்குள் வந்தது மாதிரி இருக்கிறது! நிஜமாகவே உன் பொம்மைகள் என் கவலைகளைத் தின்றுவிட்டன என்று நினைக்கிறேன்” என்று மகிழ்ச்சியுடன் சொன்னார் பாட்டி.

என்ன ஆச்சரியம், அன்று மதியமே யாமிலெத்தின் அப்பா நகரத்திலிருந்து நிறைய உணவு வகைகளுடனும் பணத்துடனும் வீட்டுக்கு வந்தார். சில நாள்களில் பாட்டியின் கைகளில் இருந்த நடுக்கம் ஓரளவு குறைந்து, அவர் மீண்டும் நெசவு செய்ய ஆரம்பித்தார். இந்தச் செய்தி கிராமம் முழுவதும் பரவியது.

“யாமிலெத்தின் பொம்மைகள் கவலைகளைத் தீர்க்கின்றன. அவை மந்திரப் பொம்மைகள்” என்று ஊர் மக்கள் பேசிக்கொண்டனர். கிராமத்தில் இருந்த ஒவ்வொரு வரும் யாமிலெத்தைத் தேடி வந்தனர். ஏனென்றால், கவலையோ வருத்தங்களோ இல்லாத மனிதர்களே இல்லையே.

மழை பெய்யாமல் பயிர்கள் வாடிய விவசாயிகள், வறுமையால் துன்புறும் ஏழைகள், பணமும் நகைகளும் திருடுபோய்விடுமோ என அஞ்சிய பணக்காரர்கள், நோய்வாய்ப் பட்டவர்களின் குடும்பத்தினர் எனப் பலதரப்பட்டவர்களும் யாமிலெத்திடம் வெவ்வேறு கவலை களுக்காகப் பொம்மைகளைக் கேட்டனர்.

யாமிலெத் யாரிடமும் பணம் வாங்காமல், பழைய துணித் துண்டுகளைக் கேட்டு வாங்கி, அவர்களுக்குப் பொம்மைகளைச் செய்து கொடுத்தாள். அவர்களிடம், “கவலைகளை உங்களுக்குள் வைத்துக்கொண்டால் அவை உங்களைத் தின்றுவிடும்.

அவற்றை இந்தப் பொம்மைகளிடம் சொன்னால், அவை தின்றுவிடும்” என்று சொன்னாள் யாமிலெத். காலப்போக்கில் மற்றவர்களும் இந்தப் பொம்மைகளைச் செய்யத் தொடங்கினர்.

‘கவலை தீர்க்கும் பொம்மைகள்’ குவாதேமாலாவின் குடிசைத் தொழிலாக ஆனது. இன்று குவாதேமாலாவி லிருந்து உலகம் முழுவதும் இந்தப் பொம்மைகள் (Worry Dolls) ஏற்றுமதியாகின்றன.

இன்றும் குவாதேமாலாவின் குளிர்ந்த இரவு நேரத்தில், ஆயிரக்கணக்கான தலையணைகளுக்கு அடியில் அந்தப் பொம்மைகள் மனிதர்களின் கவலைகளைத் தின்று கொண்டிருக்கின்றன! இதனால் அந்த மக்கள் காலையில் புத்துணர்ச்சியோடு விழிக்கின்றனர்!

SCROLL FOR NEXT