சோழபுரம் ஓர் அழகான மலைக் கிராமம். அந்த ஊரில் வசித்த எல்லாருமே உழவுத் தொழில் செய்துவந்தனர். அவர்களின் வீடுகளுக்குப் பக்கத்திலேயே நிலங்களும் ஆறும் இருந்தன. ஊரே எப்போதும் பச்சைப்பசேல் எனக் காட்சியளிக்கும்.
வான் அளவு உயர்ந்த மரங்கள் பூத்து, காய்த்து, பழுத்து நிற்கும். மரங்களில் பழுத்திருக்கும் பழங்களை உண்ண பல இடங்களில் இருந்தும் பறவைகள் சோழபுரத்துக்கு வரும். அப்படிச் சில நாள்களுக்கு முன்பு வந்த ஒரு கிளி சோழபுரத்திலேயே மிக உயரமான மரத்தில் கூடு கட்டித் தங்கியிருந்தது.
அந்தக் கிளி அதன் கூட்டில் இரண்டு முட்டைகளை இட்டு இருந்தது. இப்போது அந்த மரத்தில் பறவைகள் சாப்பிடப் பழங்களே இல்லை. அந்தக் கிளி பழம் தேடி மரத்தைச் சுற்றிச் சுற்றி வந்ததில் கிளையின் உச்சியில் சாப்பிட முடியாத அளவில் இரண்டு காய்கள் மட்டுமே இருந்தன.
அந்த மரத்தில் பழங்கள் இல்லாததால் முட்டையிட்டு இருந்த அந்தக் கிளி, இரைதேடி வேறு மரங்களுக்குச் செல்ல வேண்டியிருந்தது. ‘ஐயோ, என் முட்டைகளைத் தனியாக விட்டுச் சென்றால் வேறு பறவைகளோ விலங்குகளோ முட்டையைச் சேதப்படுத்திவிடுமே, என்ன செய்வது’ என்று பயந்தது.
“வனதேவதையே எங்கே இருக்கிறாய்? இங்கே வா” என அழைத்தது. “கிளியே, என்னை ஏன் அழைத்தாய்? உனக்கு என்ன உதவி வேண்டும்?” என்றது வனதேவதை. “நான் இரை தேடச் செல்ல வேண்டும்.
நான் வரும்வரை என் முட்டைகளை நீ பாதுகாக்க வேண்டும்” என்று வேண்டுகோள் வைத்தது கிளி. கிளியின் வேண்டுகோளை ஏற்று, தேவதை முட்டையைக் காவல் காத்துக் கொண்டிருந்தது.
இரை தேடிச் சென்ற கிளி மாலைதான் திரும்பி வந்தது. அதுவரை பசியோடு இருந்த தேவதை, “கிளியே, என்ன உணவு கொண்டு வந்தி்ருக்கிறாய், எனக்கும் பசிக்கிறது” என்றது. மிகவும் சுவையுள்ள மாம்பழத்தை எடுத்து, “இது அதிசய மாம்பழம். இது சாப்பிட்டாலும் தீர்ந்து போகாது.
நீ பசிக்கிற போதெல்லாம் கை நீட்டி ‘மாம்பழமே வா’ என்று அழைத்தால் அது வந்துவிடும். உன் உறவினர்களும் இந்த அதிசய மாம்பழத்தை உண்டு பசியைப் போக்கிக் கொள்ளலாம்” என்றது.
“இந்த அதிசயப் பழத்தை நீ ஏன் வைத்துக் கொள்ளவில்லை?” “நாங்கள் உழைத்துதான் உண்ண வேண்டும் என்பதால் வைத்துக்கொள்ளவில்லை” என்றது கிளி.
“நல்ல சிந்தனை” என்று சொல்லிவிட்டு, பொன் நிறத்தில் மின்னிய அந்த மாம்பழத்தை வாங்கிக்கொண்டது தேவதை. பிறகு கிளியின் கூட்டில் தங்க நிறத்தில் ஒரு முட்டையை வைத்தது.
“உன் முட்டையை நீ வரும் வரை பார்த்துக் கொண்டேன். இனி நான் புறப்படலாமா?” என்று கேட்டது தேவதை. “உன் உதவிக்கு மிக்க நன்றி” என்று கூறி தேவதையை வழி அனுப்பி வைத்த கிளி, மீண்டும் முட்டைகள் மீது அமர்ந்து அடைகாக்கத் தொடங்கியது.
சில நாள்களில் “கீச்கீச் கீச்” என ஓடுகளை உடைத்துக் கொண்டு குஞ்சுகள் கத்தத் தொடங்கின. கிளிக்கு மகிழ்ச்சி. குஞ்சுகளைத் தன் இறக்கைகளால் அணைத்துக்கொண்டது. இருள் சூழ்ந்தது. மழைத்துளி அங்கொன்றும் இங்கொன்றுமாக விழுந்தது.
கிளி வான் நோக்கித் தலையைத் தூக்கித் தன் வாயைத் திறந்து, விழும் மழைத்துளியைப் பிடித்து விழுங்கியது. அந்த மழைத்துளி அவ்வளவு சுவையாக இருந்தது. தன் இறக்கைகளை நீக்கி, தன் குஞ்சுகளையும் வாய்திறந்து மழைத்துளியைக் குடிக்கச் செய்தது. முதன் முதலில் மழைத்துளியைக் குடித்த குஞ்சுகள் சிலிர்த்து எழுந்தன. இறக்கைகள் வேகமாக முளைத்தன.
தேவதை வைத்த முட்டையிலிருந்து வெளிவந்த குஞ்சு வேகமாகப் பறக்கத் தொடங்கியது. மரத்தின் உயரே சென்று பழுக்காமல் இருந்த இரண்டு காய்களையும் கொத்தியது. உடனே அந்தக் காய்கள் பொன் நிறத்தில் மாறின. இந்தக் குஞ்சின் இறக்கைகளும் தங்கநிறத்தில் மாறிவிட்டன.
தங்க இறக்கை முளைத்த குஞ்சு தங்க இறக்கைக் கிளியாக மாறியது. எல்லாப் பறவைகளை விடவும் வேகமாகவும் உயரமாகவும் பறந்தது. இந்தத் தங்க இறக்கைக் கிளி கொத்திய எல்லாக் காய்களும் பொன் நிறப் பழங்களாக மாறி, உலக உயிர்களின் பசியைப் போக்கின. அப்போதிலிருந்து சோழபுரம் வருகிற எந்தப் பறவையும் பசியோடு சென்றதில்லை!